Published : 19 Dec 2014 08:32 PM
Last Updated : 19 Dec 2014 08:32 PM

விராட் கோலியாக இருந்திருந்தால் ஆட்டத்தை நழுவ விட்டிருக்க மாட்டார்: ஸ்டூவர்ட் மெகில்

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 247/6 என்ற நிலையிலிருந்து இந்தியா ஆட்டத்தை நழுவ விட்டது. விராட் கோலி தலைமையில் இப்படி நடந்திருக்காது என்று தான் கருதுவதாக ஆஸ்திரேலிய முன்னாள் லெக் ஸ்பின்னர் ஸ்டூவர்ட் மெகில் கூறியுள்ளார்.

ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்ஃபோ விவாதம் ஒன்றில் அவரும் அஜித் அகார்க்கரும் தினசரி ஆட்டத்தை அலசி வருகின்றனர், 3ஆம் நாள் பற்றிய விவாதத்தில் ஸ்டூவர்ட் மெகில் தோனியின் கேப்டன்சி பற்றி பேசியதாவது:

விராட் கோலியாக இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கியிருப்பார், பவுலர்களை அழைத்துப் பேசியிருப்பார், ஆட்டத்தை அவ்வளவு எளிதில் நழுவ விட்டிருக்க மாட்டார் என்று நான் கருதுகிறேன். மாறாக தோனி மிக அமைதியான தாக்கம் செலுத்துபவர், ஒரு கட்டத்தில் பவுலர்கள் தங்களது உத்திகளை செயல்படுத்த அவர் கொஞ்சம் கூடுதலாகவே அனுமதித்து விட்டார் என்று எனக்கு தோன்றுகிறது. ஜான்சன் களமிறங்கியவுடன் நாம் பவுன்சர்களை வீசுவோம் என்று தோனி கூறியிருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.

ஏனெனில் அது சிறந்த உத்தியாக இருக்காது என்று நான் கருதுகிறேன். பவுலர்கள் தோனியிடமிருந்து தங்களை துண்டித்துக் கொண்டு செயல்பட்டதாகவே எனக்குப் படுகிறது. தோனி ஒரு கட்டத்தில் போதும் பவுன்சர்கள், லைன் மற்றும் லெந்த்தில் வீசுங்கள் என்று கூறியிருக்க வேண்டும், தோனி எனக்கென்னவோ அவ்வளவாக பவுலர்களிடம் இதனை வலியுறுத்தவில்லை என்றே தோன்றுகிறது” என்று கூறினார்.

இதனை மறுத்த அகார்க்கர், “நான் இதனை சற்று மாறுபட்டு பார்க்கிறேன், தோனிதான் பவுன்சர் ஐடியாவை அளித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் அது வேலை செய்யவில்லை எனும்போது அவர் விரைவாக உத்திகளை மாற்றும் முடிவை எடுப்பதில்லை என்பதே தோனி மீதான விமர்சனமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக அயல்நாடுகளில். இந்தியாவில் ஸ்பின் பிட்ச்களில் விக்கெட்டுகள் கிடைத்து விடுவதால் அவருக்கு இங்கு இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. பிரிஸ்பன் பிட்ச் பவுன்ஸை அவர் நம்பினார். மேலும் ஒரு ஷாட் தவறாக ஆடினால் கேட்ச் பிடிக்க 2 பீல்டர்களை நிறுத்தியிருந்தார்.

ஆனால் அது வேலைக்காகவில்லை எனும் போது அவர் உத்தியை மாற்றுவதில் தாமதம் செய்தார். ஒருநாள் கிரிக்கெட் போலவே ஆட்டம் நம் பக்கம் திரும்பும் என்று அவர் நம்புகிறார். இங்கிலாந்திலும் அப்படித்தான் எது நடக்கிறதோ அதனை அப்படியே விட்டு விட்டார் மாற்ற முயற்சிக்கவில்லை, அல்லது தாமதமாக முடிவு எடுக்கிறார்.” என்று அகார்க்கர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x