Published : 25 Sep 2016 12:52 PM
Last Updated : 25 Sep 2016 12:52 PM

சொந்த கிராமத்தில் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு: திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்

பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு சேலம் மாவட்ட எல்லையிலும், சொந்த கிராமத்திலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசிலின் ரியோ நகரில் கடந்த 10-ம் தேதி நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி, முதல் தங்கப் பதக்கத்தை வென்று, நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியும், மத்திய அரசு சார்பில் ரூ.75 லட்சமும் பரிசு அறிவிக்கப்பட்டது. பதக்கத்துடன் இந்தியா திரும்பிய மாரியப்பன் உள்ளிட்ட வீரர்களை பிரதமர் மோடி நேரில் வாழ்த்தினார். தமிழகம் திரும்பிய மாரியப்பனுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இருந்து கார் மூலம் சொந்த ஊரான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த பெரியவடகம்பட்டிக்கு மாரியப்பன் நேற்று வந்தார். தருமபுரி-சேலம் மாவட்ட எல்லை யான தொப்பூர் சோதனைச் சாவடி வழியாக சேலம் மாவட்டத் துக்குள் வந்த மாரியப்பனை, ஆட்சியர் வா.சம்பத், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மாரியப்பனை அவரது தாய் சரோஜா கண்ணீர் மல்க, ஆரத் தழுவி உச்சி முகர்ந்து வரவேற்றார். அவரது சகோதரர்களும் மாரியப் பனை வரவேற்றனர். மாரியப்பனின் தாய் சரோஜா கூறும்போது, “எனது மகன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய கவுரவம். ரூ.500 வாடகை வீட்டில் இருந்தபடி, எனது மகன்களை மிகுந்த வறுமைக்கு இடையில்தான் வளர்த்தேன். எனது மகனை பிரதமர், முதல்வர், ஊர் பொதுமக்கள் உட்பட அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தது எங்களுக்கு மிகப்பெரிய கவுரவம். வறுமையில் வாழ்க்கையை கழித்து வந்த நாங்கள், இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறோம்” என்றார்.

தொப்பூரை அடுத்த தீவட்டிப் பட்டியில் மாரியப்பனின் சொந்த ஊர் மக்கள் மட்டுமல்லாது, சுற்று வட்டாரப் பகுதி மக்களும், பள்ளி மாணவர்களும் ஆயிரக்கணக்கில் திரளாக கூடி மலர்தூவி வரவேற் றனர். அங்கிருந்து மாரியப்பனை திறந்த வேன் மூலமாக சொந்த கிராமத்துக்கு தாரை தப்பட்டை முழங்க அழைத்துச் சென்றனர். ஊர் முழுவதும் மாரியப்பனுக்கு பிளக்ஸ் போர்டுகள் வைக்கப் பட்டிருந்தன.

மாரியப்பனை உற்சாகமாக தோளில் தூக்கிய நண்பர்கள்.

மாரியப்பன் கூறும்போது, "வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது எனது அம்மாதான். இந்தியாவில் என்னைப் போல திறமையான பலர் இருக்கின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பு கிடைத் தால் பதக்கம் வென்று தருவார்கள். அவர்களின் திறமையை கண்ட றிந்து வெளிக்கொண்டு வந்தால், நாட்டுக்கு மேலும் பெருமை கிடைக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x