Last Updated : 27 Nov, 2014 07:27 PM

 

Published : 27 Nov 2014 07:27 PM
Last Updated : 27 Nov 2014 07:27 PM

முதல் டெஸ்ட் போட்டி பற்றி கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்க வேண்டும்: சுனில் கவாஸ்கர்

பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மனநிலையில் வீரர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்கிறார் சுனில் கவாஸ்கர்.

“விளையாடுவது என்பது கடினம். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, ஆனாலும் எந்த வீரரும் விளையாடும் எண்ணத்தில் இருக்க மாட்டார்கள். ஒருவருக்கும் விளையாடுவதற்கான மனநிலை இருக்காது.

நியூசவுத்வேல்ஸ்-தெற்கு ஆஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது. ஆகவே முதல் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதா வேண்டாமா என்பது பற்றி வாரியங்கள் கலந்து முடிவெடுக்க வேண்டும்.

பிலிப் ஹியூஸ் மரணம் ஆழமான துயரங்களை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு விளையாட்டு வீரர் பற்றியும் இத்தகைய செய்தியை எவரும் கேட்க விரும்ப மாட்டார்கள்.

அதுவும் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தும் இது நடந்துள்ளது. இது ஒரு விபத்து, ஹியூஸ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

தலைக்கவசம் மறைக்காத பகுதியை பந்து தாக்கியுள்ளது தெளிவு. அது தமனியைத் தாக்க மூளைக்குள் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதுதான் அவரை மரணத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. பொதுவாக இப்படி நடக்காது.

எந்த ஒரு வீரரும் மற்ற வீரர் இவ்வாறு அடிபட்டு சாய்வதை விரும்ப மாட்டார்கள். பவுன்சர் வீசிய சான் அபாட் நிச்சயம் மனம் உடைந்திருப்பார். அவருக்கு இது மிகவும் கடினமான நேரம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா அவருக்கு கவுன்சலிங் வழங்குவதன் மூலம் நல்ல காரியத்தை செய்துள்ளது. அது மட்டுமல்ல நியூசவுத்வேல்ஸ் அணி வீரர்கள் அனைவருக்குமே கவுன்சலிங் தேவைப்படும்.

ஹெல்மெட் தயாரிப்பாளர்களை குறைகூறி பயனில்லை. இதற்கு முன்னர் ஹெல்மெட்டில் பந்துகள் பட்ட தருணங்கள் உண்டு, ஆனால் யாருக்கும் சீரியஸ் காயங்கள் ஏற்பட்டதில்லை. ஆனாலும் ஹெல்மெட் தயாரிப்பாளர்கள் முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டு மேலும் பாதுகாப்பான கவசங்களுக்கு திட்டமிடுவர் என்பது உறுதி.

கிரிக்கெட் என்பது அபாயகரமான ஆட்டம் என்று யோசிக்கவே முடியாது, அப்படி யோசித்தால் பெவிலியனில் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

காயத்தைக் கண்டு அஞ்சியிருந்தால் நான் வேகப்பந்து வீச்சாளர்களையே விளையாடியிருக்க முடியாது. அபாயம் இருப்பதாக நான் உணர்ந்ததில்லை. என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்ற ஒரு ஆட்டத்தை விளையாடுவதை நான் பெரும் மகிழ்ச்சியாக கருதினேன். ஆனால் கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும் என்பதும் எனக்கு தெரியும்” என்றார் சுனில் கவாஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x