Published : 29 Apr 2017 04:45 PM
Last Updated : 29 Apr 2017 04:45 PM

விரட்டல் மன்னன் விராட் கோலி ஒரு முனையில் நின்றும் பெங்களூரு அணி படுதோல்வி

புனேயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே அணியின் 157 ரன்கள் இலக்கை விரட்டிய பெங்களூரு அணி 96 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.

விரட்டல் புகழ் விராட் கோலி தொடக்கத்தில் இறங்கி 9-வது விக்கெட்டாக ஆட்டமிழந்து ஒருமுனையை இறுக்கிப் பிடித்த நிலையிலும் மறுமுனையில் பெங்களூரு பேட்ஸ்மென்கள் வரிசையாக பெவிலியன் திரும்பியதை கோலி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

5-வது ஓவரில் விக்கெட்டுக்குப் பிறகு 8,9,10 ஆகிய ஓவர்களில் வரிசையாக விக்கெட்டுகள். இதுவே தோல்விக்குக் காரணமானது.

கோலிக்கு மிக மோசமான போட்டியாக இது அமைந்தது. தொடக்கத்தில் கேட்சை விட்டார், பிறகு தவறான புரிதலில் ஒரு விதத்தில் கேதர் ஜாதவ் ரன் அவுட்டுக்குக் காரணமானார். பேட்டிங்கில் நின்று ஆடினாலும் அவரால் தனிமனிதனாக வெற்றியை நோக்கி கொண்டு செல்ல முடியவில்லை. 48 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரி ஒரு சிக்ஸ், ஒரு லைஃபுடன் 55 ரன்களையே எடுத்து 9-வது விக்கெட்டாக வீழ்ந்தார்.

டிராவிஸ் ஹெட்டுடன் விராட் கோலி தொடக்கத்தில் களமிறங்கினார். ஆனால் 2-வது ஓவரின் கடைசி பந்தில் டிராவிஸ் ஹெட் உள்ளே வந்த ஃபுல் லெந்த் பந்தை லெக் திசையில் ஷாட் ஆட முயன்றார் பந்து மட்டையில் பட்டுச் சென்றதா என்ற ஐயத்திற்கு இணங்க விக்கெட் கீப்பர் அப்பீல் செய்தார், ஆனால் அதற்கு முன்னதாகவே ஸ்டம்பின் மேல் இருந்த பைல் இல்லை. ஹெட் பவுல்டு ஆனார். ஜெய்தேவ் உனட்கட் முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

விராட் கோலி ஒருசில எட்ஜ்கள் எடுத்தாலும் பவுண்டரிகளை அடித்தார். ஸ்கோர் 32 ரன்களை எட்டிய போது 3 ரன்கள் எடுத்திருந்த டிவில்லியர்ஸ், பெர்குசன் பந்தை கவர் திசையில் அடிக்க அது நேராக மனோஜ் திவாரி கையில் கேட்ச் ஆனது, ஆர்சிபிக்கு அதிர்ச்சி ஆரம்பமானது.

இந்நிலையில்தான் ஜாதவ் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். கோலிக்கும் அவருக்குமான கம்யூனிகேஷனில் குழப்பம் ஏற்பட்டது. பெர்குசன் பந்தை ஜாதவ் பாயிண்டில் அடித்தார் சிங்கிள் எடுக்கலாமா என்று நினைத்த ஜாதவ் வேண்டாம் என்று முடிவெடுத்தார், பாயிண்டில் பீல்ட் செய்த பீல்டர், ரன்னர் முனையில் கோலி கிரீசிற்கு வெளியே இருந்ததால் த்ரோவை அங்கு அடித்தார், அங்கு பவுலர் த்ரோவை சரியாகச் சேகரிக்கத் தவறியாதால் இதனைப் பயன்படுத்தி ஜாதவ் மீண்டும் சிங்கிளுக்காக ஓடி வந்தார், கொஞ்சம் அதிகமாகவே ஓடி வந்துவிட்டார், கோலி ஓடலாமா என்று யோசித்து எதிராக முடிவெடுத்தார். ஜாதவ்வை கோலி பார்க்கவேயில்லை, ஜாதவ்வை கோலி பார்க்கும் போது ஜாதவ் கிட்டத்தட்ட பாதி தூரம் கடந்து விட்டார். த்ரோ கீப்பர் முனைக்குச் செல்ல தோனி ரன் அவுட் செய்தார்.

சச்சின் பேபி 2 ரன்களில் ஸ்மித் கேட்ச் பிடிக்க வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் காலியானார். ஸ்டுவர்ட் பின்னி, பெர்குசன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார். பந்து நன்றாக எம்பியது, இதனால் டாப் எட்ஜ் ஆனது.

பவன் நெகி 3 ரன்களில் இம்ரான் தாஹிர் பந்தை லாங் ஆபில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். மில்ன, பத்ரீ ஆகியோரையும் இம்ரான் தாஹிர் வீழ்த்தினார். 82/8 என்ற நிலையில் கோலி ஒரு முனையில் சிக்சர் ஒன்றை அடித்து அரைசதம் கடந்தார்.

அதன் பிறகு அவரும் நீடிக்கவில்லை 55 ரன்களில் டீப் கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் 84/9 என்ற நிலையில் கடைசியில் சாஹல் 4 ரன்களுடனும் ஸ்ரீநாத் அரவிந்த் 8 ரன்களுடனும் நாட் அவுட்டாக இருந்தனர், ஆர்சிபி அணி 96/9 என்று படு தோல்வியடைந்தது, இந்த நிலையிலிருந்து பிளே ஆப் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. பெர்குசன் 18 ரன் இல்லாத பந்துகளை வீசினார், இந்த சீசனில் ஒரு பவுலர் வீசும் அதிக டாட்பால்கள் இதுவே.

புனே அணியில் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பெர்குசன் 4 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிசிக்கனம் காட்டினார். உனட்கட், கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக லாக்கி பெர்குசன் தேர்வு செய்யப்பட்டார்.

புனே அணி 157 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்

புனேயில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கட்டாய வெற்றியில் ஆடிவரும் ஆர்சிபி அணிக்கு எதிராக புனே அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

கோலி விட்ட கேட்ச்:

புனே அணியில் ராகுல் திரிபாதி என்ற தொடக்க வீரர் அருமையான பார்மில் இருந்து வருகிறார், நடப்பு ஐபிஎல் தொடரில் சக வீரர் ரஹானேயைக் காட்டிலுமே ராகுல் திரிபாதி நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். மேலும் அதிரடியாகவும் ஆடி வருகிறார் திரிபாதி. இந்நிலையில் நியூஸிலாந்து அதிவேகப்பந்து வீச்சாளர் மில்ன இன்னிங்ஸின் 3-வது ஓவரை வீச வந்தார். ஏற்கெனவே மில்னவை ராகுல் திரிபாதி 2 அருமையான பவுண்டரிகளை அடித்து 11 ரன்களுக்கு உயர்ந்த போது, மில்ன வீசிய பந்தை மேலேறி வந்து ஆக்ரோஷம் காட்டினார் திரிபாதி, ஆனால் பந்து ஷார்ட் பிட்ச் ஆனதோடு உள்ளே வந்தது, திரிபாதி புல் ஷாட் ஆடினார், பந்து நினைத்தபடி மாட்டவில்லை மிட் ஆனில் கோலியின் கைக்குச் சென்ற எளிதான கேட்சை கோலி நழுவ விட்டார்.

பாசிட்டிவ் மன நிலை, ஆக்ரோஷ கிரிக்கெட், அனைவரும் பொறுப்புடன் ஆட வேண்டும் என்று கோலி அடிக்கடி கூறுவதுண்டு, ஆனால் தோல்விகளினால் அவரது கவனம் சிதறியுள்ள நிலையில் மிட் ஆனில் ராகுல் திரிபாதிக்கு விட்ட கேட்ச் இன்றைய ஆட்டத்தையே மாற்றி விட வாய்ப்புண்டு.

தொடக்கத்தில் ரஹானே சோபிக்கவில்லை 8 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து அவர் பத்ரீ பந்தில் மில்னவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார்.

பிறகு திரிபாதி சில ஷாட்களை ஆடத் தொடங்கினார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அருமையாக ஆடி வந்த நிலையில் பவன் நெகி பந்தில் வெளியேறினார். இவரும் ஸ்மித்தும் இணைந்து 5 ஓவர்களில் 40 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

ஸ்மித் தன் பங்கிற்கு 32 பந்துகள் ஆடி 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்தார். பின்னி பந்தை நகர்ந்து கொண்டு விளாச நினைத்த போது ஷாட் சரியாக ச் சிக்காமல் லாங் லெக்கில் மில்னவிடம் கேட்ச் கொடுத்தார், அவர் ஏறக்குறைய கேட்சை நழுவ விட்டிருப்பார், ஆனால் கடைசியில் பிடித்து விட்டார்.

108/3 என்ற நிலையில் இன்று தோனிக்கு முன்னால் களமிறங்கிய மனோஜ் திவாரி 35 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்தும் தோனி 17 பந்துகளில் 1 பவுண்டரி ஒரு சிக்சரையும் விளாசி 21 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். தோனி ஸ்ரீநாத் அரவிந்த் பந்தை நேராக அடித்த சிக்ஸ் சைட் ஸ்கிரீனைத் தாக்கியது, சக்தி வாய்ந்த முரட்டு அடியாகும் அது. கடைசி 6 ஓவர்களில் 49 ரன்களே வந்தது. இதனால் புனே அணி 20 ஓவர்களில் 157/3 என்று முடிந்தது.

ஆர்சிபி அணியில் இன்று கெய்ல், ஸ்டோக்ஸ் இல்லை. நெகி 4 ஓவர்களில் 18 ரன்களையே கொடுத்து பார்மில் உள்ள ராகுல் திரிபாதியை வீழ்த்தி சிக்கனம் காட்டினார். பின்னி, பத்ரீ தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இன்னும் 4 போட்டிகள் ஆட வேண்டிய நிலையில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்ததாகவே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x