Last Updated : 19 Dec, 2014 07:02 PM

 

Published : 19 Dec 2014 07:02 PM
Last Updated : 19 Dec 2014 07:02 PM

உலக பேட்மிண்டன் தொடர்: த்ரில்லர் ஆட்டத்தில் சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்

துபாயில் நடைபெறும் BWF சூப்பர் சீரிஸ் ஃபைனல் பேட்மிண்டன் தொடரில் கொரியாவின் பே இயான் ஜூ என்பவரை 15-21, 21-7, 21-17 என்ற செட்களில் வீழ்த்தி இந்திய நட்சத்திரம் சாய்னா நெவால் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

முதல் செட்டில் 15-21 என்று தோல்வியடைந்த சாய்னா அதன் பிறகு வலைக்கு அருகே வந்து தாக்குதல் ஆட்டத்தை காண்பித்தார்.

முதல் செட்டில் ஒரு நேரத்தில் சாய்னா 10-4 என்றும் பிறகு 14-14 என்றும் சமனிலையிலும் இருந்தார். ஆனால் சாய்னாவை நிறைய தவறுகள் செய்ய கொரிய வீராங்கனை தூண்டியதால் முதல் செட் சாய்னாவுக்கு தோல்வியாக அமைந்தது.

2-வது கேமில் சாய்னா 6-2 என்று தொடக்கத்தில் முன்னிலை பெற்றார். சாய்னா இந்த நிலையில் ஸ்மாஷ் ஷாட்களை தவிர்த்தார். ஆனால் அதே வேளையில் இயான் ஜூ அபாரமான சில ஸ்மேஷ்களை ஆடி 6-6 என்று சமன் செய்தார்.

ஆனால் அதன் பிறகு ஆதிக்கம் செலுத்த நினைத்த கொரிய வீராங்கனை நிறைய தவறுகளைச் செய்ய சாய்னா 5 தொடர் புள்ளிகளை வென்று 11-6 என்று முன்னிலை பெற்றார்.

12-6 என்ற நிலையில் ஆட்டம் கடும் சவாலாக அமைந்தது. இருவரும் ஒரே ரேலியில் 32 ஷாட்களை ஆடினர். கடைசியில் கொரிய வீராங்கனை தவறிழைத்தார். தொடர்ந்து சாய்னா சில அபாரமான திறமைகளை வெளிப்படுத்த அந்த செட்டை சாய்னா 21-7 என்று வென்றார்.

3-வது கேமில் கொரிய வீராங்கனை 5-1 என்று முன்னிலை பெற்றிருந்தார். பிறகுதான் சாய்னா தனது பவர் ஸ்மேஷ் ஷாட்களை ஆடத் தொடங்கினார். பிரேக் சமயத்திலும் கூட கொரிய வீராங்கனையே 11-10 என்று முன்னிலை பெற்றிருந்தார்.

பிரேக்கிற்குப் பிறகு நெட் அருகே வந்து அபாரமான ஆட்டத்தை சாய்னா வெளிப்படுத்தி 17-13 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு சாய்னா 2 புள்ளிகளை வெல்ல கொரிய வீராங்கனை 3 புள்ளிகளை வென்றார், ஸ்கோர் 19-16 என்று நெருங்கியது.

ஆனால் இரண்டு அபாரமான ஸ்மேஷ்களை சாய்னா அள்ளித் தெளிக்க கொரிய வீராங்கனையின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x