Last Updated : 25 Feb, 2017 07:00 PM

 

Published : 25 Feb 2017 07:00 PM
Last Updated : 25 Feb 2017 07:00 PM

ஒரு பேட்ஸ்மெனுக்கு 5 கேட்ச்களை விட்டால் வெற்றி பெற தகுதில்லை: விராட் கோலி பேட்டி

சமீப காலங்களில் இந்திய வீரர்கள் இவ்வளவு மோசமாக ஆடியதில்லை என்று கூறிய விராட் கோலி, பேட்டிங்கே அணியைத் தோல்விக்கு இட்டுச் சென்றது என்றார்.

ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

பேட்டிங்கே எங்கள் பின்னடைவுக்குக் காரணம். நாங்கள் சரியாக எங்களை செலுத்தி ஆடவில்லை, சொல்லிக்கொள்ளும் படியான பார்ட்னர்ஷிப்புகள் இல்லை. இதுதான் இதற்கு முன்னர் நம்மை பெருமைக்கு இட்டு சென்றது. ஆனால் இன்று காலைவாரிவிட்டது. எனவே பேட்ஸ்மென்கள் உறுதியாக ஆட வேண்டும். பேட்டிங் நிச்சயம் தரமானதாக இல்லை, எப்படி பேட் செய்ய கூடாது என்பதை வெளிப்படுத்தியதாகவே நம் பேட்டிங் அமைந்தது. இவ்வளவுதான் என்னால் கூற முடியும்.

இந்தப் பிட்சில் முதல் இன்னிங்ஸில் 155 ரன்களை முன்னிலை அளித்தது ‘கிரிமினல்’. 4-5 வீரர்கள் கணிப்பில் பிழை செய்தது அரிதாகவே நடக்கும், குறிப்பாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் தவறான கணிப்பு தொடர்ந்தது. இது படுமோசமான பேட்டிங்காகும். நாம் இதனை ஒப்புக் கொண்டு பெங்களூர் டெஸ்ட் போட்டியில் முன்னேற்றம் காட்ட வேண்டும். இன்னும் நிறைய கிரிக்கெட் இந்தத் தொடரில் மீதமுள்ளது.

நான் அவுட் ஆனவிதம் குறித்து கூற வேண்டுமெனில், நான் கொஞ்சம் முன் கூட்டியே பந்தை ஆடாமல் விட முடிவு செய்தேன், நான் பந்து மேலும் வர காத்திருந்திருக்க வேண்டும் அது என் தவறுதான்.

இது இன்னொரு சர்வதேச போட்டி, ஒன்றும் பெரிய டீல் இல்லை. வெற்றி பெறும்போது எப்படி அமைதியாக இருக்கிறோமோ அதே போல் தோல்வியடையும் போதும் அமைதியாக யோசிக்க வேண்டும்.

கடந்த முறை இது போன்று பேட்டிங் ஆடிய போது இலங்கையில் கால்லெ டெஸ்ட் போட்டியிலிருந்து அனைத்தும் மாறியது, தொடரை வென்றோம், அது போல்தான் எங்களை விழித்துக் கொள்ளச் செய்ய இந்தத் தோல்வி தேவைதான். இப்போதுதான் எந்தப் பகுதியில் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதும், எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது குறிப்பாக சர்வதேச போட்டிகளில் எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ள கூடாது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரே பேட்ஸ்மெனுக்கு 5 கேட்ச்களை விடும்போது நாம் வெற்றி பெற தகுதியற்றவர்கள், அதேபோல்தான் 11 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் வெற்றி பெறத் தகுதியில்லை என்றே பொருள். நாம் வென்றிருந்தால் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் என்பதில் உறுதியாக உள்ளேன். முடிவுகளினால் நம் மனநிலை மாறுவதில்லை.

நான் பவுலர்களை குறைகூறவே மாட்டேன். நம் பேட்ஸ்மென்கள்தான் இந்த நிலைமைக்குக் காரணம். அவ்வளவு பெரிய லீடைக் கொடுத்து விட்டு மீண்டெழுவது இயலாத காரியம், பவுலர்கள் பெரிதளவு முயன்று பார்த்தார்கள்.

நல்ல கிரிக்கெட் ஆடினோம் வெற்றி பெற்றோம், மோசமாக ஆடினோம் தோல்வியடைந்தோம், அப்படித்தான் எளிமையாக இந்தத் தோல்வியை பார்க்க வேண்டும். அடுத்த போட்டியில் இந்தத் தவறுகளை செய்யாமல் வலுவாக திரும்ப வேண்டும். நிச்சயம் அடுத்த போட்டியில் இன்னும் தீவிரமாகக் களமிறங்குவோம், முதல் பந்திலிருந்தே ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்குள்ளாக்குவோம்.

18-19 போட்டிகளில் தோல்வியுறாமல் ஆடிய பிறகே இந்தத் தோல்வி பற்றி அதிகம் நான் நினைக்கப்போவதில்லை. ஒரு ஆட்டம், தோல்வி என்பது ஆட்டத்தின் ஒரு அங்கமே. நாம் தோற்கவே கூடாது என்பதாக மக்கள் நினைப்பதாக நான் கருதவில்லை. நல்ல கிரிக்கெட் ஆடவில்லை எனில் எந்த அணியும் நம்மை வீழ்த்தவே செய்யும். பவுலிங்கிலிருந்து பாசிட்டிவான அம்சங்களை எடுத்துக் கொள்கிறேன்.

நம் பவுலர்கள் பந்துகளை அதிகம் திருப்பியதால் எட்ஜைப் பிடிக்க முடியவில்லை. பந்தைக்குறைவாக திருப்பியவர்கள் விக்கெட் வீழ்த்தினர். ஒன்றுமேயில்லாத பிட்சில் கூட நாம் சரியாக நம்மை செலுத்திக் கொள்ளவில்லையெனில் அவுட் ஆகவே வாய்ப்புள்ளது.

நாம் சரியாக, கவனமாக ஆடாத போது பகுதி நேர வீச்சாளர் கூட 4 விக்கெட்டுகளை வீழ்த்துவார். என்னைப் பொறுத்தவரை இந்த பேட்டிங் சரிவை இப்படித்தான் பார்க்கிறேன்.

பிட்சைக் குறைகூறிப் பயனில்லை, இதே போன்ற பிட்ச்களில்தான் முன்னரும் ஆடினோம், இந்தப் போட்டியில் சரியாக ஆடவில்லை அவ்வளவே.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x