Published : 23 Jul 2014 02:33 PM
Last Updated : 23 Jul 2014 02:33 PM

காமன்வெல்த்-10

1. காமன்வெல்த் போட்டி சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை உள்ளடக்கிய போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த நாடுகளும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளும் பங்கேற்று வருகின்றன.

2. ஸ்காட்லாந்தில் 3-வது முறையாக காமன்வெல்த் போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1970, 1986 ஆகிய ஆண்டுகளில் ஸ்காட்லாந்தில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் கிராமம், 54 கால்பந்து மைதானங்களுக்கு இணையானதாகும்.

3. காமன்வெல்த் போட்டி மனிதாபிமானம், சமத்துவம் உள்ளிட்டவற்றை வலியுறுத்துகிறது. காமன்வெல்த் நாடுகளிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

4. பொதுவாக சர்வதேச போட்டிகளில் பிரிட்டனில் உள்ள இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய 3 நாடுகளும் பிரிட்டன் சார்பில் பங்கேற்கும். இந்த காமன்வெல்த் போட்டியில் மட்டுமே மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் தாய்நாட்டுக்காக களமிறங்குகின்றனர்.

5. காமன்வெல்த் போட்டி முதல்முறையாக 1930-ல் கனடாவின் ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. அப்போது 11 நாடுகளைச் சேர்ந்த 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 6 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு 71 அணிகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 17 பிரிவுகளில் 261 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.

6. இந்த விளையாட்டுப் போட்டி 1978 முதல் காமன்வெல்த் போட்டி என்றழைக்கப்படுகிறது. அதற்கு முன்னர் பிரிட்டிஷ் பேரரச விளையாட்டுப் போட்டி, பிரிட்டிஷ் பேரரச மற்றும் காமன்வெல்த் போட்டி, பிரிட்டிஷ் காமன்வெல்த் போட்டி என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தன.

7. காமன்வெல்த் போட்டி ஒலிம்பிக்கிற்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வீரர், வீராங்கனையும் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்வதை தங்கள் வாழ்நாள் கனவாகவும், தங்கள் விளையாட்டு வாழ்க்கையின் மிகப்பெரிய மைல்கல்லாகவும் கருதுகின்றனர்.

8. ஒலிம்பிக் ஜோதியைப் போல காமன்வெல்த் போட்டியிலும் ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது. இதை காமன்வெல்த் ஜோதி (குயின் பேட்டன் ரிலே) என அழைக்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்ட இந்த ஜோதி சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் கி.மீ. பயணத்துக்குப் பிறகு போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்தை வந்தடைந்தது. ஸ்காட்லாந்தில் 40 நாள்கள் 400 நகரங்களில் 4 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த ஜோதி, தற்போது போட்டி நடைபெறும் இடத்தை வந்தடைந்திருக்கிறது.

9. டென்னிஸ், வில்வித்தை உள்ளிட்ட போட்டிகள் நீக்கப் பட்டுள்ளன. டிரையத்லான் போட்டி முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. மவுண்டைன் பைக்கிங் போட்டி 2006-க்குப் பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

10. மாற்றுத்திறனாளிகளுக்காக 5 பிரிவுகளில் (தடகளம், சைக்கிளிங், லான் பௌல்ஸ், நீச்சல், பளுதூக்குதல்) 22 வகையான பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. காமன்வெல்த் வரலாற்றில் அதிக பாரா விளையாட்டுப் போட்டிகளைக் கொண்டது இந்த காமன்வெல்த் போட்டிதான். பாரா விளையாட்டில் முதல்முறையாக சைக்கிள் போட்டி இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x