Published : 20 May 2015 10:26 AM
Last Updated : 20 May 2015 10:26 AM

சென்னையை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது மும்பை

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக வீழ்த்தியது. இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

நமது முன்னோட்டத்தில் குறிப்பிட்டது போல், மும்பை தொடக்க வீரர்களான லெண்டில் சிம்மன்ஸ், பார்த்திவ் படேல் சென்னைக்கு கலக்கத்தை கொடுக்க, 187 ரன்களைக் குவித்தது மும்பை இந்தியன்ஸ். தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நாம் குறிப்பிட்டது போலவே மலிங்கா (3/23), உள்ளிட்டோரின் பந்துவீச்சில் 162 ரன்களையே எடுத்து தோல்வி தழுவியது.

பேட்டிங்கில் லெண்டில் சிம்மன்ஸ், படேல், போலார்ட் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்த பந்துவீச்சில் 11-வது ஓவரில் ரெய்னா, தோனி ஆகிய அதிரடி வீரர்களை ஹர்பஜன் அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்தார்.

ஆனால், சென்னைக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடி வெற்றி பெற்று இறுதிக்குள் நுழையலாம்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அஸ்வினுடம் தொடங்கினார் தோனி. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிம்மன்ஸ், படேல் ஆகியோர் ரன் வராததை நினைத்து பதற்றம் அடையவில்லை.

இந்நிலையில், அஸ்வின் ஒரு ஓவரில் 2 அபாரமான சிக்சர்களை விளாசி அதிரடியை தொடங்கினார் சிம்மன்ஸ். சிம்மன்ஸ் எதிர்கொண்ட 51 பந்துகளில் 25 பந்துகளில் அவர் ரன் எடுக்கவில்லை. ஆனாலும் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் அவர் 65 ரன்கள் விளாசினார்.

பார்த்திவ் படேலும் முன்னங்காலை விலக்கிக் கொண்டு விளாசும் முறைக்கு வந்தார். இருவரும் இணைந்து 4-வது முறையாக முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களைச் சேர்த்தனர்.

பார்த்திவ் படேலை பிராவோ வீழ்த்தினார். இவர் 25 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சர் அடித்து 35 ரன்கள் எடுத்தார். 10.4 ஓவர்களில் 90 ரன்கள். அதன் பிறகு சிம்மன்ஸை ஜடேஜா வீழ்த்தினார். ரோஹித் சர்மா 19 ரன்களில் பிராவோவிடம் அவுட் ஆனார். விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் விகிதத்தில் குறைவில்லை. 10-15 ஓவர்களில் 49 ரன்களையும், 15-20 ஓவர்களில் 52 ரன்களையும் மும்பை இண்டியன்ஸ் அடித்தனர். இதில் முக்கிய பங்கு வகித்தது போலார்ட். 17 பந்துகளில் 41 ரன்களை விளாசினார் இதில் 5 சிக்சர்கள் அடங்கும். சென்னை அணியின் பீல்டிங்கிலும் குறைபாடுகள் இருந்தன.

பிராவோ தனது கடைசி ஓவரில் 3 வைடுகளை வீசினார். இதனால் 16 ரன்கள் வந்தது. அஸ்வின் 3 ஓவர்கள் மட்டுமே வீசினார் அவருக்கு ஏன் 4-வது ஓவர் கொடுக்கப்படவில்லை என்பது தோனியின் விசித்திர விளக்கத்துக்குரியது. நேஹ்ரா மீண்டும் சிக்கனமாக வீசினார். மும்பை 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. 200 ரன்களுக்குச் சென்று இருக்க வேண்டும், இடையில் விக்கெட்டுகள் சரிவினால் ஓரளவுக்கு துரத்தக் கூடிய இலக்கையே மும்பை வந்தடைந்தது.

டிவைன் ஸ்மித்துக்கு அதிர்ச்சித் தீர்ப்பு:

இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே நடுவர் தீர்ப்பின் மூலம் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 4-வது பந்தை மலிங்கா தாழ்வான புல்டாஸாக வீச, அதனை காலில் வாங்கினார் டிவைன் ஸ்மித், நடுவர் இல்லிங்வொர்த் கையை உயர்த்தினார். ஆனால் லெக் ஸ்டம்புக்கு வெளியே ஸ்மித் காலில் வாங்கினார். நிச்சயம் அது நாட் அவுட். தீர்ப்பை மாத்தி எழுதுங்க என்ற ரீதியில் ஸ்மித் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்தார்.

திருப்பு முனை ஏற்படுத்திய ஹர்பஜன் ஓவர்:

சென்னை அணிக்கு டிவைன் ஸ்மித் வெளியேற்றம் கொஞ்சம் பின்னடைவை ஏற்படுத்தினாலும் டு பிளெஸ்ஸிக்கு 14 ரன்னில் மலிங்கா விட்ட கேட்ச் ஆறுதல் அளித்தது. டு பிளெஸ்ஸி 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் அடங்கும். மைக் ஹஸ்ஸி, வினய் குமார் பந்தை தொட்டு படேலிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்னில் வெளியேறினார். ரெய்னா (25) பிளெஸ்ஸிஸ் இணைந்து 5 ஓவர்களில் 40 ரன்கள் விளாச 10-வது ஓவரில் 86 ரன்கள் வந்தது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸுக்கும், சென்னைக்கும் இடைவெளி 4 ரன்களே. ஆனால் 11-வது ஓவரை ஹர்பஜன் வீச, 2-வது பந்தை ரெய்னா, பவுலரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் தோனி கணிசமான ஆரவாரத்துக்கிடையே இறங்கினார். முதல் பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார் பந்தை விட்டார், கால்காப்பில் பட நடுவர் கையை உயர்த்தினார். இது பிளம்ப் எல்.பி. அதன் பிறகு சென்னையை ஆதிக்கம் செலுத்தியது மும்பை. டிவைன் பிராவோ 20 ரன்களில் பார்த்திவ் படேலின் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். ஜடேஜா 19 ரன்களில் மெக்லீனாகன்னிடன் ஆவுட் ஆக, அஸ்வின் கடைசியில் 2 பவுண்ட்ரி 1 சிக்சருடன் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து மலிங்காவிடம் வீழ்ந்தார்.

மலிங்கா 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற சென்னை 19 ஓவர்களில் 162 ரன்களுக்கு மடிந்தது. ஆட்ட நாயகனாக போலார்ட் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x