Published : 24 Aug 2016 09:14 AM
Last Updated : 24 Aug 2016 09:14 AM

ஒலிம்பிக்கில் தண்ணீர் கொடுக்கவில்லை என புகார்: ஜெய்ஷா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைப்பு- மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் உத்தரவு

கேரளாவை சேர்ந்த 33 வயது ஓ.பி. ஜெய்ஷா ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான 42 கிலோ மீட்டர் மாரத்தானில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இதில் அவர் 89-வது இடத்தை பிடித்த நிலையில், எல்லைக் கோட்டை தொட்டதும் மயக்கமடைந்து விழுந்தார். இலக்கை 2 மணி 47 நிமிடம் 19 விநாடிகளில் அவர் கடந்தார். ரியோ நேரப்படி காலை 9 மணிக்கு இந்த போட்டி தொடங்கியுள்ளது. அப்போது கடும் வெயிலும் இருந்துள்ளது. மாரத்தான் போட்டியை பொறுத்த வரை, சுமார் 8 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் பொது குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். வீரர்கள் அதில் தண்ணீர் பாட்டில்கள், எனர்ஜி டிரிங்க்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

அதுதவிர, போட்டியில் பங்கேற் கும் வீராங்கனையின் சொந்த நாட்டினர் தங்கள் விருப்பப்படி இரண்டரை கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் குடிநீர் மையம் அமைக்கலாம். அந்த வகையில் மற்ற நாட்டினர் குடிநீர் மையம் வைத்திருந்திருந்தனர். ஒவ் வொரு இரண்டு கிலோ மீட்டருக்கும் இந்தியக் கொடி இருந்துள்ளது. ஆனால் அங்கே தண்ணீர் பாட்டில்களோ குளிர் பானங்களோ வைக்கப்பட வில்லை. ஜெய்ஷாவுக்கு தண்ணீர் கொடுக்கவும் யாரும் இல்லை.

பிற நாட்டினர் வைத்திருக்கும் ஸ்டால்களிலும் தண்ணீர் அருந்த முடியாது. அருந்துவது விதி மீறல். அப்படி அருந்தினால், ஊக்க மருந்து சோதனையின்போது பிற நாட்டினரைக் குற்றம் சொல்லும் வாய்ப்புள்ளதால் அப்படி ஒரு விதி. இந்த நிலையில்தான் உயிரை பணயம் வைத்து ஓடியிருக்கிறார் ஜெய்ஷா.

ஆனால் ரியல் ஸ்போர்ட்ஸ் மேன் ஷிப்புடன் எல்லைக் கோட்டை அடைந்து விட்டார். என்னால் ஓட இயலவில்லை என ஒதுங்கி விடவில்லை. எல்லைக் கோட்டைத் தொட்டதும் ஜெய்ஷா மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்துள்ளார்.

இதுதொடர்பாக தாயகம் திரும்பியதும் ஜெய்ஷா கடுமை யாக குற்றம் சாட்டினார். இந்திய அணியின் தொழில்நுட்ப அதி காரிகள் தான் குடிதண்ணீர் வசதி களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே விதிமுறை. இதர அணிகளிடம் இருந்து நாங்கள் தண்ணீர் பெற முடியாது. இலக்கை எட்டியபோது மயங்கிவிட்டேன். உயிரிழந்துவிடுவேன் என்றே நினைத்தேன். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் ஜெய்ஷா கூறினார்.

இதுதொடர்பாக விளை யாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கூறும்போது,

‘‘இச்சம்பவத்துக்கு இந்திய தடகள சம்மேளனமே பொறுப்பு. ஒவ்வொரு சம்பவத்தையும் நாங்கள் கவனத்தில் கொள்கி றோம்’’ என்றார்.

உதவியை மறுத்தனர்

இதற்கிடையே இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்,

‘‘ஜெய்ஷாவும் கவிதா ராவத்தும் தங்களுக்கு எவ்வித உதவியும் தேவையில்லை என்று முன்பே கூறிவிட்டார்கள். மேலும் நாங்களாக அவர்களுக்கு எதுவும் தரக்கூடாது. அப்படிச் செய்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

ஒலிம்பிக் நிர்வாகம் வழங்கும் உணவு மற்றும் பானங் களையே அவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் அவர்களே வேண்டாம் என்று அணியின் மேலாளரிடம் சொல்லிவிட்டதால் அதற்குமேல் அவர்களுக்கு எங்களால் எதுவும் உதவமுடிய வில்லை’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால் தடகள சம்மே ளனத்தின் இந்த விளக்கத்துக்கு ஜெய்ஷா எதிர்ப்பு தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் விசாரணை வேண்டும். இந்திய தடகள சம்மேளன அதிகாரிகள் அந்த இடத்தில் இல்லாதபோது அவர்களுக்கு எப்படி உண்மை தெரியும்?

போட்டி நடைபெற்ற இடத்தில் கேமராக்கள் இருந்தன. அதை வைத்து சோதனை செய்துகொள்ள லாம். இந்த விஷயத்தில் நான் ஏன் பொய் சொல்லவேண்டும். என் வாழ்க்கையில் இதுவரை நான் புகார் செய்ததே இல்லை. அரசுக்கும் தடகள சம்மேளனத் துக்கும் எதிராக என்னால் போராட முடியாமல் போகலாம். ஆனால் கடவுளுக்கும் எனக்கும்தான் உண்மை தெரியும்" என்றார்.

விசாரணை குழு

இந்த நிலையில் ஜெய்ஷா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 2 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த விசாரணை குழுவில் விளையாட்டுத்துறை இணை செயலர், இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒருவார காலத்துக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x