Published : 04 Oct 2015 01:00 PM
Last Updated : 04 Oct 2015 01:00 PM

ஐஎஸ்எல் கோலாகலமாக தொடங்கியது: 3-2 என்ற கணக்கில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2வது சீசன் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி, சென்னையின் எப்சி, டெல்லி டைனமோஸ், கோவா எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ், புனே சிட்டி, மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

8 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோத வேண்டும். ஒவ்வொரு அணிகளும் 14 லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் அணிகள் டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மோதும். இறுதிப் போட்டியோடு சேர்த்து மொத்தம் 61 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

போட்டியின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நடிகை ஐஸ்வர்யா ராய் அனைவரையும் வரவேற்றார். விழாவுக்கு ஐஎஸ்எல் சேர்மன் நீதா அம்பானி தலைமைவகித்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன், தொழிலதிபர் முகேஷ் அம்பானி ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, கேரள அணியின் உரிமையார் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து 8 அணிகளின் கொடிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

விழாவில் முதலில் நமது பாரம்பரிய நடனமான பரத நாட்டியம் நடந்தது. இதையடுத்து, கேரளாவின் பாரம்பரிய நடனம் நடந்தது. இதைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகைகள் அலியா பட் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களுடன் ஜஸ்வர்யா ராய், அலியா பட் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர்.

ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்தில் இடம்பெற்ற இரும்பிலே ஒரு இதயம் முளைக்குது, தூமச்சாலே உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார். நடன நிகழ்ச்சி முடிவில் நடிகர் ரஜினிகாந்த், தொடக்க போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தை மைதானத்தில் காரில் வலம்வந்தபடி கொண்டு வந்து விழா மேடையில் இருந்த நீதா அம்பானியிடம் வழங்கினார்.

இதையடுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது இதைத்தொடர்ந்து போட்டி ஆரம்பமானது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியயான கொல்கத்தா டி அட்லெட்டிகோ-சென்னையின் எப்சி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலேயே மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோலை அடித்தது. அந்த அணியின் போஸ்டிகா, கோல்கீப்பரின் தடுப்பையும் மீறி அற்புதமாக கோல் அடித்தார். 31வது நிமிடத்தில் சென்னை அணி பதிலடி கொடுத்தது. அந்த அணியின் ஜிஜி தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் 1-1 சம நிலை இருந்தது.

2வது பாதியில் கொல்கத்தா அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். 70வது நிமிடத்தில் போஸ்டிகோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். அடுத்த 6 நிமிடத்தில் கொல்கத்தா மீண்டும் ஒரு கோலை அடித்து அசத்தியது. அந்த அணியின் வால்டோ இந்த கோலை அடித்தார். 89வது நிமிடத்தில் சென்னையின் நட்சத்திர வீரர் புளுமர் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. ஆனால் அதன் பின்னர் இரு அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் கொல்கத்தா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த இரு அணிகளும் கடந்த சீசனில் ஆடிய இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்

கோவா எப்.சி-டெல்லி டைனமோஸ்
நேரம்: இரவு 7 மணி
இடம்: கோவா
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x