Published : 27 Aug 2014 07:28 PM
Last Updated : 27 Aug 2014 07:28 PM

ரெய்னா அதிரடி சதம்; தோனி, ரோகித் சர்மா அரைசதம்: இந்தியா 304 ரன்கள் குவிப்பு

கார்டிஃபில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் குக் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். முதல் 2 ஓவர்களில் ரன்கள் எடுக்க முடியவில்லை. பிறகு ரோகித் சர்மா முதல் பவுண்டரி அடிக்க தவன் அதன் பிறகு 2வது பவுண்டரியை அடித்தார்.

ஆனாலும் கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் திறமையாக வீச இந்திய தொடக்க வீரர்கள் எதிர்பார்த்த துவக்கத்தை கொடுக்க முடியவில்லை. ஷிகர் தவன் ஒருநாள் போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டியவர் ஆனால் அவர் கால்கள் நகர மறுத்தது.

ஒருவழியாக 2 பவுண்டரிகளுடன் அவர் 22 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த போது வோக்ஸ் வீசிய ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை தவன் தொட்டார் கீப்பரிடம் கேட்ச் ஆனது.

அதே ஓவரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கோலி இறங்கி 2 பந்துகளைத் தடுத்தாடினார். ஆக்ரோஷமாக ஆட திடீர் முடிவெடுத்து அடுத்த பந்தை அவர் தேவையில்லாமல் மேலேறி வந்து அடித்தார். ஆனால் மிட் ஆஃபில் குக் கையில் கேட்ச் பரிசாக அளிக்கப்பட்டது.

ரஹானே, ரோகித் சர்மா மீட்பு:

ரஹானே, ரோகித் சர்மா தோள்களில் மீட்கும் பொறுப்பு இறங்கியது. ஆட்டத்தின் 11வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீச ஒரு பந்தை சுழற்று சுழற்றினார் பந்து பவுண்டரிக்குப் பறந்தது. அதே ஓவரில் கவர், மிட் ஆஃபிற்கு இடையே மேலும் ஒரு அபாரமான பவுண்டரியை அடித்தார் ரோகித். ரஹானே ஸ்டோக்ஸ் பந்தை மிட் ஆனுக்கு பவுண்டரி அடித்து தன் இருப்பை கவனிக்கச் செய்தார்.

அதன் பிறகு ஸ்டோக்ஸ் வீசிய லெந்த் பந்தை 15வது ஓவரில் ரோகித் சர்மா ஃப்ரீ ஹிட் ஷாட்டை ஸ்கொயர் லெக்கில் சிக்சர் அடித்தார். பிறகு ரஹானே ஒரு எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரி அடித்து, அடுத்து ஒரு சிங்கிள் எடுக்க இருவரும் இணைந்து 49 பந்துகளில் அரைசதக் கூட்டணி கண்டனர்.

இருவரும் இணைந்து ஸ்கோரை 107 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது 47 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த ரஹானே டிரெட்வெல் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். அவர் டிரெட்வெல் பந்தில் பீட் ஆகி கால்களை உள்ளே கொண்டு வரும் முன் ஸ்டம்ப்டு ஆனதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

ரெய்னா களமிறங்கினார். ரோகித் சர்மா ஸ்டோக்ஸ் பந்தை திருப்பி விட்டு ஒரு ரன் எடுத்து 82 பந்துகளில் அரைசதம் கண்டார். இவரது இந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆனால் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆஃப் ஸ்பின்னர் டிரெட்வெல் பந்தை தேவையில்லாமல் மேலேறி வந்து விளையாடி மிட் ஆஃபில் கேட்ச் ஆனார்.

ரெய்னாவின் சதமும்; தோனியுடன் சேர்ந்து எடுத்த 144 ரன்களும்:

29.2 ஓவர்களில் 132/4 என்ற நிலையில் ரெய்னாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். ரோகித் அவுட் ஆகும் போது ரெய்னா 15 ரன்களில் இருந்தார். அதன் பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துகளில் 3 பவுண்டரி அடித்து ஒரு பெரிய இன்னிங்ஸிற்குத் தயார் என்று காண்பித்தார்.

இன்னிங்ஸின் 38வது ஓவரில் வோக்ஸ் வீச, முதல் பந்தை நேராக சிக்சருக்குத் தூக்கினார் ரெய்னா. பிறகு அதே ஓவரில் 4வது பந்தை லாங் லெக் திசையில் 2வது சிக்சருக்குத் தூக்கினார். 6வது பந்தை மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாச, அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டது.

அதிலிருந்து ஆரம்பித்ததுதான் இங்கிலாந்தால் ரெய்னாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 39வது ஓவரில் 14 ரன்கள் வந்தது. 40வது ஓவரி ஜேம்ஸ் ஆண்டர்சன் வீச வர 3 அற்புதமான பவுண்டரிகளை அடித்தார் ரெய்னா. அவர் சரேலென 57 பந்துகளில் 76 ரன்களுக்குச் சென்றார். பவர் பிளேயில் தோனி, ரெய்னா ஜோடி 62 ரன்களை விளாசியது இதுதான் திருப்பு முனையாக அமைந்தது.

40 ஓவர்களில் 218 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இருந்த இந்தியா கடைசி 10 ஓவர்களில் 83 ரன்கள் விளாசியது.

ரெய்னா 74 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்து சரியாக 100 ரன்களில் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். துணைக் கண்டத்திற்கு வெளியே ரெய்னாவின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும் இது.

கேப்டன் தோனி அபாரமாக விளையாடி 52 ரன்களை 6 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் எடுத்து வோக்ஸ் வீசிய கூக்ளியில் பவுல்டு ஆக, இந்தியாவின் ரன் விகிதம் சற்றே சரிவு கண்டது. ரவீந்திர ஜடேஜாவுக்கு பந்து மட்டையில் சிக்கவில்லை. அஸ்வின் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க இந்தியா 304 ரன்களை எட்டியது.

இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டர்சன் கொடுத்த 57 ரன்களில் ரெய்னா அடித்த 6 பவுண்டரிகள் அடங்கும்.

இலக்கைத் துரத்த இங்கிலாந்து அணி இனிமேல் களமிறங்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x