Published : 24 Jul 2014 11:46 AM
Last Updated : 24 Jul 2014 11:46 AM

பதக்க வேட்டை இன்று ஆரம்பம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கியுள்ள 20-வது காமன்வெல்த் போட்டியில் இன்று முதல் பதக்க வேட்டைகள் ஆரம்பமாகின்றன.

பாட்மிண்டன், சைக்கிளிங் டிராக், ஜிம்னாஸ்டிக் ரித்மிக், ஹாக்கி, ஜூடோ, லான் பௌல்ஸ், நெட்பால், ஸ்குவாஷ், நீச்சல், டிரையத்லான், டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு வகையான போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.

31 பதக்க போட்டிகள்

இதில் சைக்கிளிங் டிராக் பிரிவில் 5 பதக்க போட்டிகள், ஜிம்னாஸ்டிக் ரித்மிக் பிரிவில் ஒரு பதக்க போட்டி, ஜூடோவில் 15 பதக்க போட்டிகள், நீச்சலில் 6 பதக்க போட்டிகள், டிரையத்லான், பளுதூக்குதல் ஆகியவற்றில் தலா 2 பதக்க போட்டிகள் என மொத்தம் 31 பதக்க போட்டிகள் வியாழக்கிழமை நடைபெறுகின்றன.

பாட்மிண்டன் போட்டியைப் பொறுத்த வரையில் கலப்பு அணி பிரிவில் களமிறங்கும் இந்திய அணி, இன்று நடைபெறும் ஆட்டத்தில் கானாவை சந்திக்கிறது. கடந்த முறை 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இந்த முறை சாய்னா நெவால் காயம் காரணமாக இடம்பெறவில்லை. எனினும் இந்திய அணி சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி பிரிவில் இந்தியா, கானா தவிர கென்யா, உகாண்டா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியா முதலிடத்தைப் பிடிப்பதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. மொத்தம் 6 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணியும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளில் சிறந்த இரு அணிகளும் காலிறுதிக்கு முன்னேறும்.

ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் காஷ்யப், சிந்து ஆகியோரும், மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடியும் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-கனடா மோதல்

இன்று நடைபெறும் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி, கனடாவை சந்திக்கிறது. இந்த இரு அணிகளுக்குமே இது மிக முக்கியமான போட்டியாகும். இவ்விரு அணிகளும் கடைசியாக 2012-ல் மோதின. அதில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. காமன்வெல்த் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை இரு முறை (2002, 2010) மோதியுள்ளன. அந்த இரண்டிலுமே இந்தியாதான் வெற்றி கண்டுள்ளது.

சர்வதேச தரவரிசையில் இந்தியா 13-வது இடத்திலும், கனடா 22-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுமே முதல் போட்டியை வெற்றியோடு தொடங்க முயற்சிக்கும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்தியாவுக்காக 15 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் முன்கள வீராங்கனை ரிதுஷா, அறிமுகப் போட்டியிலிருந்தே அசத்தி வருகிறார். ரிதுஷா, சகவீராங்கனைகளான ராணி, பூனம் ராணி இருவருக்கும் மிகப்பெரிய பலமாக இருக்கிறார். இந்திய நேரப்படி இந்தப் போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தியாவின் முதல் பதக்கம்

இந்தியாவுக்கு முதல் பதக்கம் பளுதூக்குதல் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூடோவில் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு, ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவு ஆகியவற்றில் போட்டி நடைபெறுகிறது. இந்த இரண்டிலுமே இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவிலிருந்து சஞ்ஜிதா, மீரா பாய் சானு ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவருமே பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. தற்போதைய குத்துச்சண்டை பயிற்சியாளர் குஞ்சராணி தேவி, வீராங்கனையாக இருந்த காலத்தில் இருந்தே இந்தப் பிரிவில் இந்திய அணி கோலோச்சி வருகிறது. கடந்த முறை இதே பிரிவில் இந்தியா ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் வென்றது.

ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவைப் பொறுத்தவரையில் நடப்பு சாம்பியனான மலேசியாவின் அமிருல் ஹமிஸான் இப்ராஹிம் காயம் காரணமாக இந்த முறை பங்கேற்கவில்லை. அதனால் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் சார்பில் சுகன் தேய், கணேஷ் மாலி ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவருமே பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

பளுதூக்குதலில் கடந்த முறை 14 பதக்கங்களை வென்ற நைஜீரியா, இந்த முறை அந்த அளவுக்கு ஜொலிக்க வாய்ப்பில்லை. நிதிப் பற்றாக்குறை காரணமாக அந்த அணியில் உள்ளவர்களுக்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை.

இன்றைய போட்டிகள் (இந்திய நேரப்படி)

பாட்மிண்டன் - பிற்பகல் 1.30 மணி முதல்

சைக்கிளிங் - பிற்பகல் 3.30 மணி முதல்

ஜிம்னாஸ்டிக் ரித்மிக் - மாலை 4.30 மணி முதல்

ஹாக்கி - பிற்பகல் 1.30 மணி முதல்

ஜூடோ - பிற்பகல் 2.30 மணி முதல்

லான் பௌல்ஸ் - பிற்பகல் 1.15 மணி முதல்

நெட்பால் - மாலை 4 மணி முதல்

ஸ்குவாஷ் - மாலை 3.30 மணி முதல்

நீச்சல் - பிற்பகல் 3 மணி முதல்

டிரையத்லான் - பிற்பகல் 3.30 மணி முதல்

டேபிள் டென்னிஸ் - பிற்பகல் 2 மணி முதல்

பளுதூக்குதல் - பிற்பகல் 2 மணி முதல்

நேரடி ஒளிபரப்பு

டென் ஸ்போர்ட்ஸ், டென் ஆக்ஸன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x