Last Updated : 26 Feb, 2017 10:47 AM

 

Published : 26 Feb 2017 10:47 AM
Last Updated : 26 Feb 2017 10:47 AM

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: 159 ரன்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 159 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி நேற்று வெலிங்டன் நகரில் நடந்தது.

இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 85 ரன்களைக் குவித்தார். அவருக்கு துணையாக டி காக் 68 ரன்களையும், டு பிளஸ்ஸி 36 ரன்களையும், பார்னல் 35 ரன்களையும் சேர்த்தனர். நியூஸிலாந்து அணியில் கிராண்ட் ஹோம் 2 விக்கெட்களையும், டிம் சவுத்தி, போல்ட், பெர்கசன், சான்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றிபெற 272 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த நியூஸிலாந்து அணி, தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சில் நிலை குலைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரவுனி 2 ரன்களிலும், லாதம் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆக, அவர்களைத் தொடர்ந்து ஆடவந்த மற்ற பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும் பினர்.

அந்த அணியின் வீரரான கிராண்ட் ஹோம் மட்டும் பொறுமையாக விளையாடி 34 ரன்களை சேர்த்தார். இதைத்தொடர்ந்து 32.2 ஓவர்களில் 112 ரன்களில் சுருண்ட நியூஸிலாந்து அணி, 159 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டியில் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்களையும், ரபாடா, பார்னல், பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்றைய போட்டியில் 85 ரன்களை அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்து ஏ.பி.டிவில்லியர்ஸ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 9 ஆயிரம் ரன்களைக் கடக்கும் 2-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவருக்கு முன்னதாக ஜாக் காலிஸ் இந்த சாதனையை படைத்துள்ளார். உலக அளவில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த 18-வது வீரர் இவர். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்த்தவர்கள் பட்டியலில் 18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x