Published : 17 Sep 2014 11:37 AM
Last Updated : 17 Sep 2014 11:37 AM

சாம்பியன்ஸ் லீக் சுவாரஸ்யங்கள்

# சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், டிரினிடாட் அண்ட் டொபாக்கோ ஆகிய 3 அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் லீக்கில் 4 முறை விளையாடியுள்ளன. எந்த அணியும் 5 முறை பங்கேற்றதில்லை. ஹைவெல்ட் லயன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகளும் 3 முறை விளையாடியுள்ளன.

# ஆஸ்திரேலிய வீரர் டிர்க் நேன்ஸ் 4 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் லீக்கில் 4 அணிகளுக்காக களமிறங்கிய ஒரே வீரர் டிர்க் நேன்ஸ்தான். இவர் டெல்லி டேர்டெவில்ஸ், ஹைவெல்ட் லயன்ஸ், விக்டோரியா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.

# கிளன் மேக்ஸ்வெல், ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடியுள்ளனர். மேக்ஸ்வெல், ஹேம்ப்ஸையர், மும்பை இண்டியன்ஸ், விக்டோரியா ஆகிய அணிகளுக்காகவும், மெக்டொனால்டு, லீசெஸ்டர்ஷையர், யுவா நெக்ஸ்ட், விக்டோரியா ஆகிய அணிகளுக்காகவும் ஆடியுள்ளனர்.

# சாம்பியன்ஸ் லீக்கில் ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச ரன்கள் குவித்த இந்தியர்களில் முதல் 3 இடங்களும் ரெய்னா வசமே உள்ளன. அவர், பெங்களூர், வயம்பா, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக முறையே 94, 87, 84 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3-வது அதிகபட்ச ஸ்கோரான 84 ரன்களை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

# சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் சுழற்பந்து வீச்சாளர் சுநீல் நரேனின் சராசரி 9.40 ஆகும். இதுதான் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் (5 இன்னிங்ஸ்களுக்கு மேல் பந்துவீசியது) சிறந்த பந்துவீச்சாக உள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் நரேன் (27 விக்கெட்டுகள்) 2-வது இடத்தில் உள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ 28 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

# சாம்பியன்ஸ் லீக்கில் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் ஓர் இன்னிங்ஸில் சராசரியாக 4.3 சதவீத சிக்ஸர்களை விளாசியுள்ளார். இது சாம்பியன்ஸ் லீக்கில் (குறைந்தபட்சம் 10 சிக்ஸர்கள் அடித்தவர்கள்) ஒரு வீரரின் சிறந்த சிக்ஸர் சதவீதமாகும். மிஸ்பா இதுவரை 3 இன்னிங்ஸ்களில் விளையாடி 13 சிக்ஸர்களை விளாசியுள்ளார். கிறிஸ் கெயில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 24 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருடைய சிக்ஸர் சராசரி 4 சதவீதம் ஆகும்.

# சாம்பியன்ஸ் லீக்கில் அதிக சிக்ஸர்களை விளாசியவர்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் கிரண் போலார்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் 45 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 13 போட்டிகளில் 27 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

# சாம்பியன்ஸ் லீக்கில் மிக மோசமாக பந்துவீசியவர் என்ற சாதனை இலங்கை வீரர் திசாரா பெரேராவிடம் உள்ளது. கடந்த சீசனில் சன்ரைஸர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 3 ஓவர்களில் 60 ரன்களை வாரி வழங்கினார். ஓர் ஆட்டத்தில் அதிக ரன்களை வழங்கியவர் என்ற சாதனையை அரவிந்த் வைத்துள்ளார். அவர் 2011-ல் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 69 ரன்களைக் கொடுத்தார்.

# சாம்பியன்ஸ் லீக்கில் 5 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ள ஒரே வீரர் தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி டேவிட்ஸ்தான். அவர் அடித்த 5 அரைசதங்களுமே வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடிக்கப்பட்டவையாகும்.

# 2010-ல் வயம்பா அணிக்கு எதிராக சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 70 ரன்களில் சுருண்டதே சாம்பியன்ஸ் லீக்கில் ஓர் அணி எடுத்த குறைவான ஸ்கோர். சாம்பியன்ஸ் லீக்கில் இரு முறை 100 ரன்களுக்குள் சுருண்ட ஒரே அணியும் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிதான்.

# சாம்பியன்ஸ் லீக்கில் இதுவரை 6 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. சதமடித்த அனைவருமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளனர்.

# டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளில் வங்கதேசத்தை தவிர மற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த நடுவர்களும் சாம்பியன்ஸ் லீக்கில் பணியாற்றியுள்ளனர். இலங்கையிலிருந்து அதிகபட்சமாக 8 பேர் நடுவர்களாக செயல்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x