Published : 27 Aug 2014 11:10 PM
Last Updated : 27 Aug 2014 11:10 PM

ஜடேஜா 4 விக்கெட்டுகள்: 161 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து; இந்தியா வெற்றி

கார்டிஃப்பில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 161 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

இந்தியா முதலில் பேட் செய்து ரெய்னாவின் அதிரடி சதம் மற்றும் ரோகித், தோனி அரைசதங்கள் மூலம் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து மழை பெய்ததால் ஆட்டம் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டது, இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று டக்வொர்த் முறையில் புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் ஆட்டத்தின் எந்த நிலையிலும் இந்தியாவை இங்கிலாந்து பேட்டிங் அச்சுறுத்தவில்லை. கடைசியில் 38.1 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி கண்டது.

தோனியின் கள அமைப்பு, பந்து வீச்சு மாற்றங்கள் கை கொடுக்க, அருமையாக பந்து வீசியதோடு, இந்திய அணியின் பீல்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. குறிப்பாக கடைசியில் ரஹானே பவுண்டரி அருகே கிட்டத்தட்ட சிக்சருக்குச் சென்ற பந்தைக் கேட்ச் பிடித்ததைக் குறிப்பிடலாம்.

இங்கிலாந்தின் துவக்கம் நன்றாக அமைந்தது குக் (19) ஹேல்ஸ் (40) இணைந்து 54 ரன்களைச் சேர்த்தனர். அப்போது மொகமது ஷமி வீசிய பந்து ஒன்றுக்கு அதிகமாக ஆஃப் திசையில் நகர்ந்த குக் பந்தை அடிக்க முயன்று கோட்டைவிட்டு எல்.பி.ஆனார்.

அதே ஓவரின் கடைசி பந்தில் இயன் பெல்லுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மொகமது ஷமி வீசிய இன்ஸ்விங்கரை ஆடாமல் அவர் விட பந்து ஸ்டம்பைத் தாக்கியது.

துவக்கத்தில் மோகித் சர்மா நல்ல லெந்த் மற்றும் லைனில் வீசி கட்டுக்குள் வைத்திருந்தார். பெல் அவுட் ஆன பிறகு ஜோ ரூட் களமிறங்கி 4 ரன்களை எடுத்த நிலையில் புவனேஷ் குமாரின் மிகப்பெரிய இன்ஸ்விங்கரை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். அற்புதமான பந்து அது. சுமார் 15 டிகிரி அந்தப் பந்து உள்ளே ஸ்விங் ஆகி வந்ததாக வர்ணனையில் கூறப்பட்டது.

ஜடேஜா பந்து வீச வந்தவுடன் ஆட்டம் மொத்தமாக இந்தியா பக்கம் வந்துவிட்டது. அபாய துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 40 ரன்களில் இருந்தபோது தேவைப்படும் ரன் விகிதம் கடுமையாக எகிறிக் கொண்டிருந்ததால் ஜடேஜா பந்தை ஸ்வீப் செய்தார் ஆனால் பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு பின்னால் கேட்ச் ஆனது. அஸ்வின் கேட்சை எடுத்தார். அந்த இடத்தில் ஃபீல்டரை நிறுத்தியது ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் அனுபவத்தைக் காட்டியது.

அடுத்ததாக அபாய வீரர் ஜோஸ் பட்லர் 2 ரன்களில் ஜடேஜாவின் வெளியே திரும்பிய பந்தை டிரைவ் ஆடி கவர் திசையில் கோலியிடம் எளிதான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 85 ரன்களில் அதன் பாதி விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

மீதமிருக்கும் அதிரடி வீரர் இயன் மோர்கன் மட்டுமே. அவர் 28 ரன்கள் எடுத்திருந்த போது, அஸ்வின் பந்தை மிகவும் ரீச் செய்து ஸ்வீப் ஆட பந்து சரியாக மட்டையில் சிக்காமல் டீப் ஸ்கொயர் லெக்கில் மொகமது ஷமியிடம் கேட்ச் ஆனது.

பென் ஸ்டோக்ஸ் என்ற மற்றொரு அதிரடி வீரர் 23 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவின் பந்தை நன்றாகவே லாங் ஆன் நோக்கி தூக்கி அடித்தார். அது சிக்சர் நோக்கிச் சென்ற போது ரஹானே அருமையாக அதனை நல்ல பேலன்சுடன் கேட்ச் ஆக்கினார்.

ஜோர்டான் களமிறங்கி ரன் எடுக்காமல் ரெய்னாவின் பந்தில் நேராக எல்.பி.ஆகி வெளியேறினார். கிறிஸ் வோக்ஸிற்கு ஷமி பந்தில் எளிதான கேட்ச் ஒன்றை ரோகித் சர்மா மிட்விக்கெட்டில் தவற விட்டார். அவர் அதன் பிறகு ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் 20 ரன்களில் அவர் ஜடேஜா பந்தை மேலேறி வந்து ஆட முயன்று கோட்டைவிட்டு தோனியிடம் ஸ்டம்ப்டு ஆனார்.

டிரெட்வெல் கடைசியாக 10 ரன்களில் அஸ்வினிடம் அவுட் ஆக இந்தியா வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடங்கியது. மோகித் சர்மா விக்கெட் எடுக்காவிட்டாலும் 6 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஜடேஜா 7 ஓவர்களில் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அஸ்வின் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் ரெய்னா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்திய அணி ஒன்று திரண்டு பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்துப் பகுதிகளிலும் கறாரான அணுகுமுறையுடன் விளையாடி வெற்றியைச் சாதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x