Published : 22 Aug 2014 06:59 PM
Last Updated : 22 Aug 2014 06:59 PM

பயிற்சி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

லார்ட்ஸில் நடைபெற்ற பயிற்சி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிடில்செக்ஸ் அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோலி, ராயுடு அரைசதங்களுடன் சுமாரான 230 ரன்களை எடுத்து 44.2 ஓவர்களில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய மிடில்செக்ஸ் அணி 39.5 ஓவர்களில் 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

25ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

மிடில் செக்ஸ் பேட்ஸ்மென்கள் கபின்ஸ், பால் ஸ்டெர்லிங், அதிரடி வீரர் இயான் மோர்கன் ஆகியோரது கேட்ச்களை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பிடித்தார். இது தவிர ஜே.வி.ஹேரிஸ் என்ற வீரரை கரண் சர்மா பந்தில் சாம்சன் ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தினார்.

கேப்டன் மலன் என்பவரை மொகமது ஷமி பவுல்டு செய்தார். மிக முக்கிய விக்கெட்டான இயான் மோர்கனை மோகித் சர்மா 16 ரன்களில் அவுட் செய்தார்.

16.4 ஓவர்களில் மிடில்செக்ஸ் அணி 67/5 என்று சரிவு கண்டது. அதன் பிறகு சிம்சன், பல்பர்னி ஆகியோர் நின்று நிதானமாக ஸ்கோரை 101 ரன்களுக்கு உயர்த்தினர். 34 ரன்களுக்கு இவர்கள் எடுத்துக் கொண்ட ஓவர்கள் 11.

ஆட்டத்தின் எந்த நேரத்திலும் மிடில்செக்ஸ் அணி இந்திய அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்கவில்லை. குமார், ஷமி, மோகித் சர்மா, உமேஷ் யாதவ், தவல் குல்கர்னி, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்ற, கரண் சர்மா 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஜடேஜா பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சோபிக்கவில்லை. பேட்டிங்கில் 7 ரன்களில் வெளியேற, பவுலிங்கில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை

முன்னதாக, இந்தியா முதலில் பேட் செய்து 44.2 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸில் வென்ற மிடில்செக்ஸ் அணி இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது. ரோகித் சர்மா 8 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டீவன் ஃபின்னிடம் ஆட்டமிழந்தார்.

ஷிகர் தவன் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து சாந்து பந்தில் ஆட்டமிழந்தார். ரஹானே 14 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 13.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது பார்மைத் தேடிக் கொண்டிருக்கும் விராட் கோலி, அம்பாத்தி ராயுடு இணைந்தனர். இருவரும் இணைந்து 17 ஓவர்களில் 104 ரன்களைச் சேர்த்து அணியை மீட்டனர். விராட் கோலி 75 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 72 ரன்கள் எடுத்து ஆர்.எச்.படேல் என்பவரிடம் அவுட் ஆனார்.

அம்பாத்தி ராயுடு 72 ரன்களில் ரிட்டையர்ட் ஆனார். 82 பந்துகளைச் சந்தித்த ராயுடு 8 பவுண்டரிகளை அடித்தார்.

ஜடேஜா, சஞ்சு சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி என்று அனைவரும் சொதப்பினர். ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின்(18) அவுட் ஆன அடுத்த பந்தில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.

ரெய்னா கடைசியில் இறங்கி 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். 156/3 என்ற நிலையிலிருந்து 74 ரன்களில் அடுத்த 7 விக்கெட்டுகளை 14.2 ஓவர்களில் இழந்த இந்திய அணி 44.2 ஓவர்களில் 230 ரன்களை மட்டுமே எடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x