Published : 20 Dec 2014 05:41 PM
Last Updated : 20 Dec 2014 05:41 PM

கேப்டனாக தோனி 8 முறை ‘டக்’ அவுட் : பிரிஸ்பன் டெஸ்ட் புள்ளி விவரங்கள்

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் எதிரணியினர் 400 ரன்களுக்கும் மேல் முதல் இன்னிங்சில் அடித்த தருணங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதில்லை என்ற நிலவரம் ஸ்மித் தலைமை வெற்றியினால் மாறியுள்ளது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் சில சுவையான தகவல்கள்:

இந்திய கேப்டனாக தோனி டெஸ்ட் போட்டிகளில் 8-வது முறையாக ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளார் இன்று அவர் ஜோஷ் ஹேசில்வுட் ஸ்விங்கை தவிர்க்க மேலேறி வந்து ஆட முயன்றார். ஆனால் ஹேசில்வுட் மிடில் ஸ்டம்பில் நேராக ஒரு பந்தை வீச தோனி மேலேறி வந்ததால் தன்னைத் தானே யார்க் செய்து கொண்டார் பந்து பேடில் பட நடுவர் அவுட் என்றார்.

இதன் மூலம் ஒரு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக அதிக டக் அவுட்களை சந்தித்த வீரரானார் தோனி. மொத்தத்தில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் தன் கேப்டன்சி காலத்தில் 10 முறையும், நியூசிலாந்தின் கேப்டனாக இருந்த காலத்தில் ஸ்டீவன் பிளெமிங் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர். ஆகவே, தோனி இதில் 3ஆம் இடம் பிடித்துள்ளார்.

கேப்டன்சியில் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஸ்டீவன் ஸ்மித் அந்த வகையில் 9-வது கேப்டனாகத் திகழகிறார். இதற்கு முன்னதாக அனில் கும்ளே, பிரெண்டன் டெய்லர், கிரெக் சாப்பல், இம்ரான் கான், கெவின் பீட்டர்சன், சந்தர்பால், ஷாகிப் அல் ஹசன், வக்கார் யூனிஸ் ஆகியோர் முதல் டெஸ்ட் கேப்டன்சியில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்கள்.

2-வது இன்னிங்ஸில் ஷேன் வாட்சன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவரது விக்கெட்டை டெஸ்ட் போட்டிகளில் 6-வது முறையாகக் கைப்பற்றியுள்ளார் இசாந்த் சர்மா. ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 முறையும், ஸ்டூவர்ட் பிராட் 7 முறையும் ஷேன் வாட்சனை வீழ்த்தியுள்ளனர்.

தொடர்ந்து 9-வது டெஸ்டாக இந்தியா 100 ரன்கள் அல்லது அதற்கு குறைவான ரன்களில் 5 அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகளை மடமடவென இழந்துள்ளனர். இன்று பிரிஸ்பனில் 71/1 என்ற நிலையிலிருந்து 117/6 என்று சரிந்தனர்.

46-வது இன்னிங்சில் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று 2,000 ரன்களைக் கடந்துள்ளார். ராகுல் திராவிட் 40 இன்னிங்ஸ்களில் முதல் 2000 டெஸ்ட் ரன்களை எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் ரன் விகிதம் 4.12. ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் இதுவே அதிக ரன் விகிதம். ஒட்டுமொத்தமாக 9-வது உயர்ந்த ரன் விகிதம் ஆகும் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x