Published : 24 Oct 2016 03:31 PM
Last Updated : 24 Oct 2016 03:31 PM

தொடர்ந்து அதிரடி முறையில் ஆடுவேன்: தோனி உறுதி

மொஹாலி போட்டியில் 4-ம் நிலையில் களமிறங்கிய தோனி அவரது ஆரம்பகால அதிரடி முறைக்கு திரும்பினார். தனது இந்த அணுகுமுறை அணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார் தோனி.

அணிக்குள் அப்போதுதான் நுழைந்தவரை வெற்றிக்கான பினிஷிங் ரோலில் களமிறக்குவது அவர் மீது சுமையை ஏற்றுவதாகும் என்று கருதிய தோனி தானே பினிஷிங் பங்காற்ற களமிறங்கி வந்தார். இந்நிலையில் கடைசியில் இறங்கும் போது தன்னால் “ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய முடியவில்லை” என்று தோனி ஒப்புக் கொண்டார்.

இதனால் நேற்று 4-ம் நிலையில் களமிறங்கினார், இன்னிங்ஸின் ஆரம்பநிலையிலேயே களம் புகுந்தார் தோனி.

தனது இந்த முடிவு பற்றி அவர் கூறும்போது, “அணி நிர்வாகத்துடன் உரையாடிய போது என்ன செய்ய வேண்டும் என்று பேசினோம், அதில் நான் சுதந்திரமாக பேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையும் அடங்கும். 2 விக்கெட்டுகள்தான் விழுந்திருந்தன. அதனால் பாசிட்டிவ் ஆக ஆடுவது முக்கியமென கருதினேன். நான் அவுட் ஆகிக்கூட இருக்கலாம், 4-,ம் நிலையில் இறங்கும் போது இத்தகைய ரிஸ்க்கை நாம் எடுத்தேயாக வேண்டும்.

இவ்வாறு ஆட வேண்டும் என்று நீண்ட நாட்களாக விரும்பினேன். அதுவும் குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அபாரமாக ஆடும்போது, நான் 5 அல்லது 6-ல் களமிறங்கினால் பெரிய பேட்டிங் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த டவுனில் எளிதாக என்னால் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய முடியவில்லை. நமக்குப் பின்னால் ஒரு பேட்ஸ்மென் தான் இருக்கிறார் எனும்போது பெரிய ஷாட்டை ஆடுவதற்கு முன்னால் அது வெற்றியடையுமா என்று 90% உறுதி செய்து கொள்ள வேண்டியுள்ளது.

பின்னால் களமிறங்கும் போது 10-12 ஓவர்களே கிடைக்கும் இதில் நிறைய ரன்களை எடுக்க வேண்டும் என்றே ஆட முடியும். இல்லையெனில் 20-வது ஓவரில் இறங்குகிறோம் என்றால் அப்போது 5 விக்கெட்டுகளை இழந்திருக்கிறோம் என்றால் கூட்டணி சேர்த்து ரன்களைச் சேர்க்குமாறு ஆடவேண்டும். இப்படி நீண்ட நாட்களுக்கு ஆடிவந்தால் ஸ்ட்ரைக் ரொடேட் செய்யும் திறமை போய்விடும்.

பின்னால் களமிறங்குவது ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதாக இருப்பதால் எனது பேட்டிங்கை அது பாதித்தது. 4-ம் நிலையில் இறங்குவது என்பது பெரிய ஷாட்களை யோசிக்காமல் ஆட சுதந்திரம் அளிக்கிறது. இன்னும் இது போன்ற சில இன்னிங்ஸ்களை ஆட வேண்டும். நான் மீண்டும் ரன்களை எடுக்கத் தொடங்கியுள்ளேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பீல்டர்கள் தலைக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்க வேண்டும். அதுதான் என் பேட்டிங்கிற்கு தேவை என்று நினைத்தேன், .இது எனது முதல்நாள், இனி இந்தப் பாணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று நம்புகிறேன்.

நான் 4-ம் நிலையில் வெற்றியடைந்தால் அணிக்கு அது சுதந்திரம் அளிக்கும் ஏனெனில் நான் விரைவில் ரன்களை எடுப்பதால் அணி சுதந்திரமாக உணரும். இந்த இன்னிங்ஸில் கூட நான் சற்றே மந்தமடைந்ததாகவே கருதுகிறேன். நான் பெரிய ஷாட்களை ஆடுவது முக்கியம். மேலும் விராத் கோலியுடன் விளையாட முடிந்தது. நாங்கள் ரன்களை வேகமாக ஓடினோம். எதிரணி பீல்டர்களில் சிறந்தவர்களுக்கு எதிராகக் கூட எங்கள் ஓட்டம் வெற்றியடைந்தது. நடுவில் 100-125 ரன்கள் கூட்டணி அமைத்து விட்டால் பின்னால் வருபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

கேதர் ஜாதவ், விராட் கோலிக்குப் புகழாரம்

ஆச்சரியகரமானது கேதர் ஜாதவ் பந்துவீச்சு. நடு ஓவர்களில் எங்களுக்கு விக்கெட்டுகளை அவர் பெற்றுத் தருகிறார். ஆனால் இறுதி ஓவர்களை நாங்கள் இன்னும் சிறப்பாக வீச வேண்டுமென்று நினைக்கிறேன். விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. டாப் 5 பேரில் ஒருவர் ஒருசில ஓவர்களை வீசுவது உதவும். அதுவும் எதிரணியில் இடது கை பேட்ஸ்மென்கள் இருப்பதால் கேதர் ஜாதவ் ஆஃப்ஸ்பின் உதவிகரமாக அமைந்தது.

விராட் கோலி ஆரம்பம் முதலே இந்திய அணியை வெற்றி பெறச் செய்து வருபவர். அவர் தனது பலங்களை அறிந்தவர். கிரிக்கெட்டில் எது டாப் லெவல் என்று கூறுவது கடினம் ஆனால் இந்தியாவுக்கு கோலி பெருமை சேர்த்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x