Published : 22 Sep 2014 09:53 PM
Last Updated : 22 Sep 2014 09:53 PM

சாம்பியன்ஸ் லீக்: ரன் மழையில் சென்னைக்கு முதல் வெற்றி

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் குரூப் ஏ ஆட்டத்தில் டால்பின்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. ஆட்ட்நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெல்போர்டின் அதிரடி துவக்கம்

243 என்ற இமாலய இலக்கை விரட்ட வந்த டால்பின்ஸ் அணிக்கு, முதல் ஓவர் வெகுச் சிறப்பாக அமைந்தது. துவக்க வீரரான டெல்போர்ட், ஆசிஷ் நேரா பந்துவீச்சை பதம் பார்த்தார். அந்த ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 20 ரன்கள் குவிந்தன. இதில் வைடில் வந்த 3 ரன்களும் அடக்கம்.

அடுத்த ஓவரை வீச வந்த அஸ்வினுக்கும் அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. மற்றொரு துவக்க வீரர் வான் வைக்கும், 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் அதிரடியைத் தொடர்ந்தார். ஆனால் 4-வது பந்தில் லெக் பிஃபோர் முறையில் அவர் ஆட்டமிழந்தார். முதல் ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கியதால், மூன்றாவது ஓவரை வீச மோஹித் சர்மா ஆயத்தமானார். ஆனால் அந்த ஓவரின் முதல் பந்தையே டெல்போர்ட் சிக்ஸருக்கு விளாசினார். அடுத்தடுத்து பவுண்டரி, இரண்டு ரன்கள், பவுண்டரி என ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர, தனியாளாக தனது அணியை டெல்போர்ட் கரை சேர்த்துவிடுவார் என்ற நிலை உருவானது.

அந்த ஓவரின் கடைசி பந்தை, சாமர்த்தியமாக நிதானமாக வீசினார் மோஹித் சர்மா. டெல்போர்ட் அதை தவறாக கணித்து பவுல்டானார். 9 பந்துகளை மட்டுமே சந்தித்திருந்த டெல்போர்ட் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தாலும், அவர்களால் களத்தில் நிலைத்து நிற்க முடியவில்லை. 10 ஓவர்களில் டால்பின்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்திருந்தது.

கட்டுப்படுத்திய பிராவோவின் பந்துவீச்சு

11-வது ஓவரை வீச வந்த பிராவோ, தனது இரண்டாவது பந்திலேயே நிலைத்து ஆட முயற்சித்த செட்டியை 38 ரன்களுக்கு வெளியேற்றினார். அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே வர, டால்பின்ஸ் அணி பின்னடைவைச் சந்தித்தது. மீண்டும் 14-வது ஓவரை வீச வந்த பிராவோ, அந்த ஓவரின், மீண்டும் இரண்டாவது பந்தில் ஜார்ஸ்வெல்டை பெவிலியனுக்கு அனுப்ப, கடைசி பந்தில் ஸ்மித் ரன் அவுட் ஆனார். அந்த ஓவரில் 1 ரன் வர, சென்னையின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.

சீரான இடைவேளையில் டால்பின்ஸ் மட்டையாளர்கள் அனைவரும் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் கடைசி பந்தில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது. சிறப்பாக பந்துவீசிஅ பிராவோ 4 ஓவர்கள் வீசி, 17 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோஹித் சர்மா 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

முன்னதாக, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களைக் குவித்தது. வெண்ணைத் தனமான பிட்சில் அல்வா ரகப் பந்து வீச்சை சென்னை அணியினர் பிரித்து மேய்ந்ததில் எந்த வித ஆச்சரியமும் இல்லை. டால்பின்ஸ் அணியின் பவுலர் ஒருவர் பெயர் கேஷவ் ஆத்மாநந்த் மகராஜ். உண்மையில் மகாராஜாதான் அவர். ரன்களை அள்ளி அள்ளிக் கொடுத்தார்.

அதுவும் கடைசியில் ‘சர்’ ஜடேஜா அவரது லாலிபாப் ரக இடது கை நேர் நேர் தேமா பந்துகளை 3 சிக்சர்கள் 1 பவுண்டரி அடித்து அந்த ஒரு ஓவரில் மட்டும் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. 'வள்ளல்' மகராஜ் தனது 4 ஓவர்களில் 54 ரன்களை வழங்கி தன் பெயருக்கேற்ப நடந்து கொண்டார்.

இவர் தனது 24 பந்துகளில் 3 பந்தில் மட்டுமே ரன் கொடுக்கவில்லை. மற்றபடி 6 சிக்சர்களை வாரி வழங்கினார். சுரேஷ் ரெய்னா இந்த வெண்ணைப் பிட்சின் அல்வாப் பந்து வீச்சை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு மைதானம் முழுதும் சிக்சர்களைப் பறக்கவிட்டார். 27 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதம் கடந்த ரெய்னா 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 90 ரன்கள் எடுத்து கடைசியில் போனால் போகிறது என்று அவுட் ஆகிச் சென்றார்.

தொடக்கத்தில் அதிரடி வீரர் டிவைன் ஸ்மித் நம் மகராஜை ஒரு சிக்சர் அடித்தார். ஆனால் அடுத்த பந்தையும் சிக்சர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஆனால் அடுத்த 7 ஓவர்கள் மெக்கல்லமும் ரெய்னாவும் காட்டடி தர்பாரை நடத்திக் காட்டினர். சுமார் 7 ஓவர்களில் 91 ரன்கள் விளாசப்பட்டது. மெக்கல்லம் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆகும் போது சென்னை 8.2 ஓவரில் 99 ரன்களை விளாசி 200 ரன்களைக் கடக்க அடித்தளம் அமைத்தது.

டுபிளேசி களமிறங்க ரெய்னா தனது சிக்சர் மழையைத் தொடங்க, மோசமான பந்து வீச்சும், தரமற்ற ஃபீல்டிங்கும் சேர்ந்து கொள்ள அடுத்த 6 ஓவர்களில் 65 ரன்கள் வந்தது. அதாவது 14.2 ஓவர்களில் 164/2 என்று இருந்த போது ரெய்னா 90 ரன்களில் அவுட் ஆனார். தோனி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அருமையான யார்க்கரில் பவுல்டு ஆனார். ஃபிரைலிங்க் அந்த யார்க்கரை வீசினார். இல்லையெனில் தோனியும் புகுந்திருந்தால் 250 ரன்களுக்கும் மேல் கூட சென்றிருக்கும்.

ஜடேஜா களமிறங்கி நம் மகராஜின் ஓவரில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரி அடித்து 5 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். கடைசியில் 14 பந்துகளில் அவர் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 40 நாட் அவுட். டிவைன் பிராவோவுக்கு சில அருமையான யார்க்கர்கள் விழ அவரால் 11 ரன்களையே எடுக்க முடிந்தது. அஸ்வின் 4 நாட் அவுட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x