Last Updated : 23 Oct, 2014 04:35 PM

 

Published : 23 Oct 2014 04:35 PM
Last Updated : 23 Oct 2014 04:35 PM

பிரிஸ்பன் ஹீட் அணிக்கு விளையாடுகிறார் பிளிண்டாஃப்

ஐபிஎல் கிரிக்கெட் போல் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் பிரிஸ்பன் ஹீட் அணிக்காக இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் விளையாடுகிறார்.

2009-ஆம் ஆண்டு தொடர்ச்சியான காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிளிண்டாஃப் ஓய்வு பெற்றார்.

தனது இந்த ஒப்பந்தம் பற்றி பிளிண்டாஃப் கூறும்போது, “ஆஸ்திரேலியாவுக்கு, குறிப்பாக பிரிஸ்பனுக்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். பிரிஸ்பன் மைதானம் எனக்கு பிடித்தமான மைதானங்களில் ஒன்று.

பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா என்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தப் போட்டித் தொடரில் என்ன சாதிக்க வேண்டும் என்பது பற்றி பேசினோம். பிரிஸ்பன் ஹீட் அணியில் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். டேனியல் வெட்டோரியுடன் மீண்டும் ஆடுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இங்கிலாந்து உள்நாட்டு டி20 கிரிக்கெட்டில் லங்காஷயர் அணிக்காக அவர் சமீபத்தில் விளையாடினார். இறுதிப் போட்டியில் கிட்டத்தட்ட லங்காஷயர் அணியை வெற்றிபெறச் செய்திருப்பார் பிளிண்டாஃப்.

இருந்தாலும் அனைத்துப் போட்டிகளிளும் பிரிஸ்பன் ஹீட் அணியில் பிளிண்டாப் ஆட மாட்டார். பிபிஎல் தொடரின் இரண்டாவது பாதியிலேயே அவர் பிரிஸ்பன் ஹீட் அணிக்கு விளையாடவுள்ளார்.

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு கெவின் பீட்டர்சன் விளையாடுகிறார். சிட்னி தண்டர் அணிக்கு ஜாக் காலிஸ் விளையாடுகிறார்.

79 டெஸ்ட் போட்டிகளிலும் 141 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய பிளிண்டாஃப் 2005-ஆம் ஆண்டு ஐசிசி-யின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 2005-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்வதில் பிளிண்டாஃபின் ரிவர்ஸ் ஸ்விங் முக்கியப் பங்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x