Published : 21 Jun 2017 04:28 PM
Last Updated : 21 Jun 2017 04:28 PM

சஞ்சய் பாங்கர் போல் ‘ஆமாம் சாமி’ போடுபவர்களை விராட் கோலி விரும்புகிறார் போலும்: மதன்லால் சாடல்

தனது பயிற்சி வழிமுறைகள் மீது விராட் கோலிக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பதாக அனில் கும்ப்ளே கூறி விடைபெற்றதையடுத்து விராட் கோலி மீது பலதரப்புகளிலிருந்தும் விமர்சனம் கிளம்பியுள்ளது.

ராமச்சந்திர குஹா இந்திய அணியில் நிலவும் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் பற்றியும் கேப்டனுக்கு இருக்கு சிறப்பு ‘வீட்டோ அதிகாரம்’ குறித்தும் கூறியதோடு இன்று பயிற்சியாளர் குறித்து சூப்பர் ஸ்டார் வீரர் முடிவெடுப்பார், நாளை அணித்தேர்வுக்குழுவையே இவர்கள் தேர்வு செய்வார்கள் என்று சாடினார். மேலும் தொலைக்காட்சி வர்ணனையில் யார் இடம்பெற வேண்டும் என்பதையே கேப்டனும், வீரர்களும் தீர்மானிக்கும் போக்கையும் ராமச்சந்திர குஹா சுட்டிக்காட்டினார்.

சுனில் கவாஸ்கரும், ‘ஊர்சுற்ற அனுமதி அளிக்கும்’ பயிற்சியாளர்தான் வேண்டுமென்றால் அதற்கு கும்ப்ளே ஆளில்லை என்று சாடியிருந்தார்.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரரும் 1983 உலகக்கோப்பை வெற்றியில் முக்கியப் பங்களிப்புச் செய்தவருமான மதன்லால் கிரிக்கெட் இணையதளம் ஒன்றில் கூறும்போது, “இவர்களுக்கு ‘ஆமாஞ்சாமி’ போடுபவர்கள் வேண்டும். தங்களது தன்னகங்காரத்தை உசுப்பேற்றி விடும் சஞ்சய் பாங்கர் போன்றவர்களே இவர்களுக்கு பொருத்தமானவர்கள். யாராவது இவர்களை நோக்கி கண்ணாடியைக் காண்பித்தாலோ, இவர்கள் மீது கேள்வி எழுப்பினாலோ அவர்கள் போய் விட வேண்டும். நான் 1996-97-ல் பயிற்சியாளராக இருந்த போதே இந்த நிலைமைதான். நான் 45% வெற்றி ரெக்கார்ட் வைத்திருந்த போதிலும் வெளியேற வேண்டியதாயிற்று.

காரணம் எனது நோக்கமெல்லாம், ஆசையெல்லாம் வெற்றி மீதே கண்ணாயிருந்ததே தவிர ஆட்களை நிர்வகிப்பதில் நான் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதென்பது வீரர்களின் ஈகோவையும் நிர்வகிக்க வேண்டும், வெற்றி மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்ற இரட்டைப் பளு உடையது.

அயல்நாட்டு பயிற்சியாளர்கள் ஏன் வெற்றியடைகிறார்கள் என்றால் அவர்கள் பின்னணியிலிருந்து பயிற்சி வேலையை மட்டும் பார்க்கிறார்கள், மூத்த வீரர்களின் அதிகாரத்தை கேள்வி கேட்க மாட்டார்கள். கேரி கர்ஸ்டன், ஜான் ரைட், பிளெட்சர் என்று யாராக இருந்தாலும் இது பொருந்தும். இவர்கள் வெற்றிப்பயிற்சியாளர்களாகவும் நீண்ட காலம் நீடித்ததற்கும் காரணம் மூத்த வீரர்கள் மீது கையை வைக்க மாட்டார்கள். ஒருமுறை அவர்கள் அதிகாரத்தை கேள்வி கேட்டால் என்ன நடக்கும் என்பதை நாம் கிரெக் சாப்பல் விவகாரத்தில் பார்த்தோம்.

மிகப்பெரிய ஆளுமைகளை மேய்க்க வேண்டும் என்பது சாதாரண விடயமல்ல, மிக மிக கடினமானது.

இந்திய கிரிக்கெட்டில் இதுதான் நடைமுறை, வீரர்கள்தான் தலைவர்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் எல்லாம் சூப்பர்ஸ்டார் கலாச்சாரம் இருக்க முடியாது. இந்தியாவில் கேப்டனை உரசினால் முடிந்தது உங்கள் கதை. ஆனாலும் கோலி-கும்ப்ளே இடையே என்ன பிரச்சினை என்று தெரியவில்லை, கும்ப்ளே இன்னமும் கொஞ்சம் மரியாதையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் கும்ப்ளேயின் கீழ் இந்திய அணி சாதித்ததை வைத்திருக்கும் போது அவர் இவ்வாறு வெளியேற்றப்படுவது வெட்கக் கேடானது.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு, பிசிசிஐ சமரச முயற்சியில் ஈடுபட்டனர், ஆனால் கடைசியில் கோலியின் ஈகோவே வென்றது. ஆனால் அடுத்த பயிற்சியாளருடன் கோலி எப்படி ஒத்துப் போவார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது, ஏனெனில் அவரும் கோலியுடன் ஒத்துப் போகாதவராக இருந்தால்...” என்று முடித்தார் மதன்லால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x