Published : 01 Sep 2014 10:05 AM
Last Updated : 01 Sep 2014 10:05 AM

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தோனி பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த சுழற்பந்து வீச்சாளர்களை கேப்டன் தோனி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, ரெய்னா, அம்பட்டி ராயுடு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ராயுடு ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். ரஹானே 45, ரெய்னா 42, கோலி 40 ரன்கள் எடுத்தனர்.

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் தோனி, “எங்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் வெற்றி தேடித்தந்துள்ளனர். குறிப்பாக அஸ்வின், ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். மோஹித் சர்மா காயமடைந்த பிறகு பந்துவீச அழைக்கப்பட்ட ரெய்னாவும் சிறப்பான பங்க ளிப்பை செய்தார்.

டிரென்ட்பிரிட்ஜ் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் பிட்ச்சை காலையில் பார்த்தபோது கொஞ்சம் புற்கள் இருந்தன. எனினும் போட்டி தொடங்கிய 20 நிமிடங்களுக்குப் பிறகு பிட்ச் உலர்ந்துவிடும். அதனால் மைதானம் மெதுவாகிவிடும் என நினைத்தேன். ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும் என நினைக்கவில்லை.

இங்கிலாந்தின் முதல் விக்கெட்டை வீழ்த்தி திருப்பு முனையை ஏற்படுத்தினார் ரெய்னா. ராயுடுவும் விக்கெட் எடுத்தார். அவர்கள் இருவரும் பேட்டிங்கிலும் பலம் சேர்த்தனர். இந்திய அணியில் 4-வது இடத்துக்கான பேட்ஸ்மேனை தேடிக்கொண்டிருக்கிறோம். அந்த இடத்துக்கான போட்டியில் ஒரு சிலர் உள்ளனர். அதில் ராயுடுவும் இருக்கிறார். விராட் கோலி பார்மில் இல்லாமல் இருக்கிறார். ஆனால் அவர் போராட்டக் குணம் கொண்ட ஆக்ரோஷமான வீரர். இந்தப் போட்டியை பொறுத்தவரையில் அவர் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து விளையாடினார். அவரிடம் இருந்து விரைவில் பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்” என்றார்.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் அதிக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி பெற்று தந்த கேப்டன் என்ற சாதனையை முன்னாள் கேப்டன் அசாருதீனுடன் பகிர்ந்து கொண்டார் தோனி. இவருடைய தலைமையில் இந்திய அணி 164 போட்டிகளில் விளையாடி 90 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பிரெஸ்னன் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாட்வெஸ்ட் டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் கலக்கிய ஜேசன் ராய் புதுமுக வீரராக இடம்பெற்றுள்ளார். இந்தப் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x