Published : 24 Jul 2014 10:04 PM
Last Updated : 24 Jul 2014 10:04 PM

விக்கெட் கீப்பிங்கில் தோனி தடுமாறுகிறார்: சையத் கிர்மானி விமர்சனம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் தோனியின் விக்கெட் கீப்பிங் தடுமாற்றமாக இருக்கிறது. தன்னம்பிக்கையுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

சையத் கிர்மானி 1976 முதல் 1986 வரை இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று நிபுணர்களால் பாராட்டப்பட்டவர். இவர் 88 டெஸ்ட்களில் விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். 160 கேட்ச்கள், 38 ஸ்டம்பிங்குகளுக்குச் சொந்தக்காரர் கிர்மானி. 1983 உலகக் கோப்பை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஃபவுட் பேக்கஸுக்கு இவர் பிடித்த கேட்ச் அசாத்தியமானது. பல பிளாஷ் ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார் கிர்மானி.

ஈஎஸ்பின் - கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் பேசிய சையத் கிர்மானி தோனியின் விக்கெட் கீப்பிங் உத்தியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

”கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் தனிப்பட்ட வீரர் ஒருவரின் ஃபார்ம் உச்சத்திற்குச் செல்லும், தோனியும் அந்தக் கட்டத்தில்தான் இருக்கிறார், ஆனால் விக்கெட் கீப்பிங் சமீபகாலங்களாக சிறப்பாக இல்லை.

ஆனால் ஃபார்ம் வந்துவிடும் கொஞ்சம் இடைவெளி, ஓய்வு கொடுத்து ஆடினால் மீண்டும் விக்கெட் கீப்பிங் திறமையைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

தோனி வேகப்பந்து வீச்சாளர்கள் பந்திற்கு கீப்பிங் செய்யும் உத்தி சரியாக இல்லை, பந்தை வாங்கும் விதத்தில் கோளாறுகள் உள்ளன. பந்தைத் தோளுக்கு மேல், இடுப்புக்கு மேல் வாங்கும்போது அவரது கைகள் இருக்கும் நிலை முற்றிலும் தவறாக உள்ளது. அதாவது தோள் மற்றும் இடுப்புக்கு மேல் வரும் பந்தைப் பிடிக்கும்போது தோனியின் விரல்கள் பந்தை நோக்கி நீட்டியவாறு உள்ளது, இது கேட்ச்களை விடவே வழிவகுக்கும். ஆனால் அவர் அந்தக் கடினமான உத்தியை ஓரளவுக்கு சிறப்பாகக் கையாள்கிறார்.

அதேபோல் ஃபீல்டரிடமிருந்து த்ரோவை வாங்கும்போது ஸ்டம்ப்பிற்கு முன்னால் நின்று வாங்கி பின்பக்கமாக அடிக்கிறார். ஸ்டம்பிற்கு அருகில் பைல்களுக்கு மேல் கையை வைத்துக் காத்திருக்க வேண்டும். நிறைய போட்டிகளில் அவர் ஸ்டம்பிற்கு முன்னால் நின்று பந்தை வாங்கி வாய்ப்புகளை தவற விட்டதை நான் பார்த்திருக்கிறேன். இது சரியான உத்தி அல்ல.

கேரி பாலன்ஸிற்கு ஸ்டூவர்ட் பின்னி பந்தில் தோனி விட்ட கேட்ச் குழப்பத்தில் விளைந்தது. தவான் பிடிப்பார் என்று இவர் விட்டுவிட்டார். வலது புறம் ஒரு பந்து இவ்வாறு செல்லும்போது நாம் விக்கெட் கீப்பரை குறை கூறலாம் ஆனால் இடது புறம் செல்லும்போது அவரை பெரிய அளவுக்குக் குறை கூற முடியாது.

ஆனாலும் முன்னேற்றம் தேவை, இப்போதெல்லாம் வீடியோ தொழில்நுட்ப வசதி உள்ளது, தான் விக்கெட் கீப்பிங்கில் எந்த விதமான தவறுகளைச் செய்கிறோம் என்பதை பார்த்துத் திருத்திக் கொள்ளலாம், பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள், உதவியாளர்கள் இருக்கிறார்கள், இவ்வளவு வசதிகள் இருக்கும் போது சிறிய தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்ய வாய்ப்பில்லை.

ஜடேஜாவுக்கு பின்னால் நின்றது ஒரு சாதுரியமான உத்திதான், பின்னால் நிற்கும்போது பேட்ஸ்மென்கள் அதனைப் பயன்படுத்தி மேலேறி வந்து ஷாட்களை ஆடி தவறு செய்து கேட்ச் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்று தோனி கருதியிருக்கலாம்

எப்படி யோசிக்கிறோமோ அப்படியே செல்வது சிறந்ததுதான் ஏனெனில் அதுவே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும், இப்போதுள்ள வசதிகளை தோனி பயன்படுத்திக் கொள்ளவேண்டும்”

இவ்வாறு கூறினார் கிர்மானி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x