Last Updated : 23 Jul, 2014 12:00 AM

 

Published : 23 Jul 2014 12:00 AM
Last Updated : 23 Jul 2014 12:00 AM

கட்டியங் கூறும் வெற்றி

இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட் விழுந்தபோது இந்திய அணியினர் ஆனந்தக் கூத்தாடினார்கள். வழக்கம்போல வெற்றியின் நினைவுச் சின்னமாக ஸ்டெம்ப் ஒன்றை அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி எடுத்துக்கொண்டார். அற்புதமாகப் பந்து வீசி எதிரணியை அவர்களது பாசறையிலேயே நிலைகுலைய வைத்த இஷாந்த் ஷர்மாவை அனைவரும் கொண்டாடினார்கள். இது வெறும் வெற்றிக் கொண்டாட்டம் அல்ல. புதிய வரலாறு எழுதப்படுவதற்கான கட்டியம் என்று சொல்லலாம். ஜாம்பவான்கள் அனைவரும் விலகிவிட்ட நிலையில் இளம் அணி என்ன செய்யப்போகிறது என்னும் கேள்விக்கு இளைஞர்கள் நம்பிக்கை தரும் பதிலை அளித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி டெஸ்ட் அரங்கில் தனது தடத்தை அழுத்தமாகப் பதித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய தொடர்களில் வெல்லவில்லை என்றாலும் மோசமாகத் தோற்கவும் இல்லை. தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்டில் வெற்றியின் விளிம்புவரை வந்தது. மட்டையாட்டம், பந்து வீச்சு என இரண்டிலும் இளைஞர்கள் போராடும் குணத்தையும் தொடர்ந்து மெருகேற்றப்பட்டுவரும் திறமையையும் காட்டிவருகிறார்கள்.

முரளி விஜய், ஷிகர் தவன், சதீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகிய மட்டையாளர்களை நேற்றைய சாதனையாளர்களுடன் ஒப்பிடப்படுவதற்கான காலம் இன்னமும் வரவில்லை என்றாலும் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் உருவான வலுவான மட்டை வரிசைக்கு இணையாக இவர்கள் உருவாகிவிடுவார்கள் என்று நம்பக்கூடிய விதத்தில் ஆடிவருகிறார்கள்.

டெஸ்ட் போட்டிகளுக்குத் தேவையான பொறுமை, தடுப்பு ஆட்டத்தில் கவனம், அடித்து ஆட வேண்டிய நேரத்தில் துணிச்சலும் வேகமும் காட்டுவது என இந்த இளைஞர்கள் தங்கள் திறமையை மெருகேற்றிவருகிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொருவரும் இந்த ஆண்டில் ஓரிரு முறைகளாவது அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் இந்திய மட்டையாளர்களுக்கு அவஸ்தையை ஏற்படுத்திவரும் அந்நிய ஆடுகளங்களில் அவர்கள் இதைச் செய்திருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர ரோஹித் ஷர்மா, தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இருப்பதால் மட்டை வீச்சில் இந்தியா பத்திரமான நிலையில் இருப்பதாக ஆறுதல் அடையலாம்.

மட்டை வீச்சில் இந்திய அணி எப்போதுமே உலக அரங்கில் மதிக்கப்பட்டுவருவதால் இப்போதைய நிலையை அதன் தொடர்ச்சியாகத்தான் கொள்ள வேண்டும். மட்டை வலிமையை விடவும் தெம்பு தரக்கூடிய ஒரு மாற்றம் என்றால் அது பந்து வீச்சில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். தென்னாப்பிரிக்காவில் வெற்றிக்கு அருகே அணியைக் கொண்டுவந்தவர்கள் இளம் பந்து வீச்சாளர்கள்தான். இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகள் கழித்து வெற்றிபெறவைத்ததும் இளம் பந்து வீச்சாளர்கள்தான்.

டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை 20 விக்கெட்களை எடுக்கக்கூடிய பந்து வீச்சு இல்லையென்றால் வெற்றிபெற முடியாது. 1000 ரன் அடித்தாலும் வெற்றி கிட்டாது. 20 விக்கெட்களை எடுக்க வேண்டும். கடந்த முறை (2011) லார்ட்ஸில் ஆடியபோதும் இந்த முறை ஆடியபோதும் இந்திய அணி எடுத்த ஓட்டங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. 2011-ல் முதல் இன்னிங்ஸில் 286. இரண்டாவது இன்னிங்ஸில் 261. இந்த முறை முதல் இன்னிங்ஸில் 295. இரண்டாவது இன்னிங்ஸில் 342. இரண்டாவது இன்னிங்ஸில் முக்கியமான விக்கெட்கள் அனைத்தும் வீழ்ந்த நிலையில் ஜடேஜா மேற்கொண்ட அதிரடியால் கிடைத்த கூடுதல் ஓட்டங்கள் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தின.

ஆனால் பத்து விக்கெட்களை எடுக்கும் வல்லமை கொண்ட பந்து வீச்சுதான் வெற்றியைப் பரிசளித்தது. வேகம் கூடிய இஷாந்த் ஷர்மாவின் எகிறு பந்துகள் இங்கிலாந்து மட்டையாளர்களின் பொறுமையைச் சோதித்து ரோஷத்தைச் சீண்டின.

ஓரிரு மட்டையாளர்கள் எகிறு பந்தைச் சரியாகக் கணிக்காமல் ஆடி ஆட்டமிழந்தாலும் மற்றவர்கள் பவுன்சரைப் புல் ஷாட்டால் எதிர்கொள்ளும் ஆவேசத்தைக் காட்டினார்கள். அடுத்தடுத்து விக்கெட் விழ ஆரம்பித்த பிறகு இத்தகைய ஆட்டம் தற்கொலைக்கு ஒப்பானது. வேண்டிய ரன்களை எடுக்க நிறைய அவகாசம் இருந்தபோதிலும் இங்கிலாந்து மட்டையாளர்கள் இப்படி ஆடியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதுவும் ஆட முடியாத எகிறு பந்துக்கு மொயின் அலி அவுட் ஆன நிலையில் அடுத்து வந்தவர்கள் சற்றே விவேகத்தைக் காட்டியிருந்தால் இங்கிலாந்து வெற்றியைக்கூட அடைந்திருக்கலாம். ஆனால் ஆவேசம் விவேகத்தை வென்றது.

மட்டையாளர்கள் பவுன்சரைக் கண்டதும் மட்டையை வீசினார்கள். பவுண்டரிகள் வந்தன. இந்தியா கவலைப்படவில்லை. வழக்கமாகத் தடுப்பு வியூகத்துக்குள் பதுங்கும் தோனி இந்த முறை தன் பந்து வீச்சாளர்களை முழுமையாக நம்பினார்.

தொடர்ந்து குறைந்த அளவிலான பந்துகளை வீசவைத்து மட்டையாளர்களை உசுப்பிக்கொண்டே இருந்தார். ஓட்டங்களைத் தடுப்பதை முதன்மையாகக் கொள்ளாமல் கேட்ச் வரக்கூடிய இடங்களில் தடுப்பாளர்களை நிறுத்தினார். அவர் சொன்னபடி ஷர்மா துல்லியமான எகிறு பந்துகளை வீசினார்.

நியூஸிலாந்தில் செய்த தவறை (தவறான வரிசையில் எகிறு பந்துகளை வீசுவது) இங்கே செய்யவில்லை. விளைவு, விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. இந்தியா வென்றது. வரலாறு படைத்தது.

இந்த வெற்றிக்குப் பின் இங்கிலாந்து மட்டையாளர்களின் பலவீனமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றாலும் இந்திய அணி தன் வேலையைக் கச்சிதமாகவும் தைரியமாகவும் செய்தது.

வெளி மண்ணில் ஆடும்போதெல்லாம் முதல் டெஸ்டில் தோற்று அதன் பிறகு தன்னம்பிக்கை இழந்த நிலையில் தொடரின் இதர போட்டிகளை எதிர்கொள்ளும் பழக்கம் கொண்ட இந்தியா முதல் டெஸ்டில் 450க்கு மேல் முதல் இன்னிங்ஸில் எடுத்து வலுவான முறையில் தன் கணக்கைத் தொடங்கியது. இரண்டாம் இன்னிங்ஸில் மட்டை வரிசை ஆட்டம் கண்டபோது புது ஆட்டக்காரர் ஸ்டூவர்ட் பின்னி ரட்சகராக மாறி அணியை மீட்டார். இரண்டாவது போட்டியில் மட்டை, தடுப்பாட்டம், பந்து வீச்சு, வெற்றிக்கான உத்தி என எல்லா விதங்களிலும் அணி சீராகச் செயல்பட்டு வெற்றிகண்டது.

இங்கிலாந்து அணி சுதாரித்துக்கொண்டு இதர போட்டிகளில் நன்றாக ஆடித் தொடரை வெல்லலாம். ஆனால் இந்த இரண்டு போட்டிகளில் இந்திய இளம் அணியினர் வெளிப்படுத்திய அணுகுமுறையும் ஆட்டமும் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அதுவே இந்த வெற்றியின் ஆகப் பெரிய நன்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x