Last Updated : 26 Apr, 2016 06:10 PM

 

Published : 26 Apr 2016 06:10 PM
Last Updated : 26 Apr 2016 06:10 PM

கையில் பணமின்றி வீடு திரும்ப தவித்த தருணம்: சச்சின் ருசிகரம்

கையிலிருந்த காசையெல்லாம் செலவு செய்து விட்டு ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறேன் என்று சச்சின் கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார்.

பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், ஒரு காலத்தில் ரயில் நிலையத்திலிருந்த வீட்டுக்கு வாகனத்தில் செல்ல காசில்லாமல் இருந்ததுண்டு என்று கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார்.

அதாவது அன்று, இப்போது போல் செல்போன் வசதியிருந்திருந்தால் சவுகரியமாக இருந்திருக்கும் என்பதற்காக இதனைக் குறிப்பிட்டார் சச்சின் டெண்டுல்கர்.

மும்பையில் ‘டிஜிபேங்க்’ தொடக்க விழாவில் கலந்து கொண்ட சச்சின் கூறியதாவது, “மும்பை 15 வயதுக்குட்பட்டோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட போது எனக்கு 12 வயது. நான் உற்சாகமாக இருந்தேன், பணம் எடுத்துக் கொண்டு புனே சென்று அங்கு 3 போட்டிகளில் ஆடவேண்டும்.

எனக்கு பேட்டிங் வாய்ப்பு வந்த போது நான் 4 ரன்களில் ரன் அவுட் ஆனேன். கடும் ஏமாற்றத்துடன் ஓய்வறைக்குத் திரும்பிய நான் அழத் தொடங்கினேன். அதன் பிறகு இன்னொரு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை, காரணம் அங்கு மழை பெய்யத் தொடங்கியது. வெளியே செல்வது படம் பார்ப்பது சாப்பிடுவது தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

பணத்தை எப்படி செலவு செய்வது, எப்படி சேமிப்பது என்று அறியாத நான் என் பாக்கெட்டில் இருந்த பணத்தைக் காலி செய்தேன். இந்நிலையில் மும்பைக்கு ரயிலில் திரும்பிய என்னிடம் பாக்கெட்டில் ஒரு நயா பைசா கூட இல்லை.

இரண்டு பெரிய பைகளை நான் சுமந்திருந்தேன். தாதர் ரயில் நிலையத்திலிருந்து சிவாஜி பார்க்கிற்கு நடந்துதான் செல்ல வேண்டிய நிலை. ஏனெனில் என்னிடம் காசு இல்லை. இப்போது போல் அது செல்போன் காலக்கட்டம் அல்ல.

போன் இருந்திருந்தால் ஒரேயொரு எஸ்.எம்.எஸ். போதும் எனது போனுக்கு பணம் மாறியிருக்கும் நான் ஒரு கார் வைத்துக் கொண்டு வீடு சேர்ந்திருப்பேன்”என்று தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை எடுத்துரைத்தார்.

மாறாக தொழில்நுட்பம் சில வேளைகளில் நமக்குச் சாதகமாக செல்லாது என்று கூறிய சச்சின் ஒரு எளிய நகைச்சுவையுடன் தான் முதன் முதலில் 3-வது நடுவரால் ரன் அவுட் கொடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.

3-வது நடுவர் தீர்ப்பளிக்கும் முறை வந்தவுடனேயே எனக்கு ரன் அவுட் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சில வேளைகளில் தொழில்நுட்பம் நமக்குச் சாதகமாக இருக்காது. நாம் பீல்டிங் செய்யும் போது 3-வது நடுவரிடமிருந்து சாதகமான தீர்ப்பு நமக்குத் தேவைப்படும் ஆனால் பேட்டிங் செய்யும் போது அல்ல.

1989-ல் நான் சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்துக்கு வந்த போது எங்களுக்கு முறையான ஸ்பான்சர் கூட கிடையாது. ஆனால் 2002-03-ல் ஓய்வறையில் கணினி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஓய்வறையில் கணினிக்கு என்ன வேலை? எப்படி பேட் செய்ய வேண்டும் என்று கணினி கற்றுக் கொடுக்க முடியுமா? ஆனால் போகப்போக தெரிந்து கொண்டோம், திட்டமிடுதல், செயல்படுத்துதல் வெறும் கற்பனை வளம் சார்ந்தது மட்டுமல்ல என்பதை.

அதாவது இந்த பேட்ஸ்மெனுக்கு இந்த இடங்களில் பந்து வீசக் கூடாது என்ற விவரங்களெல்லாம் கணினி மூலம்தான் கற்றுக் கொடுக்கப்பட்டது.

திட்டமிடுதலில் தொழில்நுட்பத்தின் பங்கு அபரிமிதமானது” என்றார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x