Published : 22 May 2015 04:54 PM
Last Updated : 22 May 2015 04:54 PM

லார்ட்ஸ் டெஸ்ட்: 30/4-லிருந்து 389 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அபாரம்

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம், நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 389 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நேற்று 354/7 என்ற நிலையில் இன்று காலை தொடங்கிய இங்கிலாந்து மொயீன் அலி (58), பிராட் (3), மற்றும் ஆண்டர்சன் (11) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூஸிலாந்து தரப்பில் அதிவேகப் பந்து வீச்சாளர் ஹென்றி 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னதாக நேற்று பிரெண்டன் மெக்கல்லத்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து சவுதீ, போல்ட், ஹென்றியின் அற்புதமான டெஸ்ட் மேட்ச் ஸ்விங் பந்து வீச்சுக்கு முதல் 4 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்தது.

புதிய தொடக்க வீரர் லித் 7 ரன்களுக்கு சவுதீயின் அபார பந்து ஒன்று இவரது மட்டை விளிம்பைத் தடவிச் செல்ல விக்கெட் கீப்பர் வாட்லிங் கேட்ச் பிடிக்க ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

கேரி பாலன்ஸ் 1 ரன்னில் போல்ட் பந்தை டிரைவ் ஆடி 3-வது ஸ்லிப்பில் சவுதீயின் அபாரமான கேட்சிற்கு வெளியேறினார். அலிஸ்டர் குக் 36 பந்துகளைச் சந்தித்த வேதனைக்குப் பிறகு 16 ரன்களில் ஹென்றி வீசிய சற்றே வேகம் கூடிய லெக் ஸ்டம்ப் பவுன்சரை எட்ஜ் செய்து வெளியேறினார்.

ஆனால், பெல்லுக்கு ஹென்றி வீசியது உண்மையில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவது, அதாவது விளையாட முடியாத ஒரு பந்து, உலகின் தலை சிறந்த வீரர்களும் இந்தப் பந்தில் ஆட்டமிழக்காமல் இருந்தால் அதிர்ஷ்டம்தான்.

ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி சற்றே நின்று தாமதமாகி வேகத்தில் பெல் மட்டையை கடந்து ஆஃப் ஸ்டம்பை பெயர்த்தது. 30/4 என்ற நிலையில் ஜோ ரூட், ஸ்டோக்ஸ் இணைந்து சில ஆக்ரோஷமான பந்து வீச்சுக்கு இடையில், ஸ்டோக்ஸின் அதிரடி எதிர்த்தாக்குதல் மூலம் 5-வது விக்கெட்டுக்காக 161 ரன்களை விரைவு கதியில் சேர்த்தனர்.

ஸ்டோக்ஸ், இவர் நியூஸிலாந்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 94 பந்துகளில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து ஆஃப் ஸ்பின்னர் கிரெய்க் பந்தை ஆடாமல் விட பவுல்டு ஆனார்.

அதன் பிறகு ரூட், பட்லர் இணைந்து மேலும் 60 ரன்களை கூட்டினர். ஜோ ரூட் மிகவும் ஆதிக்கம் செலுத்தினார். அதிகம் தடவவில்லை, உறுதியான ஆட்டம் அவரை 11 பவுண்டரிகளுடன் 98 ரன்களுக்குக் கொண்டு சென்றது. நிச்சயம் அருமையான டெஸ்ட் சதத்தை வேண்டும் ஒரு இன்னிங்ஸ் ஆனால் அவர் வைடு பாலை துரத்தி எட்ஜ் செய்து சதத்தை கோட்டை விட்டார்.

அதன் பிறகு பட்லர் 67 ரன்களையும் மொயீன் அலி 58 ரன்களையும் எடுக்க நடுக்கள வீரர்களின் பங்களிப்பினால் 30/4-இலிருந்து ஓரளவுக்கு சவாலான 389 ரன்களை எட்டியது இங்கிலாந்து.

தற்போது நியூஸிலாந்து தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் மற்றும் லாதம் விளையாடி வருகின்றனர். ஆண்டர்சன், பிராட் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x