Published : 21 Jun 2017 09:37 AM
Last Updated : 21 Jun 2017 09:37 AM

நான் பயிற்சியாளராகத் தொடர்வதை கேப்டன் விரும்பவில்லை: அனில் கும்ப்ளே

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த அனில் கும்ப்ளே, விராட் கோலிக்கும் தனக்கும் இடையே இருந்த பிரச்சினைகளைத் தீர்க்க பிசிசிஐ முயன்றதாகவும் ஆனால் அது பயனளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திங்களன்றுதான் முதல் முறையாக பிச்சிஐ தன்னிடம், அணியின் கேப்டனுக்கு தன்னுடைய பயிற்சி முறை குறித்து விமர்சனங்கள் இருப்பதாகவும், பயிற்சியாளராகத் தான் தொடர்ந்து நீடிப்பது குறித்து விராட் கோலிக்கு சிக்கல் இருப்பதாகவும் தன்னிடம் தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட கடிதம் வருமாறு:

கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டி என் மீது நம்பிக்கை வைத்து என்னைத் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்கக் கோரியதை கவுரவமாகக் கருதுகிறேன். கடந்த ஓராண்டில் அணி செய்த சாதனைகளின் பெருமைகள் கேப்டன், ஒட்டுமொத்த அணி, துணைப்பயிற்சியாளர்கள் ஆகியோரையே சாரும்.

இந்தத் தகவலை நான் பதிவிடும் வேளையில், திங்களன்றுதான் முதல் முறையாக கேப்டனுக்கு எனது பயிற்சி வழிமுறைகள் மீதும், தொடர்ந்து நான் பயிற்சியாளராக நீடிப்பது குறித்தும் மாற்றுக் கருத்துகள் இருந்து வந்துள்ளதை பிசிசிஐ எனக்கு தெரிவித்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. காரணம் நான் எப்போதும் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோருக்கிடையேயான வரம்புகளை மதிப்பவன். பிசிசிஐ எனக்கும் கேப்டனுக்கும் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்தது, ஆனால் கூட்டணி ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. எனவே நான் வெளியேறுவதுதான் சிறந்த முடிவு என்று கருதினேன்.

தொழில்நேர்த்தி, கட்டுக்கோப்பு, கடமை உணர்வு, நேர்மை, பாராட்டு தெரிவிக்கும் திறமைகள், பலதரப்பட்ட பார்வைகள் ஆகிய முக்கிய தனிக்கூறுகளை நான் அணியிடத்தில் செலுத்தியிருக்கிறேன். ஒரு கூட்டணி திறம்பட செயல்பட வேண்டுமெனில் இவை மதிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. பயிற்சியாளரின் பங்கு என்பதை ‘கண்ணாடியை காட்டுவது’ போல்தான் கருதுகிறேன், இதன் மூலம்தான் அணியின் நலனுக்காக சுய முன்னேற்றத்தை செலுத்த முடியும்.

ஆகவே இத்தகைய ‘மாற்றுக் கருத்துகள்’ அளித்த வெளிச்சத்தின் படி சிஏசி, மற்றும் பிசிசிஐ இந்தப் பொறுப்புக்கு பொருத்தமுடையவர்களை நியமிக்க உதவுமாறு நான் என் பொறுப்பை ஒப்படைப்பதே சிறந்தது என்று நம்புகிறேன்.

நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நான் பணியாற்றியதை பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். பிசிசிஐ, சிஏசி, சிஓஏ ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எண்ணற்ற ரசிகர்கள், இந்திய கிரிகெட்டை பின் தொடரும் எண்ணற்றோர் ஆகியோரது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். என் நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் பாரம்பரியத்தின் நலம் விரும்பியாக நான் எப்போதும் இருப்பேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x