Published : 23 Aug 2014 10:00 AM
Last Updated : 23 Aug 2014 10:00 AM

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: ஐபிஎல் அணிக்காக களமிறங்கும் காலிஸ், போலார்ட்

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், மேற்கிந்தியத் தீவுகள் ஆல் ரவுண்டர் கிரண் போலார்ட் ஆகியோர் தங்கள் நாட்டு அணிகளுக்காக பங்கேற்கவில்லை. அவர்கள் இருவரும் ஐபிஎல் அணிளுக்காக விளையாடவுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் ஜாக் காலிஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், கிரண் போலார்ட் மும்பை இண்டியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சாம்பியன்ஸ் லீக் போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தமுறை 8 வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். அதாவது அவர்கள் சார்ந்த ஐபிஎல் அணிகள் மற்றும் தாய்நாட்டு கிளப்புகள் ஆகிய இரண்டும்சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. அதனால் அவர்கள் 8 பேருக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.

இதையடுத்து வீரர்கள் தேர்வு விஷயத்தில் கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட அதே நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. அதனடிப்படையில் தாங்கள் எந்த அணிக்காக விளையாடுவது என்பதை சம்பந்தப்பட்ட வீரர்களே முடிவு செய்யலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் சாம்பியன் லீக் விதிமுறைப்படி, ஒரு வீரர் தாய்நாட்டு கிளப்புக்காக விளையாடாமல் வெளிநாட்டு அணிக்காக (ஐபிஎல் அணிகள்) விளையாடும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட அணி அவர் சார்ந்த கிளப்புக்கு நஷ்ட ஈடாக ரூ.90 லட்சத்தை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் காலிஸ் உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்காக விளையாட முடிவு செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக் போட்டி வரும் செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளது. நியூஸிலாந்து வீரர் கோரே ஆண்டர்சன் மும்பை அணிக்காகவும், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் களமிறங்குகின்றனர். லசித் மலிங்கா மும்பை அணிக்காக ஆடுகிறார். கடந்த சீசனைப் போல் தகுதிச்சுற்று மற்றும் குரூப் சுற்றோடு போட்டி தொடங்குகிறது. தகுதிச்சுற்று செப்டம்பர் 13 முதல் 16 வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 17-ம் தேதி குரூப் சுற்று போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் 29 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

பிரதான சுற்றில் பங்கேற்கும் 10 அணிகளும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளை எதிர்த்து தலா ஒரு முறை மோதும். குரூப் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகள் அக்டோபர் 2-ம் தேதி ஹைதராபாதிலும், இறுதியாட்டம் அக்டோபர் 4-ம் தேதி பெங்களூரிலும் நடைபெறுகின்றன.

ஏ பிரிவில் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா, டால்பின்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 5-வது அணி தகுதிச்சுற்றின் மூலம் தகுதிபெறும். பி பிரிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கேப் கோப்ராஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பர்படாஸ் டிரைடென்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 5-வது அணிதகுதிச்சுற்றின் மூலம் தகுதிபெறும். தகுதிச்சுற்றில் லாகூர்லயன்ஸ், மும்பை இண்டியன்ஸ்,நார்தெர்ன் நைட்ஸ், சௌதெர்ன் எக்ஸ்பிரஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x