Published : 24 Jul 2014 02:41 PM
Last Updated : 24 Jul 2014 02:41 PM

சாம்பியன்ஸ் லீக்: முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்

செப்டம்பர் 17ஆம் தேதி, ஐதராபாத்தில் தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

6வது சாம்பியன்ஸ் லீக் தொடரான இதில் போட்டிகள் ஐதராபாத், மொஹாலி, பெங்களூரு, மற்றும் ராய்ப்பூரில் நடைபெறுகின்றன.

முதலில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. பிறகு பிரதான சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றன. மொத்தம் 29 ஆட்டங்கள் நடைபெறுகிறது. தகுதிச் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்குகிறது.

10 அணிகள் பங்கேற்கும் பிரதான சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 17ஆம் தேதி ஐதராபாத், ராஜீவ்காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில்தான் நடப்பு ஐபிஎல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

பிரிவு ஏ-யில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டால்பின்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் தகுதிச் சுற்றிலிருந்து ஒரு அணி.

பிரிவு பி-யில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் உள்நாட்டுத் தொடரில் சாம்பியனாகும் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், கேப் கோப்ராஸ் (தெ.ஆ), மற்றும் தகுதிச் சுற்று போட்டிகளிலிருந்து ஒரு அணி.

தகுதிச் சுற்றுப் போட்டிகள் ராய்ப்பூரில் நடைபெறும். செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் தகுதிச் சுற்று ஆட்டங்களில் 4 அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ், நாதர்ன் நைட்ஸ் (நியூசிலாந்தில் 20 ஓவர் கோப்பையை வென்ற அணி), சதர்ன் எக்ஸ்பிரஸ்(இலங்கையில் வென்ற அணி), லாகூர் லயன்ஸ் ஆகிய அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆடுகின்றன.

தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் விளையாடும். இதில் முதல் 2 இடங்களில் வரும் அணி பிரதானச் சுற்றுக்கு முன்னேறும்.

அரையிறுதிப் போட்டிகள் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. அக்டோபர் 4ஆம் தேதி பெங்களூருவில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x