Published : 04 Mar 2015 04:28 PM
Last Updated : 04 Mar 2015 04:28 PM

டேவிட் வார்னர் 178 ரன்கள்; ஆப்கன் 142 ஆல் அவுட்: ஆஸ்திரேலியா சாதனை வெற்றி

பெர்த்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் 418 ரன்கள் இமாலய வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிய ஆப்கானிஸ்தான் 142 ரன்களுக்குச் சுருண்டது.

உலகக்கோப்பை வரலாற்றில் 275 ரன்கள் வித்தியாச வெற்றி மிகப்பெரிய வெற்றியாகும். இதே உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய சாதனையை அன்று சமன் செய்தது. தற்போது ஆஸ்திரேலியா இன்று பெற்ற வெற்றி உலகக்கோப்பை போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி.

அதோடு, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 2-வது மிகப்பெரிய வெற்றி என்ற சாதனையையும் ஆஸ்திரேலியா நிகழ்த்தியது.

டேவிட் வார்னரின் 178 ரன்களை ஆப்கனால் எடுக்க முடியவில்லை என்பதோடு வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல் எதிர்கொண்ட மொத்த பந்துகளின் எண்ணிக்கையான 270 பந்துகளைக் கூட ஆப்கன் அணி ஒட்டுமொத்தமும் சந்திக்க முடியாமல் 37.3 ஓவர்கள் அதாவது 225 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் 142 ரன்களுக்கு இழந்து தோல்வி தழுவியது.

ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் ஜான்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆஸ்திரேலியா பவுண்டரிகளில், அதாவது 4 ரன்களாக எடுத்த மொத்த ரன்கள் மட்டும் 144 ரன்கள். ஆப்கான் அணி மொத்தம் 142 ரன்கள்.

ஆஸ்திரேலியா பவுண்டரிகள் சிக்சர்களில் எடுத்த மொத்த ரன்கள் 228 ரன்களாகும். ஆப்கன் அணி இந்த இன்னிங்ஸ் முழுதும் அடித்த பவுண்டரிகள் 6, சிக்சர்கள் 3.

ஆப்கன் அணியின் நவ்ரோஸ் மங்கல் மட்டுமே 35 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 33 ரன்களை அதிகபட்சமாக எடுத்துள்ளார்.

இந்த விவரங்களே இந்த ஆட்டத்தின் தன்மையை உணர்த்துவதாக உள்ளது. ஆட்ட நாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய சாதனையை முறியடித்த ஆஸ்திரேலியா: வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல் விளாசல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 413 ரன்கள் எடுத்து இந்திய அணி வைத்திருந்த சாதனையை ஆஸ்திரேலியா இன்று முறியடித்து ஆப்கன் அணிக்கு எதிராக 417 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது.

பெர்த்தில் இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கன் பந்துவீச்சை புரட்டி எடுத்து 417 ரன்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியது.

2007-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன்களை இந்தியா குவித்தது இதுவரை உலகக்கோப்பை சாதனையாக இருந்தது. இன்று ஆஸ்திரேலியா, ஆப்கன் அணிக்கு எதிராக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்து புதிய உலகக்கோப்பை சாதனையை படைத்தது.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 133 பந்துகளில் 19 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 178 ரன்களை எடுத்தார். அவர் அவுட் ஆகும் போது 38-வது ஓவர் நடந்து கொண்டிருந்தது. ஒருவேளை 50 ஓவர்களை அவர் ஆடியிருந்தால் ரோஹித் சர்மாவின் உலக சாதனையும் பறிபோயிருக்கலாம். அல்லது அவர் ஒரு முச்சதத்தை கூட பார்த்திருக்கலாம்.

ஸ்டீவ் ஸ்மித் 98 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் அதிவேக உலகக்கோப்பை சதத்தை அச்சுறுத்தினார், ஆனால் அவர் 39 பந்துகளில் 6 பவுண்டரி 7 சிக்சர் சகிதம் 88 ரன்களில் அவுட் ஆனார்.

2-வது விக்கெட்டுக்காக வார்னர், ஸ்மித் சேர்த்த 260 ரன்கள் ஆஸ்திரேலிய அணி சாதனையாகும். எந்த ஒரு விக்கெட்டுக்கும் ஆஸ்திரேலிய அணியின் அதிக பட்ச ஜோடி ரன்களாகும் இது.

ஆப்கன் அணியில் தவ்லத் சத்ரான் 10 ஓவர்களில் 101 ரன்களை விட்டுக் கொடுத்தார். அனைத்துப் பவுலர்களுக்கும் ‘சாத்துமுறை’ நடந்தேறியது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் சத்ரான் 10 ஓவர்களில் 89 ரன்களையும், ஹமித் ஹசன் 70 ரன்களையும், மொகமது நபி 84 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.

இந்த சாத்துமுறையிலும் ஜாவேத் அகமதி எப்படி 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார் என்பது புரியவில்லை. இவருக்குத்தான் உண்மையில் ஆட்ட நாயகன் விருது வழங்க வேண்டும்.

அனைத்திலும் கொடுமை டாஸ் வென்ற ஆப்கன், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்ததே. இது ஒன்றுதான் புரியாத புதிராக உள்ளது.

ஆஸ்திரேலியா முதல் 10 ஓவர்களில் 68/1, 20 ஓவர்களில் 121/1, 25 ஓவர்களில் 151/1, 30 ஓவர்களில் 203/1; 35 ஓவர்களில் 248/1; 40 ஓவர்களில் 299/2; 45 ஓவர்களில் 366/3; 50 ஓவர்களில் 417/6.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x