Published : 08 Feb 2016 03:41 PM
Last Updated : 08 Feb 2016 03:41 PM

தோற்றது ஆஸ்திரேலியா: ஒருநாள் தொடரை வென்றது நியூஸிலாந்து

ஹேமில்டனில் நடைபெற்ற 3-வது இறுதி ஒருநாள் போட்டியில் தனது 246 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்த நியூஸிலாந்து ஆஸ்திரேலியாவை 191 ரன்களுக்குச் சுருட்டி ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

டாஸ் வென்று முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்தார் ஸ்மித். நியூஸிலாந்து 45.3 ஓவர்களில் 246 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் ஆஸ்திரேலியா 94/2 என்று நன்றாகவே விரட்டி வந்தது. ஆனால் லெக்ஸ்பின்னர் ஐ.எஸ்.சோதி 19-வது ஓவரில் ஸ்மித் (21), மேக்ஸ்வெல் (0) ஆகியோரை வீழ்த்த ஆஸ்திரேலிய சரிவு தொடங்கி 191 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் தொடரை 2-1 என்று நியூஸிலாந்து கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் 7 ஒருநாள் தொடர்களை வென்ற ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முடிவு கட்டியது.

பிரெண்டன் மெக்கல்லமின் கடைசி ஒருநாள் போட்டியாகும் இது. இந்தத் தொடரை வென்று மெக்கல்லம் ஆஸ்திரேலிய அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மிட்செல் மார்ஷ் அவுட் சர்ச்சை:

மிட்செல் மார்ஷ் 42 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆடி வந்தபோது 34-வது ஓவரில் ஹென்றி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். லேசான முறையீடு மட்டுமே எழுந்தது. பந்து தரையில் பட்டு வந்ததாக நடுவர் நாட் அவுட் என்றார். ஹென்றியும் அடுத்த பந்தை வீச தயாராகிவிட்டார், ஆனால் மைதானத்தின் பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட ரீ-ப்ளேயில் பந்து மட்டையில் பட்டு மார்ஷின் பூட்ஸில் பட்டு மேட் ஹென்றியிடம் கேட்ச் ஆனது தெரியவந்தது.

முதலில் நாட் அவுட் சொன்ன நடுவர், பவுலர் அடுத்த பந்தை வீசத் தயாரான நிலையில் பெரிய திரை ரீ-ப்ளேயை பார்த்து 3-வது நடுவரை அழைத்தது இப்போது சர்ச்சைக்குள்ளானது. இடையே ஆஸ்திரேலிய-நியூஸிலாந்து வீரர்களிடையே சிலபல வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கடைசியில் சரியானதீர்ப்புதான் வெளியானது, ஆனால் பெரிய திரையைப் பார்த்துவிட்டு 3-வது நடுவரை அழைத்தது இப்போது சர்ச்சையாகியுள்ளது.

முன்னதாக உஸ்மான் கவஜா, வார்னர் 5 ஓவர்களில் 39 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கொடுத்தனர். வார்னர் 14 பந்துகளில் 16 ரன்களுடன் எலியட்டிடம் கேட்ச் கொடுத்து ஹென்றியிடம் அவுட் ஆகி வெளியேறினார். இவர் ஆட்டமிழந்தவுடன் ரன் விகிதம் குறைந்தது. ஆனாலும் 11.2 ஓவர்களில் ஸ்கோர் 75 ரன்களை எட்டிய போது 36 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்த உஸ்மான் கவாஜா பிரேஸ்வெல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகுதான் 19-வது ஓவரில் லெக் ஸ்பின்னர் ஐ.எஸ். சோதி, ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தினார். 94/4 என்பதிலிருந்து ஜார்ஜ்பெய்லி (33), மிட்செல் மார்ஷ் (41) ஸ்கோரை 153 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், அப்போது பெய்லி, மேட் ஹென்றியின் பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு ஆட்டமிழந்தார். பிறகு 9 ரன்கள் எடுக்கப்பட்டவுடன் ஸ்கோர் 164 ஆக இருந்த போதுதான் மிட்செல் மார்ஷின் சர்ச்சைக்குரிய அவுட் தீர்ப்பு வந்தது. மேத்யூ வேட் 17 ரன்களில் மில்னவிடம் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 191 ரன்களுக்குச் சுருண்டது.

நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், கோரி ஆண்டர்சன், சோதி, ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நியூஸிலாந்து இன்னிங்ஸ்:

நியூஸிலாந்து பேட் செய்ய அழைக்கப்பட்டவுடன் சரவெடி ஆட்டத்தை தொடங்கினர் மெக்கல்லமும், கப்திலும் 9.3 ஓவர்களில் இருவரும் 84 ரன்களை விளாசினர். ஹேஸ்டிங்ஸின் இன்ஸ்விங்கரை பவுலர் தலைக்கு மேல் நேராக தூக்கி பவுண்டரியுடன் தொடங்கினார் மெக்கல்லம். அடுத்த பந்தே மேலேறி வந்து மிட்விக்கெட்டில் பளார் ஷாட் அடித்து அடுத்த பவுண்டரியை அடித்தார். கப்தில் ஹேஸ்டிங்ஸ் பந்தை காலை ஒதுக்கிக் கொண்டு லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார். போலண்ட் பந்து வீச வந்தவுடன் லாங் ஆஃபில் சிக்ஸருடன் அவரை மெக்கல்லம் வரவேற்றார்.

பிறகு ஹேசில்வுட்டின் ஒரு ஓவரில் கப்தில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்சரையும், ஒரு பவுண்டரியையும் அடித்தார். 8-வது ஓவரில் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் மெக்கல்லமிடம் சரியாகச் சிக்கினார். கவரில் ஒரு பவுண்டரியுடன், நகர்ந்து கொண்டு ஒரு லாங் ஆஃப் சிக்ஸ், பிறகு இறங்கி வந்து ஸ்கொயர் லெக்கில் பிளிக் சிக்ஸ் என்று 16 ரன்களை அந்த ஓவரில் விளாசியதோடு, ஒருநாள் போட்டிகளில் 200-வது சிக்சரை அடித்தார் மெக்கல்லம்.

இப்படியே 27 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 47 ரன்கள் விளாசிய மெக்கல்லம் மிட்செல் மார்ஷ் பந்தை சுழற்றி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது கடைசி ஒருநாள் போட்டியில் 47 ரன்களை தன் பாணியில் விளாசிவிட்டு ஆட்டமிழந்தார் பிரெண்டன் மெக்கல்லம்.

வில்லியம்சன் 18 ரன்களில் போலண்ட் பந்தில் பவுல்டு ஆக 61 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்த கப்தில் லெக்ஸ்பின்னர் ஸாம்பா பந்தில் அவுட் ஆனார். ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்களில் ஹேசில்வுட்டிடம் அவுட் ஆனார். 28.4 ஓவர்களில் 171/4 என்று இருந்தது நியூஸிலாந்து, கோரி ஆண்டர்சனை ஆஸ்திரேலியா கட்டுப்படுத்த அவர் 45 பந்துகளில் 1 சிக்சருடன் 27 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கிராண்ட் எலியட் 62 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். வரிசையாக விக்கெட்டுகள் சரிய கடைசி 7 விக்கெட்டுகளை நியூஸிலாந்து 75 ரன்களுக்கு இழந்தது. 45.3 ஓவர்களில் 246 ரன்களையே எடுத்தது நியூஸிலாந்து. ஹேசில்வுட் அருமையாக வீசி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக ஒரே ஓவரில் ஸ்மித், மேக்ஸ்வெல்லை வீழ்த்திய லெக் ஸ்பின்னர் சோதி தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x