Published : 22 May 2015 06:51 PM
Last Updated : 22 May 2015 06:51 PM

ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா வரிசையில் விராட் கோலியை வைக்கும் மைக்கேல் ஹோல்டிங்

மேற்கிந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங், சில பேட்ஸ்மென்களுக்கு பந்து வீசுவது குறித்து கூறும் போது ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா, வரிசையில் விராட் கோலியை வைத்து பேசினார்.

ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு ஹோல்டிங் அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறினார். அதாவது ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ உலகின் தலை சிறந்த ஒருநாள் வீரராக விவ் ரிச்சர்ட்ஸை கூறியுள்ளது, அவருக்கு பவுலிங் வீசுவது பற்றிய கேள்விக்கு ஹோல்டிங் கூறும் போது, “வெவ்வேறு பவுலர்கள் விவ் ரிச்சர்ட்ஸுக்கு எதிராக வெவ்வேறு திட்டங்களுடன் களமிறங்குவர்.

என்னைப் பொறுத்தவரை அவர் போன்ற எந்த ஒரு சிறந்த வீரருக்கும் எந்தவித திட்டமிடுதலும் பயன்படாது. ரிச்சர்ட்ஸ், டிவில்லியர்ஸ், விராட் கோலி, லாரா, சச்சின் போன்ற வீரர்களின் பேட்டிங் பற்றி யோசிக்கையில், நாம் நமது திசை மற்றும் அளவில் கச்சிதமாக இருப்பது அவசியம். இவர்களுக்கு சுலபத்தில் எதையும் போட்டுக் கொடுக்கக் கூடாது. ஒரு நல்ல பந்து இவர்களை வீழ்த்தும் என்ற நம்பிக்கையுடன் வீச வேண்டும்.

இவர்களைப் போன்ற வீரர்கள் களமிறங்கியவுடன் தவறுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே அப்போதே வீழ்த்திவிட வேண்டும், இல்லையெனில் மிகவும் கடினமாகப் போய்விடும்.

ரிச்சர்ட்ஸுக்கு பந்து வீசியது பற்றி...

ரிச்சர்ட்ஸுக்கு அதிகமாக வலைப்பயிற்சியில் வீசியதில்லை. விவ் ரிச்சர்ட்ஸ் மூடுண்ட வலை அமைப்பில் பயிற்சி செய்ய பயப்படுவார். திறந்த மைதானத்தில் அவருக்கு எவ்வளவு வேகமாகவும், எவ்வளவு பவுன்சர்களையும் வீசலாம், ஆனால் வலையில் ஒரு பவுன்சர் வீசினால் அவ்வளவுதான் அவர் பயிற்சியிலிருந்து வெளிநடப்பு செய்து விடுவார்.

ஆனால் உள்நாட்டு போட்டிகளில் வீசியிருக்கிறேன், அதில் அவரும் எனக்கு எதிராக சிறப்பாக ஆடியுள்ளார். நானும அவரைச் சில முறை வீழ்த்தியுள்ளேன்.

வீழ்த்த கடினமான பேட்ஸ்மென்கள் பற்றி...

நிறைய பேட்ஸ்மென்கள் உள்ளனர். அவர்களை எளிதில் நான் வீழ்த்திவிட்டதாக ஒருநாளும் கூற மாட்டேன். அவர்களை ஒருவேளை நான் வீழ்த்திவிட்டால் ‘பரவாயில்லை இன்று நன்றாக வீசினோம்’ என்ற திருப்தி கிடைக்கும் அவ்வளவே.

சுனில் கவாஸ்கர், கிரகாம் கூச், சாப்பல் சகோதரர்கள், ஜாகீர் அப்பாஸ், மாஜித் கான், ஜாவேத் மியாண்டட், மார்டின் குரோவ் என்று சிலரைக் குறிப்பிடமுடியும். இவர்கள் விக்கெட்டை நான் வீழ்த்தினால் சரி இன்று நாம் ஓரளவுக்கு சாதித்துள்ளோம் என்ற மனநிறைவு ஏற்படும்.

எனது 12 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் தோற்றதில்லை. ஆஸ்திரேலியா, பாகிஸ்தானிடம் டெஸ்ட் போட்டிகளை இழந்துள்ளோம். எனவே பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அந்தக் காலக்கட்டத்தில் கடினமான அணிகள்.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார் மைக்கேல் ஹோல்டிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x