Last Updated : 09 Feb, 2016 02:29 PM

 

Published : 09 Feb 2016 02:29 PM
Last Updated : 09 Feb 2016 02:29 PM

டி20 கிரிக்கெட்டில் அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் குறைவு: தோனி கருத்து

இலங்கைக்கு எதிரான முதல் டி20 இன்று இரவு நடைபெறும் நிலையில் தோனி உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான தயாரிப்பாக இலங்கைத் தொடரை பார்ப்பதா அல்லது இலங்கையை வீழ்த்தி அணியின் வலுவை நிரூபிப்பதா என்ற இரட்டை மனநிலையில் இருப்பதாக தெரிகிறது.

இது குறித்து தோனி கூறியதாவது:

"போட்டிகளை வெல்வது மிக முக்கியம், ஆனால் அதே தருணத்தில் ஒவ்வொரு வீரரையும் நல்ல உடல்தகுதியுடன் வைத்திருப்பதும் மிக முக்கியம். ஏனெனில் இதே 15 பேர் கொண்ட அணிதான் உலகக்கோப்பையிலும் ஆடப்போகிறது.

எனவே அனைவரின் உடல் தகுதியையும் சரியாக பராமரித்து உலகக்கோப்பையில் சிறந்த 11 வீரர்களை களமிறக்குவது அவசியம். அதுதான் முக்கியமான விஷயம்.

இந்த டி20 வடிவத்தில் என்ன நடக்கிறது என்றால் அணிகளுக்கு இடையிலான இடைவெளி குறைவு. நம் அணியின் மேட்ச் வின்னர் எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்து மாறும். அணியில் ஒரேயொரு பெரிய ஹிட்டர் மட்டும்தான் இருக்கிறார் என்றால், அன்றைய தினம் அவருக்கு சாதகமான தினமாக அமைந்தால் 10 அல்லது 12 பந்துகளில் ஆட்டத்தை நம்மிடமிருந்து பறித்துச் சென்று விடுவார்.

உலகக்கோப்பையில் ரெய்னா எந்த இடத்தில் இறங்குவாரோ அதே இடத்தில் இலங்கைக்கு எதிரான தொடரிலும் களமிறக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். அது அவர் திறமையை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அமையும், நமது அணியும் டி20 சர்வதேச போட்டிகளில் அதிகம் விளையாடுவதில்லை.

இருதரப்பு தொடரில் ஒரேயொரு டி20 மட்டும் ஆடுவோம். எனவே 4-ம் நிலையில் சீரான முறையில் இறங்க ரெய்னாவுக்கு இந்தத் தொடர் ஒரு வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன். இங்கு (கோலி இல்லாததால்) 3-ம் நிலையில் ரெய்னா இறங்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், 4-ம் நிலையில் அவர் களமிறங்குவதே நீண்ட கால அடிப்படையில் நன்மை விளைவிப்பதாகும்"

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x