Published : 01 Sep 2014 02:31 PM
Last Updated : 01 Sep 2014 02:31 PM

உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இழப்பது பிரச்சினையல்ல, உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி தழுவி முதலிடத்தை இழந்தது ஆஸ்திரேலியா.

இதன் மூலம் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்ட இந்திய அணி இப்போது முதலிடத்தில் தனியான அணியாகத் திகழ்கிறது. ஆஸ்திரேலியா 4ஆம் இடத்திற்குச் சரிந்தது. தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

ஹராரேயில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தர்மசங்கடமான தோல்வியைத் தழுவியது.

கேப்டன் மைக்கேல் கிளார்க் மட்டுமே தனது காயத்திற்கு எதிராக போராடி 68 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஹேடின் 49 ரன்களையும், கட்டிங் 26 ரன்களையும் எடுக்க 209 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 106/5 என்ற நிலையிலிருந்து சிகும்பரா (52 நாட் அவுட்), உத்சேயா (30 நாட் அவுட்) ஆகியோரது அபாரமான பேட்டிங்கினால் 48 ஓவர்களில் 211/7 என்று வெற்றி பெற்றது.

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியாவை வென்ற பிறகு சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது ஜிம்பாப்வே.

தரவரிசையில் 10ஆம் இடத்தில் உள்ள ஒரு அணி முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை அதன் 1ஆம் இடத்திலிருந்து கீழே தள்ளியது.

ஜிம்பாப்வேயின் ஸ்பின் பந்து வீச்சிற்கு எதிராக ஆஸ்திரேலியா பேட்டிங் திறன் அம்பலமானது. ஸ்பின்னர்கள் 36 ஓவர்களில் 117 ரன்களை விட்டுக் கொடுத்து 6 ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

60 பந்துகளில் 44 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் வெற்றிக்கு இட்டுச் சென்ற சிகும்பராவை ரன் அவுட் செய்ய வேண்டிய எளிதான வாய்ப்பை மிட்செல் ஸ்டார்க் தனது மோசமான த்ரோவினால் பாழ் செய்தார்.

மேலும் ஜேம்ஸ் ஃபாக்னர், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் கடைசியில் நோ-பால், வைடு என்று வீச வெற்றி வாய்ப்பு பறிபோனது.

மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக வெளியேறினாலும் கடைசியில் களமிறங்கி அவரது நோக்கத்தைப் பறைசாற்றினார். மேலும் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா சொதப்பி வரும்போது மீண்டும் பீல்டிங்கில் களமிறங்கி காயத்துடன் 47வது ஓவரை வீசவும் செய்தார்.

கிளார்க் இறங்கியவுடன் தீவிரம் சூடு பிடிக்க 100/2 என்று இருந்த ஜிம்பாவே 106/5 என்று சரிவு கண்டது.

செவ்வாயன்று தென் ஆப்பிரிக்காவை வென்று ஆஸ்திரேலியா இறுதிக்கு முன்னேற வேண்டும். ஜிம்பாப்வே அணியில் உத்சேயா அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹேட்ரிக் எடுத்தார். அன்றும் தென் ஆப்பிரிக்காவை 231 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது ஜிம்பாப்வே ஆனால் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை எதிர்கொண்டு வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில் உலகக் கோப்பையே இலக்கு தரநிலை பற்றி அதிகம் கவலையில்லை என்று கூறிய மைக்கேல் கிளார்க் அணி ஜிம்பாப்வேயிடம் வரலாறு காணாத தோல்வி கண்டது பயிற்சியாளர் டேரன் லீ மேன் உட்பட பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x