Published : 24 Oct 2016 02:11 PM
Last Updated : 24 Oct 2016 02:11 PM

தோனியின் 9,000 ரன்களும் கவனிக்கத்தக்க புள்ளிவிவரமும்!

மொஹாலியில் நேற்று 4-ம் நிலையில் களமிறங்கிய தோனி, தனது பழைய அதிரடி ஆட்டத்தில் 80 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார், இதில் அவர் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்தார்.

ஒருநாள் போட்டிகளில் தோனி 9,000 ரன்களைக் கடந்தார், இதில் சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.

அதாவது, நேற்று சக்தி வாய்ந்த பல ஷாட்களை ஆடிய தோனி 91 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசி 80 ரன்கள் எடுத்தார்.

இதற்கு முன்பாக குமார் சங்கக்காரா, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்கள் எடுத்ததையடுத்து தோனியும் பட்டியலில் இணைந்தார்.

50 ரன்கள் அல்லது அதற்கும் கூடுதலான சராசரியில் 9,000 ரன்களை எட்டிய முதல் வீரர் ஆனார் தோனி. ஜாக் காலிஸ் 9,000 ரன்களை எடுக்கும்போது 45.68 என்ற சராசரிதான் வைத்திருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களை எடுப்பதில் 6-வது அதிவேக வீரராக உள்ளார் தோனி. 244 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் தோனி.

கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் குறைந்தது 1,000 ரன்களை எடுத்ததில் சங்கக்காரா 9,000 ரன்களில் 1654 ரன்களை விக்கெட் கீப்பர்/கேப்டன் என்ற நிலையில் எடுத்துள்ளார், இதே விக்கெட் கீப்பர்/கேப்டன் நிலையில் தோனி எடுத்த ரன்கள் 6581 ரன்களாகும்.

9,000 ரன்களுக்கு தோனி எதிர்கொண்ட பந்துகள் 10,109 ஆகும். ஆடம் கில்கிறிஸ்ட் 9,000 ரன்களை 9,328 பந்துகளில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 196 சிக்சர்களை அடித்துள்ளார். 9,000 ரன்களில் கிறிஸ் கெய்ல் 229 சிக்சர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருநாள் போட்டிகளில் சச்சி அடித்த அதிகபட்ச சிக்சர் இந்திய சாதனையாக இருந்த 195 சிக்சர்களை கடந்து தோனி தற்போது 196 சிக்சர்களுடன் இந்திய பேட்ஸ்மென்களில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்தவராகத் திகழ்கிறார்.

9,000 ரன்களில் கேப்டனாக தோனி எடுத்த 6581 ரன்கள் அதிகபட்சமாகும். அசாருதின் 9,000 ரன்களை எட்டிய போது கேப்டனாக அவரது ரன்கள் 5,147 என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x