Published : 23 Jun 2017 08:28 AM
Last Updated : 23 Jun 2017 08:28 AM

போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒருநாள் போட்டியில் மோதல்: ரிஷப் பந்த், குல்தீவ் யாதவ் களமிறங்க வாய்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் மோதுகிறது.

முரண்பாடாக, கரீபியன் தீவுகளில் இருந்து தனது கிரிக் கெட் பயிற்சியாளர் பணியை கடந்த ஆண்டு அனில் கும்ப்ளே தொடங்கியிருந்தார். ஆனால் தற்போது அவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த தொடரை சந்திக்கிறது இந்திய அணி.

பயிற்சியாளராக பணியாற்றிய அனில் கும்ப்ளேவுடன் கருத்து வேறுபாடு கொண்டதால், சாம்பி யன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெளிப்படுத்திய திறனின் மதிப்பாய்வை காட்டிலும் தலைப்பு செய்தியாக விராட் கோலியே இடம் பெற்றார். இந்த நிலையில் பலவீனமான மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 1-1 என சமன் செய்திருந்தது. தற்போது நடைபெற உள்ள 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி 20 ஆட்டம் கொண்ட தொடரில் இந்திய அணி பெரிய அளவிலான வெற்றியை எதிர்நோக்கும்.

அப்படி அமையும்பட்சத்தில் அது அனில் கும்ப்ளே விவ காரத்தை திசை திருப்பவும், விராட் கோலி மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகளை மறக்கடிக் கப்படவே உதவக் கூடும் என கருதப்படுகிறது. பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரிடம் இருந்து எந்தவித உள்ளீடுகளும், எதிர்ப்பும் இருக்காது என்பதால் அணி தேர்வில் விராட் கோலி முழு சுதந்திரமாக செயல்படக் கூடும்.

தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி, தற்போதைய இந்திய அணியின் தரத்துக்கு எந்த வகையிலும் ஈடானது கிடையாது. இதனால் இந்திய அணி இந்த தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம் பிடித்துள்ள 13 வீரர்களும் ஒட்டுமொத்தமாக இதுவரை 213 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி உள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக கேப்டன் ஜேசன் ஹோல்டர் மட்டும் 58 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

அதேவேளையில் யுவராஜ் சிங் (301), மகேந்திரசிங் தோனி (291), விராட் கோலி (184) ஆகியோர் ஒட்டுமொத்தமாக 776 ஆட்டங்களில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். இதில் இருந்தே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் திறனையும், அனுபவத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

இந்திய அணிக்கு இந்த தொடரானது, ஏற்கெனவே கடந்த தொடர்களில் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்களின் திறனை சோதிக்க சிறந்த தளமாக இருக்கும். இந்த தொடரில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

பும்ரா இடத்தில் மொகமது ஷமி களமிறக்கப்படக்கூடும். ஷமி கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை விளையாடவில்லை. இதனால் இந்த தொடரை அவர் திறம்பட பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்.

ரோஹித் சர்மா இடத்தை அஜிங்க்ய ரஹானே அல்லது இளம் வீரரான ரிஷப் பந்த் நிரப்பக் கூடும். ரிஷப் பந்த் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. சமீபத்தில் ஆப்கானிஸ் தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னரான ரஷித்கான் பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தடுமாறியது.

இதனால் இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது. அவர் களமிறங்கும் பட்சத்தில் அஸ்வின் அல்லது ஜடேஜா நீக்கப்படக்கூடும்.

அணிகள் விவரம்

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திரசிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

மேற்கிந்தியத் தீவுகள் :

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திரா பிஷூ, ஜோனாதன் கார்டர், ராஸ்டன் சேஸ், மிகுவல் கம்மின்ஸ், ஷாய் ஹோப், அல்ஸார்ரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் மொகமது, ஆஸ்லே நர்ஷ், கெய்ரன் பொவல், ரோவ்மான் பொவல், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

இடம்: போர்ட் ஆப் ஸ்பெயின்
நேரம்: மாலை 6.30
நேரடி ஒளிபரப்பு: சோனி லைவ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x