Published : 26 Aug 2014 03:39 PM
Last Updated : 26 Aug 2014 03:39 PM

தோனி இருக்கும் வரை 2வது விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பேயில்லை: பார்த்திவ் படேல்

சவுரவ் கங்குலி தலைமையில் இளம் வயதில் இந்திய அணிக்கு விளையாடிய பார்த்திவ் படேல், தோனி இருக்கும்போது 2வது விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:

சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் அறிமுகமாகி பிறகு அணிக்குள் வருவதும் போவதுமாக இருப்பது பற்றி உங்கள் மனநிலை எவ்வாறு உணர்கிறது?

அணியில் இல்லாதிருக்கும்போது மீண்டும் இந்திய அணியில் நுழையும் உத்வேகம் என்னைச் செலுத்துகிறது. ஆனால் இப்போதைக்கு வெறுப்பாகவே உள்ளது. தொடர்ந்து சிறப்பாக ஆடி முயற்சி செய்து கொண்டிருப்பேன்.

இளம் வயதில் இந்திய அணிக்குள் நுழைந்தது அனுகூலமற்றதாக இருக்கிறதோ?

எனக்கு அப்படித் தோன்றவில்லை. அணியில் தேர்வாகி முதல் 3 அல்லது 4 தொடர்களில் சிறப்பாகவே செயல்பட்டேன். அதன் பிறகு ஓரிரண்டு மோசமான டெஸ்ட் போட்டிகள் அமைந்தது. நான் சர்வதேச கிரிக்கெட்டிற்குத் தயாராக இல்லையெனில் முதல் தொடரிலேயே எனது திறமை அம்பலமாகியிருக்கும். மாறாக எனக்கு இளம் வயதில் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு இப்பவும் வயது 28தான் ஆகிறது.

ஒவ்வொரு முறை இந்திய அணிக்குள் மீண்டும் வந்த பிறகும் உங்கள் இடத்தைத் தக்கவைக்க முடியாமல் போனது ஏன்?

இது தோனியினால் விளைந்தது என்றே கூற வேண்டும். அவர் கீப்பராக செயல்படும் வரை 2வது விக்கெட் கீப்பருக்கு வாய்ப்புகள் கடினம். இது சரிதான், ஏனெனில் அவர் அணிக்காகச் செய்து வருவது மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. 2வது விக்கெட் கீப்பர் என்பது இப்போதைக்குக் கடினமே. ஆனாலும் உத்வேகத்துடன் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன்.

தோனியுடனான உங்கள் உறவு எப்படி? கீப்பிங் குறித்து பொதுவான கருத்துகளைப் பரிமாறிக்கொள்வீர்களா அல்லது போட்டி இருக்குமா?

போட்டி இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். நாங்கள் சந்திக்கும்போது ஓரிரு விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். அவர் அதிகம் பேசமாட்டார். அவருக்குக் கீழ் நான் விளையாடும் போதெல்லாம் என்னைச் சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளார்.

மற்ற கீப்பர்களான விருத்திமான் சாஹா அல்லது தினேஷ் கார்த்திக் பற்றி...

எனக்கு என்னுடைய எதிர்பார்ப்புகளுக்குப் பொருத்தமானவற்றைச் செய்வதுதான் முக்கியம். 2வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு நிறைய போட்டிகள் உள்ளன. இந்த உண்மையை யாரும் மறைக்க முடியாது. அந்த இடத்திற்கு செல்லும் அளவுகோல் மிக அதிகமானது. ஆகவே ஒருவர் அந்த உச்சத்தை எட்ட வேண்டும்.

கீப்பிங்கில் உத்தி ரீதியாக என்ன மாற்றங்களைச் செய்துள்ளீர்கள்?

நான் பயிற்சி எடுத்துக் கொள்ளும் விதங்களில் நிறைய மாற்றியிருக்கிறேன். பயிற்சி அமர்வுகளை இரண்டாகப் பிரித்துக் கொண்டுள்ளேன். ஒரு அமர்வு முழுதும் பேட்டிங் பயிற்சி, மற்றொரு அமர்வு கீப்பிங் பயிற்சி. கீப்பிங் பயிற்சியின் போது ஸ்டம்பிற்கு அருகில் நிற்பது, பக்கவாட்டுப் பகுதிகளில் நகர்ந்து எட்ஜ் கேட்ச்களைப் பிடிப்பது. மேலும் யோகா பயிற்சி செய்து வருகிறேன். பயிற்சியில் நான் எதையும் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை.

நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு தேர்வு ஆகும் போது குஜராத் மாநிலத்திற்கு விளையாடினீர்கள், சிறிய அணியில் ஆடுவதினால் தேசிய அணித் தேர்வுகளில் அனுகூலமற்ற நிலை இருந்து வந்ததா?

குஜராத் அணியின் ஆட்டம் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக உள்ளது. சிறிய அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதில் பெரிய அனுகூலங்களைக் கிடைக்கச் செய்யும். மேலும் நம்மை அது வெளிச்சம்போட்டுக் காட்டும்.

எந்த பெரிய விக்கெட் கீப்பரின் அறிவுரை உங்களுக்கு அதிகம் உதவியது?

நான் அனைவரிடமும் பேசியுள்ளேன், சையத் கிர்மானி தொடங்கி இயன் ஹீலி, ஆடம் கில்கிறிஸ்ட், குமார் சங்கக்காரா, நயன் மோங்கியா, கிரண் மோரே ஆகியோரிடம் பேசியுள்ளேன். விக்கெட் கீப்பிங் என்பதில் 3 விஷயங்கள் அடங்கியுள்ளன: கைகளை இறுக்கமாக வைத்துக் கொள்வது கூடாது. பந்தை தொடர்ந்து கவனித்து சரியான நேரத்தில் நகர்வது அவசியம். இயன் ஹீலி, கிரண் மோரே ஆகியோர் எட்ஜ் கேட்ச்களை எடுக்கும் விதம் பற்றி அளித்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். சங்கக்காராவும் சில பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x