Last Updated : 26 Feb, 2017 04:19 PM

 

Published : 26 Feb 2017 04:19 PM
Last Updated : 26 Feb 2017 04:19 PM

ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா நீக்கப்பட வேண்டும்: அசாருதீன் கருத்து

புனே தோல்விக்குப் பிறகு இந்திய அணியில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறிய அசாருதீன், ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனத்திற்கு அசார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

எந்த ஒரு பேட்டிங் சரிவும் அணிக்கு பின்னடைவே. தொடரை இழந்தோம் என்று நான் கூறவில்லை, ஆனால் எந்தவிதமான பிட்ச்களில் நாம் ஆட விரும்புகிறோம் என்பதை நாம் பார்க்க வேண்டும். பெங்களூரு பிட்ச் இவ்வளவு திரும்பாது என்றே கருதுகிறேன்.

எனக்கு என்ன தோன்றுகிறது எனில் ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மாவுக்குப் பதிலாக கருண் நாயர், புவனேஷ்வர் குமார் ஆகியோரை அணியில் சேர்க்க வேண்டும்.

இசாந்த்தின் ‘பேக் ஆஃப் லெந்த்’ பந்து வீச்சு இங்கு பயனளிக்காது. ஸ்விங் பவுலர் புவனேஷ் பயனளிப்பார் எனவே விராட் கோலி இந்தக் கோணத்தில் சிந்திக்க வேண்டும்.

மைக்கேல் கிளார்க் 9 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய போது இப்படிப்பட்ட பிட்ச்தான் தயாரிக்கப்பட்டது. புனே பிட்ச் மிகவும் மோசமான பிட்ச், ஆனாலும் இந்தப் பிட்சில் இந்திய ஸ்பின்னர்கள் வீசிய விதம் எனக்கு திருப்தியளிக்கவில்லை. ஓகீஃப் வீசிய லெந்தில் ஜடேஜா வீசியிருக்க வேண்டும்.

ஜடேஜா வீசிய லைனைப் பார்த்தோமானால் ஆஃப் ஸ்டம்ப் அல்லது சற்று வெளியே, இங்குதான் அவர் தவறிழைத்துவிட்டார். இந்த லைனில் அவர் விக்கெட்டுகளை விருப்பத்திற்கேற்ப வீழ்த்த முடியாது. மாறாக ஓகீஃப் மிடில் அண்ட் லெக் லைனில் வீசினார், பெரிய ஸ்பின் செய்யவில்லை, இதனால்தான் 4 எல்.பி. தீர்ப்புகளை அவர் பெற்றார். நேராக வீசி மீதியை பிட்சிற்கு விட்டு விட வேண்டும், இதைத்தான் செய்தார் ஓகீஃப்

இந்திய பேட்ஸ்மென்கள் பந்து திரும்புவதற்காக ஆடி ஏமாந்தனர். ஜடேஜாவை விட ஓகீஃப் பிட்சை நன்றாகப் புரிந்து கொண்டு வீசினார்.

ஸ்மித்தின் சதம் மோசமான பிட்சில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த சதம் என்று கருதுகிறேன், ஸ்மித் பந்துகள் திரும்பும் என்று நினைத்து ஆடவில்லை, ஜடேஜாவின் உள்ளே வரும் பந்துகளை மட்டுமே அவர் ஆடினார். அதாவது அது திரும்பும் என்று அவர் நினைக்காமல் ஆடியதால் மட்டையில் ஆடினார்.

இங்கிலாந்துக்கு எதிராக அடில் ரஷீத், மொயின் அலி ஓவருக்கு ஒரு மோசமான பந்தையாவது வீசினர். ஆனால் இங்கு தளர்வான பந்துகள் ஆஸி.யினரால் வீசப்படவில்லை. எல்லா பந்துகளையும் மனப்போக்கின் படி இறங்கி வந்து அடிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை, அது எப்போதும் சாத்தியமல்ல, ஆனால் பந்துகள் திரும்பும் பிட்சில் நாம் எல்லா பந்துகளும் திரும்பும் என்று நினைத்து ஆடக்கூடாது. இங்குதான் இந்திய வீரர்கள் தவறிழைத்து விட்டனர்.

இவ்வாறு கூறினார் அசார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x