Published : 25 Apr 2015 03:32 PM
Last Updated : 25 Apr 2015 03:32 PM

டி20 போட்டியிலும் தோல்வி: வங்கதேசத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அஃப்ரீடி

மிர்பூரில் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஒரேயொரு டி20 போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம். இதன் மூலம் வங்கதேசத் தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்தையும் இழந்த பாகிஸ்தான், டெஸ்ட் போட்டிகளிலாவது இழந்ததை மீட்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டாஸ் வென்ற பாக். கேப்டன் ஷாகித் அஃப்ரீடி யோசிக்காமல் பேட் செய்ய முடிவெடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்களை மட்டும் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

142 ரன்கள் இலக்கைத் துரத்திய வங்கதேசம் சவுமியா சர்க்கார் (0), தமிம் இக்பால் (14), முஷ்பிகுர் ரஹிம் (19) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 6-வது ஓவரில் 38/3 என்று தட்டுத்தடுமாறியது. ஆனால் அந்த அணிக்குத் தேவை ஒரே பார்ட்னர்ட்ஷிப் அவ்வளவே அதனை ஷாகிப் அல் ஹசன் மற்றும் ஷபீர் ரஹமான் நிறைவேற்றினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருவரும் அரைசதம் கண்டு வெற்றியை ஈட்டினர்.

உமர் குல் 2 ஓவர்களில் 23 ரன்களுக்கு சாத்துமுறை நடந்தது. வஹாப் ரியாஸின் 4 ஓவர்களில் 7 பவுண்டரிகள் விளாசப்பட்டது. ஷாகிப் 41 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தும் ஷபீர் ரஹ்மான் 32 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

சயீத் அஜ்மல் 3.2 ஓவர்களில் 25 ரன்கள் விளாசப்பட்டார். சிக்கன விகிதம் ஓவருக்கு 7.50. வஹாப் ரியாஸ் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் கொடுத்தார். சொஹைல் தன்வீர் மட்டுமே 3 ஓவர்களில் 16 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார்.

ஷாகித் அஃப்ரீடி, "வங்கதேச அணி நல்லதொரு இயங்குவிசையில் உள்ளது. வங்கதேச வீரர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றார் பாகிஸ்தான் கேப்டன் அஃப்ரிடி.

இவர் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் உண்டு. காரணம் பாகிஸ்தான் பேட்டிங் மோசமாக இருந்தது. அகமது ஷெசாத் 10 பந்துகள் ரன் எடுக்காமல் ஆடினார். 31 பந்துகளில் அவர் 17 ரன்கள் என்று வேதனையுடன் ஆடினார். அவர் ஒழுங்காக ஆடிய ஷாட்டில் அவுட் ஆனதுதான் அவரது பேட்டிங்கின் முரண். முக்தர் அகமது என்ற புதுமுக தொடக்க வீரர் மாறாக 30 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்தார்.

3ம் நிலையில் களமிறங்கிய அப்ரீடி 1 சிக்சருடன் 12 ரன்கள் எடுத்திருந்த போது தவறாக கேட்ச் தீர்ப்பளிக்கப்பட்டு காலியானார். அவர் தெரியானல் ரிவியூ கேட்டார். ஆனால் இந்தப் போட்டியில் ரிவியூ இல்லை என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஹாரிஸ் சோஹைல் 30 ரன்களை 24 பந்துகளிலும் ஹபீஸ் 18 பந்துகளில் 26 ரன்களை எடுத்தாலும் 120 பந்துகளில் மொத்தம் 52 ‘டாட்’ பந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தின் அறிமுக வீரர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் (வயது 19) என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு நல்ல எதிர்காலம் இருப்பது தெரிகிறது. இவர்தான் ஷெசாத்தை படுத்தி எடுத்தார். இவர் 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக சபீர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x