Published : 23 Mar 2017 10:22 AM
Last Updated : 23 Mar 2017 10:22 AM

புதிய சம்பள ஒப்பந்தம்: முரளி விஜய், புஜாரா, ஜடேஜாவுக்கு ரூ.2 கோடி சம்பளம்

இந்திய கிரிக்கெட் வீரர்களை ஆண்டுதோறும் ஒப்பந்தம் செய்யும் நடைமுறையை பிசிசிஐ கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் புதிய ஒப்பந்த பட்டியலை நேற்று பிசிசிஐ வெளி யிட்டது. இந்த ஒப்பந்த காலமானது கடந்த 2016 அக்டோபர் 1-ம் தேதி முதல் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை உள்ளடக்கிய தாகும்.

புதிய ஒப்பந்த பட்டியலில் முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏ கிரேடு உயர்வு பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஏற்கெனவே விராட் கோலி, தோனி, அஸ்வின், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.2 கோடி சம்பளம் வழங்கப்படும்.

இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம் ஆகும். ஜடேஜா கடந்த முறை சி கிரேடில் தான் இடம் பெற்றிருந்தார். அப்போது அவருக்கு ரூ.25 லட்சமே சம்பளமாக வழங்கப்பட்டது. அதேபோல் புஜாரா, முரளி விஜய் ஆகியோர் கடந்த முறை பி கிரேடில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். அப்போது அவர்கள் சம்பளமாக ரூ.50 லட்சம் பெற்றிருந்தனர்.

பி கிரேடில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், விருத்திமான் சாஹா, ஜஸ்பிரித் பும்ரா, யுவராஜ் சிங் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்படும். இதுவும் கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம் ஆகும்.

சி கிரேடில் ஷிகர் தவண், அம்பாட்டி ராயுடு, அமித் மிஸ்ரா, மணீஷ் பாண்டே, அக் ஷர் படேல், கருண் நாயர், ஹர்திக் பாண்டியா, ஆசிஷ் நெஹ்ரா, கேதார் ஜாதவ், யுவேந்திரா சாஹல், பார்த்தீவ் படேல், ஜெயந்த் யாதவ், மன்தீப் சிங், தவால் குல்கர்னி, ஷர்துல் தாக்குர், ரிஷப் பந்த் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.50 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

வீரர்களுக்கு ஒரு டெஸ்ட் போட் டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 ஆட்டத்துக்கு ரூ.3 லட்சம் என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. இந்த ஊதியம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.

19 வயதுக்குட்பட்டோர் அணி யின் பயிற்சியாளராக பணியாற்றி மறைந்த ராஜேஷ் சவந்த்தின் சேவையை அங்கிகரீக்கும் விதமாக அவரது குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

புதிய ஒப்பந்த பட்டியலில் கடந்த முறை இடம் பெற்ற சுரேஷ் ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி, மோகித் சர்மா, வருண் ஆரோன், கரண் சர்மா, ஹர்பஜன்சிங், அரவிந்த் ஆகியோர் இடம் பெறவில்லை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x