Published : 26 Apr 2017 03:34 PM
Last Updated : 26 Apr 2017 03:34 PM

சுனில் நரைன் பந்து வீச்சை தோனி அடிக்க தயங்குவது ஏன்? - ஆகாஷ் சோப்ரா, பிராட் ஹாக் அலசல்

இன்று புனே அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் ஒரு வெற்றிகரமான பினிஷிங்கை செய்து கொடுத்த தோனிக்கும் சுனில் நரைனுக்கும் ஒரு சுவையான பலப்பரீட்சை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சுனில் நரைன் பவுலிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்க முடியாவிட்டாலும் பேட்டிங்கில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார், ஆனால் பேட்டிங்கில் வெளுத்துக் கட்ட வேண்டிய தோனி இப்போதுதான் ஃபார்முக்கு வருவது போல் தெரிகிறது.

சுனில் நரைனை இதுவரை 54 பந்துகள் ஆடியுள்ள தோனி வெறும் 27 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார், இது மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும். இது எந்த ஒரு பவுலருக்கு எதிராகவும் தோனியின் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் என்பது குறிப்பிடத்தக்கது. நரைன் ஒருமுறை தோனியை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் கிரிக் இன்போ இணையதளத்தில் ஆகாஷ் சோப்ரா, பிராட் ஹாகிடம் தோனி vs நரைன் போட்டி பற்றி கேட்ட போது,

ஆகாஷ் சோப்ரா, ‘நரைன் போதுமான விக்கெட்டுகளை எடுக்கவில்லை, ஆனால் சிக்கனம் காட்டி வருகிறார், தோனி ஒரு அசாதாரண இன்னிங்ஸை ஆடி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக புனேவுக்கு வெற்றி தேடித் தந்தார். இந்நிலையில் புள்ளி விவரங்கள் நரைனுக்குச் சாதகமாக இருக்கின்றன. எனவே இன்று தோனி களமிறங்கும் போது சுனில் நரைனை பந்து வீச கம்பீர் அழைத்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

மேலும் தோனியிடம் அதிக ஸ்ட்ரோக்குகள் இல்லை, ஸ்வீப் ஆடுவதில்லை, ரிவர்ஸ் ஸ்வீப் மிக அரிதாக ஆடுகிறார், மேலேறி வந்து ஆடும் ஷாட்களையும் அதிகம் பார்க்க முடியவில்லை. அவர் நின்ற இடத்தில் இருந்து கொண்டு லெந்த் பந்தை ஒரே தூக்குத் தூக்க முயற்சி செய்கிறார் இது எப்போதும் கைகொடுக்காது” என்றார்.

பிராட் ஹாக் கூறும்போது, “சுனில் நரைனுக்கு எதிராக தோனி மேலேறி வந்து ஆடத் தயங்குகிறார் காரணம் சுனில் நரைன் புதிரான பந்துகளை வீசக்கூடியவர், நிறைய பந்து வீச்சு முறையை மாற்றி கொண்டேயிருப்பார், இதனால் மேலேறி வந்து ஆடாமல் இருக்கலாம். சுனில் நரைனும் இவ்வாறு பல பேட்ஸ்மென்களை பிரச்சினைக்குள்ளாக்கியுள்ளார். எனவே இன்று தோனி அடிக்க ஆரம்பித்தால் சுனில் நரைனைக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x