Published : 28 Aug 2014 03:02 PM
Last Updated : 28 Aug 2014 03:02 PM

ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆடிவிட்டால் நாம் உடனே பீடத்தில் அமர்த்திவிடுகிறோம்: தோனி

இங்கிலாந்துக்கு எதிரான ரெய்னாவின் சதம் அற்புதமானது என்று வருணித்துள்ள கேப்டன் தோனி, அவர் சோபிக்காது போயிருந்தால் கேள்விகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் என்றார்.

நேற்றைய வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் தோனி கூறியதாவது:

“ரெய்னாவின் இன்னிங்ஸ் அற்புதமானது, 30வது ஓவர் முடியும் போது கூட நாங்கள் நிறைய ரன்களை எடுத்திருக்கவில்லை. எனவே ரெய்னா நிற்பது அவசியம் என்றானது. ஏனெனில் அவர்தான் நேற்று மிகவும் அனாயசமாக ஆடினார். நாங்கள் இருவரும் நின்றால், நிச்சயம் நிறைய ரன்களை இந்தப் பிட்சில் குவிக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்.

ரெய்னா மிகவேகமாக ரன் குவிக்கு ஒரு பேட்ஸ்மென், மேலும் அவர் முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடுபவர். அரைசதத்தை அவர் உறுதி செய்தவுடன் சில அபூர்வமான ஷாட்களை அவர் ஆடினார்” என்றார்.

இந்த சதம் மூலம் வரும் உலகக் கோப்பையில் அவரது இடம் உறுதியானதா என்ற கேள்விக்கு பதில் அளித்த தோனி, “ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடினால் அவரை உடனே நாம் பீடத்தில் ஏற்றுகிறோம். ஆனால் இந்த இன்னிங்சை அவர் இப்படி ஆடியிருக்காவிட்டால் கேள்விகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வரும் அக்டோபர் மாதத் தொடரில் ரெய்னா சோபிக்காது போய்விட்டால் கேள்விகள் மீண்டும் வேறு விதமாக இருக்கும். நாம் இப்போதைக்கு இது சிறந்த சதம் என்று மட்டும் கூறுவோம், உலகக் கோப்பைக்கு இன்னும் சில காலம் இருக்கிறது, அவர் காயமடையாமல் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் இந்திய அணிக்கு நல்லது” என்றார்.

அதேபோல் ஜடேஜா பற்றி கூறுகையில், “எப்போதெல்லாம் பிட்ச் லேசாக பந்துகளைத் திரும்ப அனுமதிக்கிறதோ அப்போதெல்லாம் ஜடேஜா சிறப்பாக வீசுகிறார்.

நாம் பல காலமாக 5 பவுலர்களுடன் விளையாடி வருகிறோம், ஜடேஜா, அஸ்வின் இருவரும் பந்து வீசுவதோடு பேட்டிங்கும் செய்கின்றனர். ரெய்னா இருக்கிறார். இவர் முக்கியப் பந்து வீச்சாளர்கள் எடுபடாத போது 5 அல்லது 6 ஓவர்களை வீசக்கூடியவர்.

வேகப்பந்து வீச்சாளர்களிடத்தில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை”

என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x