Published : 19 Dec 2014 03:20 PM
Last Updated : 19 Dec 2014 03:20 PM

பிரிஸ்பன் டெஸ்ட்: மோசமான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு பின்னடைவு

முதல் ஒருமணி நேர அபாரப் பந்து வீச்சு திடீரென மாயமாக, 3ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் மிக முக்கியமான 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் மிக மோசமாக வீசியதால் ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்ஸில் 505 ரன்களைக் குவித்து 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தன் 2-வது இன்னிங்ஸில் முரளி விஜய் விக்கெட்டை இழந்து 71 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவன் 26 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு காண்பித்த அபார துல்லியம், லைன் மற்றும் லெந்த் ஜான்சன் இறங்கியவுடன் எங்கு சென்றது என்று தெரியவில்லை. பவுண்டரிகளே வரவில்லை. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் 3 பவுண்டரிகள்தான் அடிக்கப்பட்டது. 2 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. ஆஸ்திரேலியா மீது திடீரென ஒரு நெருக்கடி சுமத்தப்பட்டது. ஆனால் அவையனைத்தும் அடுத்த சில நிமிடங்களில் மறைந்து விடும் என்று யாரேனும் நினைக்க முடியுமா? ஆனால் அதுதான் இன்று நடந்தது.

221/4 என்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4 மணி நேர ஆட்டத்தில் சுமார் 284 ரன்களை குவித்தது என்றால் பந்து வீச்சின் தரம் பற்றி கூற வேண்டிய அவசியமில்லை.

65 ரன்களுடன் இருந்த ஸ்டீவ் ஸ்மித் 133 ரன்களை விளாசினார். மிட்செல் ஜான்சன் (88), மிட்செல் ஸ்டார்க் (52), லயன் (23), ஹேசில்வுட் (32) ஆகியோரை வீழ்த்த இந்திய பவுலர்கள் கண்ணீர் விட்டனர் என்பதோடு இவர்கள் பந்துவீச்சை சற்றும் மதிக்கவில்லை. 109 ஓவர்களிலேயே 505 ரன்கள் என்றால் ஓவருக்கு 4.60 என்ற விகிதத்தில் வெளுத்துக் கட்டும் அளவுக்கு பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. நல்ல பந்துகளுக்கு விக்கெட்டுகள் விழவே செய்தன.

இன்று காலை முதல் 1 மணி நேர ஆட்டமே இந்திய பந்து வீச்சுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமைந்தது.

மிட்செல் மார்ஷ், இசாந்த் வீசிய இன்ஸ்விங்கரை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். பிராட் ஹேடினுக்கு வருண் ஆரோன் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஆக்ரோஷமான பவுன்சரை வீச அவரால் அதனை ஷாட் லெக்கில் புஜாராவிடம் கேட்ச் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

247/6 என்று அருமையான நிலையிலிருந்து இந்திய பந்துவீச்சு ஷாட் பிட்ச் பவுலிங் என்பதாக தடம் மாறியது. ஜான்சன், ஸ்மித் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 26 ஓவர்களில் 148 ரன்களை விளாசியது ஆட்டத்தின் போக்கை இந்தியக் கைகளிலிருந்து பிடுங்கிச் சென்றது. முதல் 6 பேட்ஸ்மென்களின் பங்களிப்பை விட கடைசி 4 பேட்ஸ்மென்களின் பங்களிப்பு அதிகமாகிவிட்டது.

மிட்செல் ஜான்சனுக்கு ஏகப்பட்ட ஷாட் பிட்ச் பந்துகளை வீசினர். இசாந்த் சர்மா அவரது மித வேகத்திற்கு ஷாட் பிட்ச் உத்தியை கையாண்டிருக்க கூடாது. பவுண்டரிகள் ஆறாக ஓடத் தொடங்கின. மிட்செல் ஜான்சன் அடித்து நொறுக்கத் தொடங்கினார். உணவு இடைவேளையின் போது 83 பந்துகளில் 104 ரன்களை இவர்கள் 7-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு தோனி கொஞ்சம் நெருக்கியதால் ரன் விகிதம் சற்றே மட்டுப்பட்டது. ஆனாலும் மிட்செல் ஜான்சன் 93 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 88 ரன்கள் எடுத்து இசாந்த் சர்மா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்மித் 191 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 133 ரன்கள் எடுத்து இசாந்த் பந்தை வாங்கி ஸ்டம்பிற்குள் விட்டுக் கொண்டார். 398/8 என்ற நிலையில் கூட இந்தியா எடுத்த ஸ்கோருக்குள் அல்லது சற்று கூடுதலாக ஆஸ்திரேலியாவை சுருட்டியிருக்கலாம். ஆனால் லைன் மற்றும் லெந்த் காணாமல் போனது இதனால் மேலும் 107 ரன்களை கடைசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்தியா விட்டுக் கொடுத்தது.

டெய்ல் எண்டர்களுக்கு ரன்களை வாரி வழங்குவதில் இந்திய பவுலர்கள் வள்ளலாக திகழ்கின்றனர். 8,9,10-ஆம் நிலை பேட்ஸ்மென்களுக்கு இந்தியா சராசரியாக 84 ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் டெய்ல் எண்டர்களுக்கு எதிரான மிக மிக மோசமான பந்துவீச்சாகும்.

வர்ணனையில் இயன் ஹீலி கூறுகிறார், ஜான்சனுக்கு நேராக வரும் ஃபுல் பந்துகளை ஆட வராது என்று ஆனால் இந்திய அணி அவ்வாறான பந்துகளை அவருக்கு வீசவில்லை என்றார்.

கடைசி 4 விக்கெட்டுகள் சேர்ந்து 48.3 ஓவர்களில் 258 ரன்கள்; முதல் 6 விக்கெட்டுகள் சேர்ந்து 61.1 ஓவர்களில் 247 ரன்கள். இந்த ஒரு புள்ளிவிவரம் போதும் மற்றபடி இன்றைய ஆட்டத்தை வர்ணிப்பது வெறும் விவரமாக மட்டுமே தெரியும்.

நாளை முழுதும் இந்தியா விளையாடுவதோடு டெஸ்ட் போட்டியை டிராவாக்க இந்தியா முதலில் முயற்சி செய்யும் என்றே கருதலாம். அல்லது ஆஸ்திரேலியா வெற்றி பெற 270 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டால் இந்தியா ஒழுக்கமாக, ஆக்ரோஷமாக லைன் மற்றும் லெந்த்தில் வீசி நெருக்கடி கொடுத்தால் ஒரு அரிய வெற்றியைக் கூட பெறலாம்.

எனவே அனைத்தும் முடிந்து விட்டது என்று கூறுவதற்கில்லை. இந்தியாவுக்கும் ஒரு புறவயமான வாய்ப்பு உள்ளது என்றே கூறவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x