Published : 28 Feb 2015 09:23 AM
Last Updated : 28 Feb 2015 09:23 AM

எளிய இலக்கை போராடி எட்டி ஆஸி.யை வென்றது நியூஸி.

நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டியில், நியூஸிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் தடுமாறி வெற்றி பெற்றுள்ளது.

151 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டிய நியூஸி. அணி, துவக்க வீரர்கள் கப்டில் மற்றும் மெக்கல்லம் மூலமாக அதிரடி துவக்கத்தைப் பெற்றது. சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடுத்தடுத்து எளிதாக வர 3 ஓவர்களில் 39 ரன்கள் குவிக்கப்பட்டன.

4-வது ஓவரில் கப்டில் ஆட்டமிழந்தாலும், மெக்கல்லம் தனது விளாசலை விடவில்லை. 5 ஓவர்களில் நியூஸி. 50 ரன்கள் சேர்க்க, 7-வது ஓவரில் மெக்கல்லம் 21 பந்துகளில் அரை சதம தொட்டார்.

ஆனால் அடுத்த ஓவரிலேயே அவர் கம்மின்ஸ் பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து ஆடிய டெய்லர், மற்றும் எல்லியட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் சட்டென எதிர்பாரத கட்டத்திற்கு திரும்பியது. 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து 131 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலைக்கு நியூஸி. அணியை ஆண்டர்சன் - வில்லியம்சன் ஜோடி எடுத்துச் சென்றது.

ஆண்டர்சன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அடுத்து ஆட வந்த ரோஞ்சி, தான் சந்தித்த இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். ஆனால் அதற்குப் பின் ரன் ஏதும் சேர்க்காத ரோஞ்சி, ஸ்டார்க்கின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வெட்டோரி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 3 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவையாயிருந்தது. ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரில் வில்லியம்சன் ஒரு ரன் எடுக்க, மில்னே, சவுத்தி இருவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப நியூஸி. தோல்வியின் விளிம்புக்குச் சென்றது.

ஒரு விக்கெட் எடுத்தால் ஆஸி.க்கு வெற்றி, 6 ரன்கள் எடுத்தால் நியூஸி.க்கு வெற்றி என்ற நிலையில், கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை வில்லியம்சன் சிக்ஸருக்கு விரட்டி, நியூஸிலாந்தை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

வெகு சிறப்பாக பந்துவீசி ஆஸி.யை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்ற ஸ்டார்க், 9 ஓவர்கள் வீசி, 28 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருந்தன. 2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற நிலையில் சவுத்தீ வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை ஃபின்ச் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அடுத்து சற்று நிதானித்த ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் சேர்ப்பு வேகத்தை குறைத்துக் கொண்டனர். ஆனால் 13-வது ஓவரின் கடைசி பந்திலும், அடுத்த ஓவரின் முதல் பந்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து ஆஸ்திரேலியா மீளவே இல்லை.

தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ 32.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா எடுத்தது.

நியூஸிலாந்து வேகப் பந்துவீச்சாளர் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி நிலை குலைந்தது. சவுத்தி, விட்டோரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹாடின் 43 ரன்களை சேர்த்தார். வார்னர் 34 ரன்களும், வாட்சன் 23 ரன்களும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x