Published : 22 Apr 2015 02:58 PM
Last Updated : 22 Apr 2015 02:58 PM

சூப்பர் ஓவரை வீச ஜான்சன் முன்வந்தார்: சேவாக் புகழாரம்

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர் வெற்றிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பர் ஓவரில் முற்றுப்புள்ளி வைத்தது.

ஜார்ஜ் பெய்லி இல்லாததால் கேப்டன் பொறுப்பை விரேந்திர சேவாக் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அஜிங்கியா ரஹானேயின் அற்புதமான 74 (54 பந்துகள் 6 பவுண்டரி 2 சிக்சர்) ரன்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஷான் மார்ஷ் (65), டேவிட் மில்லர் (54) பிறகு சஹா (19), அக்சர் படேல் (12), ஜான்சன் (13) ஆகியோரின் பங்களிப்பினால் 191 ரன்களை எடுக்க ஆட்டம் டை ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட் செய்தது. மில்லர் முதல் பந்திலேயே மோரிஸிடம் அவுட் ஆக, ஷான் மார்ஷ் களமிறங்கி 3 பவுண்டரிகளை விளாசினார். மொத்தம் 15 ரன்களை எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வாட்சன், ஸ்மித் களமிறங்கினர். ஜான்சன் வீசிய முதல் பந்து அதிவேக யார்க்கராக அமைய, ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயன்ற வாட்சனின் மட்டையில் பந்து சிக்கவில்லை.ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.

ஸ்மித் அடுத்ததாக ஜான்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தில் ஜேம்ஸ் பாக்னர் பேட்டிங் முனைக்கு வர ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஸ்லோ பந்தாக வீசப்பட்டது. பாக்னர் மட்டையை ஒரு சுழற்று சுழற்றினார், பந்து சிக்கவில்லை. ஆனால் தேவையில்லாமல் ‘பை’ மூலம் ஒரு ரன் எடுக்க கிரீஸை தாண்டினார். ஸ்மித் அதில் ஆர்வம் காட்டவில்லை. சஹா நேரடியாக ஸ்டம்பில் அடித்தார். 2 விக்கெட்டுகளை இழந்து 6 ரன்களை மட்டுமே சூப்பர் ஓவரில் எடுத்த ராயல்ஸ் முதல் தோல்வியைத் தழுவியது.

ஜான்சனின் அபாரமான பந்து வீச்சினால் 3 ஆஸ்திரேலிய வீரர்களாலுமே அடிக்க முடியவில்லை. ரஹானே, ஜான்சனை அற்புதமாக விளையாடினார். அவரையே சூப்பர் ஓவரில் களமிறக்கியிருக்கலாம். இங்குதான் வாட்சன் போன்றவர்கள் தவறு செய்து விடுகின்றனர். ஆனால் இது வாட்சன் மட்டுமே எடுத்த முடிவாக இருக்கவும் வாய்ப்பில்லை.

சூப்பர் ஓவரை ஜான்சன் தானே வீசுவதாக கேட்டு வாங்கி கொண்டார். ஆட்டம் முடிந்தவுடன் இதனைப் பாராட்டிப் பேசிய (பொறுப்பு) கேப்டன் சேவாக், “மிட்செல் ஜான்சனே சூப்பர் ஓவரை வீசும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சூப்பர் ஓவரை நான் வீசுகிறேன் என்று அவரே முன்வந்தார். இது அபாரமான ஆட்டம். ராஜஸ்தான் ராயல்ஸ் 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்றே நினைத்தேன்.

ஆனால் பவுலர்கள் அவர்களை மட்டுப்படுத்தினர். பேட்டிங்கில் ஷான் மார்ஷ், டேவிட் மில்லர், பிறகு அக்சர் படேல், மிட்செல் ஜான்சன் ஆகியோர் பொறுப்புடன் ஆடி போட்டியை டை செய்தனர்.

முன்னதாக 192 ரன்கள் இலக்கைத் துரத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கடைசி 8 ஓவர்களில் ஓவருக்கு 13 ரன்களுக்கும் மேல் தேவைப்பட்டது. அப்போது மார்ஷ் 56 ரன்களிலும், மில்லர் 5 ரன்களிலும் இருந்தனர். மார்ஷ் 15-வது ஓவரில் அவுட் ஆனார். அவர் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசி 65 ரன்களில் வெளியேறினார். அவரது விக்கெட்டை அனுபவசாலி ஸ்பின்னர் பிரவீண் தாம்பே வீழ்த்தினார். 15-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 120/4 என்று இருந்தது. அதன் பிறகு 16-வது ஓவரில் மில்லர், பாக்னர் ஓவரில் 2 சிக்சர்களை அடுத்தடுத்து அடித்தார்.

17-வது ஓவரில் சஹா 3 பவுண்டரிகள் அடித்தார். அதே ஓவரில் 8 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த சஹா, மோரிஸிடம் வீழ்ந்தார்.

18-வது ஓவரை ஆஃப் ஸ்பின்னர் ஹூடாவிடம் கொடுத்து தவறு செய்தார் கேப்டன் வாட்சன். அதில் 2 சிக்சர்களை விளாசிய மில்லர் 29 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 54 ரன்களை எட்டி, அதே ஓவர்ல் ஆட்டமிழந்தார்.

2 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 26 ரன்கள். 19-வது ஓவரை மோரிஸ் வீச, ஜான்சன் 2-வது பந்தை சுழற்றினார், அது கேட்சாகச் சென்றது ரஹானே அருமையாக முயற்சி செய்து கேட்சையும் பிடித்தார், ஆனால் உடனடியாக அது கையிலிருந்து தவறியது. அந்த ஓவரின் 5-வது பந்தில் ஜான்சன் மிக முக்கியமான லெக் திசை பவுண்டரி ஒன்றை அடித்தார். ஆளில்லா டீப் ஃபைன் லெக் திசையில் பந்தை சாதுரியமாகத் திருப்பி விட்டார்.

கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 14 ரன்கள். ஃபாக்னர் அந்த ஓவரை வீசினார். ஜான்சன் முதல் 2 பந்துகளில் அருமையாக அக்சர் படேலுடன் ஓடி 2 ரன்களை அடுத்தடுத்து எடுத்தார். 3-வது பந்தில் ஒரு ரன்னை எடுத்து அக்சர் படேலிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்தார் ஜான்சன். 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் 4 மற்றும் 5ம் பந்துகளில் 2 ரன்களை முறையே எடுத்தார் அக்சர் படேல்.

கடைசி பந்தில் வெற்றிக்குத் தேவை 5 ரன்கள். அப்போது பாக்னர் ஆஃப் திசையில் புல்டாஸ் வீச அதனை அக்சர் படேல், ஆளில்லா பாயிண்டின் மேல் தூக்கி அடித்தார். பந்து ஒரு பிட்ச் ஆகி பவுண்டரிக்குச் சென்றது. ஆட்டம் டை ஆனது. பாக்னர் 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் பிறகே ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. அதில் ஷான் மார்ஷ் பேட்டிங்கிலும், ஜான்சன் பவுலிங்கிலும் வெற்றி தேடித் தந்தனர். ஆட்ட நாயகனாக ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x