Published : 27 Aug 2014 10:06 PM
Last Updated : 27 Aug 2014 10:06 PM

டிவிலியர்ஸ், டுபிளேசி அதிரடி சதம்: ஆஸ்திரேலியாவின் 327 ரன்களை ஊதியது தென் ஆப்பிரிக்கா

ஜிம்பாவேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா எடுத்த 327 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்காவின் டுபிளேசி மற்றும் டிவிலியர்ஸ் தங்களது அதிரடி சதங்கள் மூலம் ஒன்றுமில்லாமல் செய்து அபார வெற்றியைச் சாதித்தனர்.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது. ஏரோன் பின்ச் சதம் எடுக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 46.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மிக எளிதாக 328 ரன்களை எடுத்து கடினமான வெற்றி இலக்கை ஊதித்தள்ளியது.

டுபிளேசி 98 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 106 ரன்களை விளாசினார். கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் 82 பந்துகளில் சதம் எடுத்து மொத்தமாக 106 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிச்கர்களுடன் 136 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 29 ஓவர்களில் 206 ரன்களை மிகவும் சாதுரியமான அதிரடியில் சேர்த்தனர். டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த டுபிளேசி இன்று தன் முதல் ஒருநாள் சதத்தையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்தார்.

குவிண்டன் டி காக் 19 ரன்களில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். ஆம்லா 24 ரன்கள் எடுத்து கேன் ரிச்சர்ட்சன் பந்தில் அவுட் ஆனார். இருவரும் இணைந்து துவக்க விக்கெட்டுக்காக 7.2 ஓவர்களில் 44 ரன்கள் என்ற வகையில் சுமாரான விரைவுத் துவக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். 9 ஓவர்கள் முடிவில் 51/2 என்ற நிலையில் டுபிளேசியும் கேப்டன் டிவிலியர்ஸும் இணைந்தனர்.

முதலில் நிதானத்தைக் கடைபிடித்து குளிர்பான இடைவேளையின் போது 16 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஸ்கோரை நகர்த்தினர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆஸ்திரேலிய பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தினர். மிட்செல் ஜான்சன், ஸ்டார்க், பாக்னர், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரது பந்து வீச்சுகள் மைதானம் முழுதும் சிதறடிக்கப்பட்டது.

52/2 என்ற நிலையிலிருந்து 35வது ஓவரில் ஸ்கோர் 221/2 என்ற நிலையை எட்டியபோது, மிட்செல் ஜான்சன் பந்தில் அவரிடமே டிவிலியர்ஸ் ஒரு கேட்சைக் கொடுக்க அவர் அதனை தவற விட்டார். அப்போது டிவிலியர்ஸ் 78 ரன்களில் இருந்தார். 2 பந்துகள் கழித்து எட்ஜ் ஒன்று பிராட் ஹேடினின் கைகளில் சிக்காமல் சென்றது. அடுத்த ஓவரில் கேன் ரிச்சர்ட்சன் ஒரு பந்தை வீச அதனை டிவிலியர்ஸ் நேராக பாயிண்ட் திசையில் அடிக்க அந்த எளிதான கேட்சை கேப்டன் பெய்லி தவற விட்டார்.

டுபிளேசி சதம் எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்தை வானில் அடித்து அவுட் ஆகும் போது தென் ஆப்பிரிக்க்காவுக்கு 12 ஓவர்களில் 71 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் டிவிலியர்ஸ், டுமினி (33 நாட் அவுட்) ஆகியோர் அணியை பாதுகாப்பாக 20 பந்துகள் மீதம் வைத்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

நேதன் லயனை அணியில் சேர்த்திருந்தால் ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் போதும் என்று நினைத்து விட்டார் ஆஸி. கேப்டன் ஜார்ஜ் பெய்லி.

முன்னதாக ஆஸ்திரேலியா அணியில் ஏரோன் பின்ச் 116 பந்துகளில் 102 ரன்களை எடுத்தார். அவருடன் பிலிப் ஹியூஸ் (51) சேர்ந்து அரைசதம் கண்டார். கேப்டன் ஜார்ஜ் பெய்லி 66 ரன்கள் எடுத்தார். ஏரோன் பின்ச், பிலிப் ஹியூஸுடன் இணைந்து 92 ரன்களையும், பெய்லியுடன் இணைந்து 114 ரன்களையும் பகிர்ந்து கொண்டனர். கடைசியில் மிட்செல் ஜான்சன் 8 பந்துகளில் 23 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டதில் ஜான்சன் 2 சிக்சர்களை அடித்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் மோர்னி மோர்கெல் 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டேல் ஸ்டெய்ன் 1 விக்கெட்டை 51 ரன்களுக்குக் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே அணிகள் வரும் வெள்ளிக்கிழமை அடுத்த ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x