Published : 31 Jul 2014 05:56 PM
Last Updated : 31 Jul 2014 05:56 PM

மொயீன் அலி சுழலில் சுருண்டது இந்தியா: இங்கிலாந்து அபார வெற்றி

சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தன் 2வது இன்னிங்சில் 178 ரன்களுக்குச் சுருண்டது. இங்கிலாந்து 266 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடரை சமன் செய்தது இங்கிலாந்து.

112/4 என்று களமிறங்கிய இந்தியா உணவு இடைவேளைக்கு முன்னரே மீதி விக்கெட்டுகளை இழந்து 66.4 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொயீன் அலி என்ற பகுதி நேர ஆஃப் ஸ்பின்னர் 67 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஜிங்க்ய ரஹானே ஒரு முனையில் 52 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்ததே இந்தியாவுக்கு ஒரே ஆறுதல்.

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா இங்கிலாந்தை பவுன்ஸ் செய்து வீழ்த்த ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சூரர்கள் என்று கருதப்பட்ட இந்திய அணி மொயீன் அலியின் மென்மையான ஆஃப் ஸ்பின் பந்து வீச்சில் அவரிடம் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தோற்றுள்ளது.

இன்று களமிறங்கியவுடன் ரோகித் சர்மா முதலில் ஆண்டர்சன் வீசிய வெளியே சென்ற பந்தைத் தேவையில்லாமல் தொட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மிக மோசமான ஷாட். முதல் இன்னிங்ஸிலும் பொறுப்பற்ற ஷாட்டினால் அவுட் ஆனார் ரோகித் சர்மா.

தோனி அடுத்ததாக ஆண்டர்சன் வீசிய பந்தை மிகவும் தடுமாற்றத்துடன் ஆட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு பட்லர் கையில் தஞ்சமடைந்தது.

ரஹானே, ஜடேஜா ஜோடி இணைந்து 32 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை 152 ரன்களுக்கு உயர்த்திய போது, மொயீன் அலி வீச வந்தார். ஜடேஜா 15 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி வீசிய பந்தை டிரைவ் ஆட சற்று கூடுதலாக முன்னே வர தானே யார்க் செய்து கொண்டு பவுல்டு ஆனார்.

அதே ஓவரின் 5வது பந்தில் புவனேஷ் குமார், மொயீன் அலி வீசிய பந்தை முன்னால் காலை நீட்டி தடுத்தாட முயன்றார் பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆகி மட்டையின் விளிம்பில் பட்டு பின்னால் ஆண்டர்சனிடம் கேட்ச் ஆனது.

பிறகு மொகமது ஷமியையும் ரன் எடுக்கும் முன்னரே பவுல்டு செய்தார். பங்கஜ் சிங், மொயீன் அலியை 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அவரையும் பவுல்டு செய்தார் மொயீன் அலி. இந்தியா 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபத் தோல்வியை அடைந்தது.

மொயீன் அலி மொத்தம் 8 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் கைப்பற்றினார். 10 டெஸ்ட் போட்டிகள் வெற்றியைக் காணாத இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்து மகிழ்வூட்டிய பெருமை இந்திய அணியைச் சாரும்.

மொயீன் அலி முதல் இன்னிங்ஸில் ரஹானே, ரோகித் சர்மாவை வீழ்த்தினார். 2வது இன்னிங்ஸில் புஜாரா, கோலி, ஜடேஜா, புவனேஷ் குமார், ஷமி, பங்கஜ் சிங்ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் இனிமேல் இதுபோன்று விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியுமா என்பது சந்தேகமாக இருந்தாலும், இந்த ஒரு டெஸ்ட் போட்டியை அவர் மறக்கமுடியாதவாறு இந்திய பேட்டிங் அவருக்கு அமைந்தது.

முரளி விஜய் அனாவசியமாக ரன் அவுட் ஆனதிலிருந்து சரிவு தொடங்கியது, ஷிகர் தவன் அதன் பிறகு தவறை உணர்ந்து ஆடியிருக்க வேண்டும் ஆனால் ஜோ ரூட் என்ற மற்றொரு பகுதிநேர வீச்சாளரின் மென்மையான ஆஃப் ஸ்பின்னிற்கு எட்ஜ் செய்து அவுட் ஆனார். அந்த நிலையிலிருந்து ஆண்டர்சன், மொயீன் அலி ஆதிக்கம்.

பவுன்ஸ் செய்து இந்தியா கடந்த டெஸ்ட்டில் வெற்றி பெற ஸ்பின் செய்து இங்கிலாந்து இந்தப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியிருப்பது சிறந்த ஐரனி. அதைவிடவும் சிறந்த நகைமுரண், அஸ்வின் என்ற ஆஃப் ஸ்பின்னரை உட்கார வைத்து விட்டு இங்கிலாந்தின் பகுதி நேர ஆஃப் ஸ்பின்னரிடம் சொதப்பி இந்தியா தோல்வி தழுவியதே.

ஆண்டர்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x