Published : 17 Sep 2014 11:49 AM
Last Updated : 17 Sep 2014 11:49 AM

சாம்பியன்ஸ் லீக் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - சென்னை மோதல்

அதிரடி, சரவெடி, சிக்ஸர் மழைக்கு பெயர்போன சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் பிரதான சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. ஹைதராபாதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா அணியும், டி20 கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாகத் திகழும் சென்னை சூப்பர் கிங்ஸும் மோதுகின்றன.

கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மோர்ன் மோர்கல், ஆல்ரவுண்டர் கிறிஸ் லின் ஆகியோர் காயம் காரணமாக விலகிவிட்டனர். மற்றொரு ஆல்ரவுண்டரான வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் தனது நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறமுடியாததால் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. இது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மிரட்டும் உத்தப்பா

கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பலம் சேர்ப்பது தொடக்க வீரர் ராபின் உத்தப்பாதான். கடந்த ஐபிஎல் போட்டியில் 16 இன்னிங்ஸ்களில் ஆடி 660 ரன்கள் குவித்த அவர், சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் கேப்டன் கம்பீர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என தெரிகிறது.

மிடில் ஆர்டரில் ஜாக் காலிஸ், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், தஸ்தாத்தே, சூர்யகுமார் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது கொல்கத்தா. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அந்த அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்வது சுநீல் நரேன்தான். டி20 போட்டியின் தலைசிறந்த பந்துவீச்சாளரான அவர் சூப்பர் கிங்ஸுக்கு கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பெற வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சில் பட் கம்மின்ஸ், வினய் குமார், காலிஸ் ஆகியோரை நம்பியுள்ளது கொல்கத்தா.

பலம் வாய்ந்த சூப்பர் கிங்ஸ்

சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பதால் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அந்த அணியின் பலம் அதிகரித்துள்ளது. டுவைன் ஸ்மித்தும், டூபிளெஸ்ஸியும் அந்த அணியின் இன்னிங்ஸைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, பிரென்டன் மெக்கல்லம், கேப்டன் தோனி, டுவைன் பிராவோ ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்களில் ஒருவர் களத்தில் நின்றுவிட்டாலும் வலுவான ஸ்கோரை குவித்துவிடும் சூப்பர் கிங்ஸ்.

சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின் இடம்பெறுவார்கள். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மோஹித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஆசிஷ் நெஹ்ரா இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை நெஹ்ராவுக்குப் பதிலாக ஜான் ஹேஸ்டிங்ஸ் இடம்பெற்றால் மெக்கல்லம் நீக்கப்படுவார். ஏனெனில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெற முடியும்.

குரூப் சுற்றை தாண்டுமா கொல்கத்தா?

கொல்கத்தா அணி, சாம்பியன்ஸ் லீக்கில் இதுவரை குரூப் சுற்றை தாண்டியதில்லை. இதற்கு முன்னர் 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் குரூப் சுற்றில் விளையாடியுள்ளது. எனவே இந்த முறை குரூப் சுற்றை தாண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது தொடர்பாக அந்த அணியின் கேப்டன் கம்பீர் கூறுகையில், “சாம்பியன்ஸ் லீக் இதுவரை எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. இந்த முறை அந்த குறையைத் தீர்ப்போம்” என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

“எங்கள் அணி வலுவான அணி. நாங்கள் சூழலுக்கு ஏற்றவாறு எங்களை தகவமைத்துக் கொள்வதைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும். கடந்த ஐபிஎல் போட்டியில் பிராவோ காயம் காரணமாக ஆடவில்லை. அதனால் எங்களின் பலம் குறைந்தது. ஆனால் இப்போது அவர் வந்துவிட்டதால் எங்கள் அணி வலுப்பெற்றுள்ளது” என 2010-ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா: கௌதம் கம்பீர் (கேப்டன்), யூசுப் பதான், ராபின் உத்தப்பா, பியூஷ் சாவ்லா, வினய் குமார், உமேஷ் யாதவ், மணீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சுநீல் நரேன், ஜாக் காலிஸ், ரியான் டென் தஸ்சாத்தே, பட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், மன்விந்தர் பிஸ்லா.

சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ஆசிஷ் நெஹ்ரா, மிதுன் மன்ஹாஸ், அஸ்வின், ஈஸ்வர் பாண்டே, பவன் நெகி, ரவீந்திர ஜடேஜா, மோஹித் சர்மா, டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ, ஜான் ஹேஸ்டிங்ஸ், பிரென்டன் மெக்கல்லம், சாமுவேல் பத்ரி, டூ பிளெஸ்ஸி.

10 அணிகள், இரு பிரிவுகள்

போட்டியின் பிரதான சுற்றில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.

அதன்படி “ஏ” பிரிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், டால்பின்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 5-வது அணியாக லாகூர் லயன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

“பி” பிரிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், கேப் கோப்ராஸ், பர்படாஸ் டிரைடென்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 5-வது அணியாக தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்த அணிகள் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளை எதிர்த்து தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x