Last Updated : 23 Mar, 2017 08:45 AM

 

Published : 23 Mar 2017 08:45 AM
Last Updated : 23 Mar 2017 08:45 AM

கோலி கவுரவத்தை கெடுக்க முயற்சி: மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு

ஒரு சில ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கவுரவத்தை கெடுக்க முயற்சி செய்வதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் டெய்லி டெலிகிராப் நாளிதழ் விராட் கோலியை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. ட்ரம்ப்பை போன்றே கோலியும் தனது செயல்களை மூடிமறைக்க ஊடகங்களை குற்றம் சாட்டுவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது:

ட்ரம்ப்புடன் கோலியை ஒப்பிடுவது என்பது தவறானது. ஸ்மித்தை விட விராட் கோலி என்ன செய்துவிட்டார். எதையும் மனதில் வைத்து பேசவேண்டும். எனக்கு கோலியை மிகவும் பிடிக்கும். இதபோல் ஆஸ்திரேலிய மக்களும் அவரை விரும்புகிறார்கள். அவர் சவால்களை ஏற்றுக்கொண்டு செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

இரண்டு அல்லது மூன்று ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் விராட் கோலியின் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் விராட் கோலி அதுபற்றி கவலைப்படவில்லை. அதேபோல் ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதுவதை ஸ்மித்தும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

2005-ல் விளையாடிய ஆஷஸ் தொடரின் ஒவ்வொரு ஆட்டமுமே எல்லா வீரர்களுக்கும் வாழ்வா, சாவா என்பது போன்றே இருந்தது. ஆனால் களத்துக்கு வெளியே இரு அணி வீரர்களும் நட்புடன் இருந்தோம். தற்போதைய தொடரில் கடைசி போட்டி அவ்வாறு அமைந்துள்ளது.

விராட் கோலி கடினமான வீரர். நம்பர் ஒன் வீரராக இருக்க வேண்டுமானால் இதுபோன்றுதான் இருக்க முடியும். பெரிய அளவிலான சதத்துடன் அவர் திரும்பும் பட்சத்தில் தர்மசாலாவில் இந்திய அணி வெற்றி பெறுவதுடன் தொடரையும் வெல்லும்.

ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்யும் போது கோலி மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. எல்லா ஆட்டத்திலும் அவர் சதம் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். தர்மசாலாவில் நிச்சயமாக டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

டாஸ் வெல்லும் அணி வெற்றி பெறும் என கருதுகிறேன். மைதானத்தில் ஈரப்பதம் காணப்பட்டால் இந்திய அணி சற்று சிரமத்தை எதிர்கொள்ளும். முதலில் பேட் செய்யும் அணி 400 முதல் 500 ரன்களை குவிக்கக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x