Last Updated : 24 Jul, 2014 11:40 AM

 

Published : 24 Jul 2014 11:40 AM
Last Updated : 24 Jul 2014 11:40 AM

கூடைப் பந்துக்கு வளமான எதிர்காலம்: ஒலிம்பியன் என். அமர்நாத் நம்பிக்கை

அன்று கிரிக்கெட்டில் மிகப் பிரபலமான பெயர் லாலா அமர்நாத். அவரைப் போலவே தன் மகனும் கிரிக்கெட் வீரராகி இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற கனவு தன் அம்மாவிற்கு இருந்தது. அதனாலேயே தமிழகத்தைச் சேர்ந்த எனக்கு வித்தியாசமாக அமர்நாத் என்று பெயர் வைத்தார் என் அம்மா என்று கூறிய தமிழகத்தின் முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் ஒலிம்பியன் என். அமர்நாத், தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இன்றளவிலும் ஒலிம்பிக் கூடைப் பந்தாட்ட போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழர் என்ற பெருமையைக் கொண்டவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கூடைப்பந்து அணிக்கு கேப்டனாக இருந்த ஒரே தமிழரும் இவர்தான். `தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:

கூடைப்பந்து போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

பொதுவாகவே எல்லோரையும் போல நானும் கிரிக்கெட்தான் விளையாட ஆரம்பித்தேன். பின்னர் பள்ளி நாட்களில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது ஆண்டுதோறும் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடக்கும். இந்தியா முழுவதிலும் இருந்து தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் இங்கு வந்து விளையாடுவார்கள். மிகப் பெரிய அளவில் கோலாகாலமாக நடக்கும் இந்த போட்டி என்னை ஈர்த்தது.

கூடைப்பந்தாட்டம்தான் இனி என் விளையாட்டு என்ற முடிவை எடுக்க வைத்தது. அதனால் இந்த விளையாட்டில் எந்த ஒரு இடத்தையும் விட்டு விடக் கூடாது என்பதற்காக `ஆல் ரவுண்டராக’வே இருந்தேன். சுமார் 60 ஆண்டுகளாக தேசிய அளவிலான கூடைப்பந்து பெரிய குளத்தில் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அந்நாளில் மிகச் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்.

ஆரம்பகாலத்தில் கூடைப்பந்தாட்டம் குறித்த உங்கள் லட்சியம் என்ன?

கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது. அப்படி இடம் பிடித்துவிட்டால் மதுரை `யுனிவர்சிட்டி ப்ளூஸ்` என்று அழைப்பார்கள். இந்த அணியில் இருந் தால்தான் நீல வண்ணத்தில் ஒரு கோட்டு கொடுப்பார்கள். அதனால்தான் அவ்வணியினருக்கு `யுனிவர்சிட்டி ப்ளூஸ்’ என்று பெயர். அப்போதெல்லாம் இந்த கோட்டை பெற்றுவிட வேண்டும் என்பதுதான் மிகப் பெரிய கனவாக இருந்தது. அந்த அணியில் இருந்தபோதுதான் தமிழக அணிக்கு தேர்வானேன்.

பின்னாளில் தமிழக அணியின் கேப்டனாகவும் உயர்ந்த நான், இந்திய அணியிலும் இடம் பிடித்தேன். அந்த நேரத்தில்தான் இந்திய கூடைப்பந்து அணி வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. இந்திய அணி அங்கே நடந்த 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்த அணியில் சிறப்பாக விளையாடிய பன்னிரெண்டு பேரைத் தேர்வு செய்து, அதிலிருந்து நான்கு பேரை முதல் `ரேங்க்’களில் தரவரிசைப்படுத்தியபோது என்னுடைய பெயரும் அதில் இருந்தது.

ஒலிம்பிக் அனுபவம் பற்றி…

1980-ல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. அந்தப் போட்டியில் அமெரிக்கா பங்கேற்காததைத் தொடர்ந்து அதன் நட்புறவு நாடுகளான (ஆசிய நாடுகள்) சீனா, ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் புறக்கணித்தன. இதையடுத்து ஆசிய தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அப்போது தமிழகத்தைச் சேர்ந்த எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்னர் ஒலிம்பிக் கூடைப் பந்து போட்டிகளில் இந்திய அணி கலந்து கொண்டதே இல்லை. அதற்குப் பிறகும் இன்று வரை எந்த ஒலிம்பிக்கிலும் கூடைப்பந்து போட்டியில் இந்தியா பங்கேற்கவில்லை. அதனால் கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்தின் ஒரே ஒலிம்பியன் என்றானேன்.

கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி இருந்தது?

பெரியகுளத்தில் விளையாடியபோது எனக்கு, என் கூடவே விளையாடிய என் தம்பி ரமேஷ் சந்திர வித்யா சாகர் உட்பட பலருக்கு `ஸ்டேட் வங்கி’யில் கூடைப் பந்தாட்ட விளையாட்டிற்காகவே வேலை கிடைத்தது. மத்திய அரசுப் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகவே அந்த காலத்தில் பலர் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டினார்கள் என்பதுதான் உண்மை.

இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இன்றைய இளைஞர்கள் பொழுது போக்கு அம்சங்களில் நேரத்தை வீணடிப் பதைத் தவிர்த்து விட்டு, விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டால் அவர்களது கனவுகள் சாதனைகளாக மெய்ப்படும். விளையாட்டினால் புத்தி கூர்மை அதி கரிக்கும். இதனால் கல்வியிலும் சிறந்து விளங்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இப்படி பலவிதமான பயன்களை அளிக்கும் விளையாட்டை அரசும் ஊக்குவித்து வருகிறது. இளை ஞர்கள் திறமைகளை உழைப்பின் மூலம் வளர்த்துக் கொண்டாலே போதும் சாதித்துவிடலாம். கூடைப்பந்து விளையாட்டில் தமிழகத்திலேயே இன்றளவும் ஒரே ஒலிம்பியன் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ள என். அமர்நாத், இவ்விளையாட்டிற்கு நல்ல வளமான எதிர்காலம் தென்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x